அக்கரைப்பற்றில் சமுர்த்தி உத்தியோகத்தர், கப்பம் கேட்டு தாக்கியதாக, விவசாய அமைப்பின் தலைவர் பொலிஸில் முறைப்பாடு

🕔 February 29, 2020

க்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஐ.எல்.எச். வஹாப் என்பவர், கப்பம் கோரி தன்னைத் தாக்கியதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஏ.சி. ஹபீபுர் ரஹ்மான் என்பவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் அக்கரைப்பற்று நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சமுர்த்தி உத்தியோகத்தர் – அவரின் அலுவலத்தில் வியாழக்கிழமை காலை கடமைக்காக கையொப்பமிட்டு விட்டு, எந்தவொரு மேலதிகாரிக்கும் அறிவிக்காமல் சட்ட விரோதமாக வெளியில் வந்த நிலையிலேயே, தன் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவிக்கின்றார்.

“விவசாயப் பணியின் நிமிர்த்தம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று காரியாலயத்துக்கு வியாழக்கிழமையன்று நான் சென்றிருந்தேன். அப்போது காலை 9.00 மணியளவில் சமுர்த்தி உத்தியோகத்தர் வஹாப் அங்கு வந்து என்னிடம் ஒரு தொகைப் பணம் கேட்டு வாய்ச் சண்டையில் ஈடுபட்டார். நான் அவ்வாறு வழங்க முடியாது என்றேன். ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தாக்கத் தொடங்கினார். எனவே அங்கிருந்து தப்பிச் சென்று, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் அந்த சம்வம் குறித்து நான் முறைப்பாடு செய்தேன்” என்று, ஹபீபுர் ரஹ்மான் கூறினார்.  

“சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராகவும், விவசாய அமைச்சரின் இணைப்பாளராகவும் தான் பதவி வகிப்பதாக என்னிடம் கூறிய மேற்படி சமுர்த்தி உத்தியோகதர் வஹாப்; எங்கள் விவசாய அமைப்பிலிருந்து அவருக்கு சில லட்சம் ரூபாய் பணத்தை நிதியாக வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக என்னை வற்புறுத்தி வந்தார். தான் சார்ந்த கட்சியின் செலவுக்காகவே இந்தப் பணத்தை கேட்பதாகவும் அவர் கூறினார். ஆனாலும் அவ்வாறு எவ்வித பணமும் வழங்க முடியாது என்று நான் உறுதியாகத் தெரிவித்த போதே, அவர் என்னை வியாழக்கிழமையன்று தாக்கினார்” என்றும் விவசாய அமைப்பின் தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி சமுர்த்தி உத்தியோகத்தர் வஹாப் என்பவர் சம்பவ தினமன்று (27ஆம் திகதி)  காலை 08.08 மணிக்கு கடமைக்குச் சமூகமளித்துள்ளதாக, அலுவலக வரவுப் புத்தகத்தில் அவரின் கையொப்பத்துடன் பதிவாகியுள்ளது.

மேலும், அவர் கடமை நேரத்தில் அலுவலகத்திலிருந்து வெளியில் சென்றமைக்கான குறிப்புகள் எவையும் எந்தவொரு பதிவுப் புத்தகத்திலும் காணப்படவில்லை.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று காரியாலய வளாகத்தினுள் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களும், அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் பலரும் சாட்சியாக இருந்துள்ளனர்.

இதேவேளை, சமுர்த்தி உத்தியோகத்தர் வஹாப் என்பவர் தன்னிடம் கப்பம் கேட்டு மிரட்டியமை மற்றும் கடமை நேரத்தில் சட்டவிரோதமாக வெளியில் வந்து தன்னைத் தாக்கியமை தொடர்பில் ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தாக்குதலுக்குள்ளான விவசாய அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்