இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்: கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப் குறித்த மறுவாசிப்பு

🕔 October 23, 2015

Articlre - 28

(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 67 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இதனையொட்டி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், அறசறிவியல் துறை விரிவுரையாளர் எம்.எம். பாஸில் எழுதிய இக்கட்டுரை வெளியிடப்படுகிறது)

அறிமுகம்

லகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான டுழபெகநடடழற என்பவரால் எழுதப்பட்ட ‘அறிவுஞானம்’ எனும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மேற்கோளுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கப்படுகின்றது. அம்மேற்கோள் ‘சிறந்த மனிதர்களின் வாழ்க்கையை நாம் நினைவூட்டுவது நாம் எமது வாழ்வில் உயர்ந்து நிற்க வழிவகுக்கும்’ என்பதாகும். இந்த உணர்ச்சி பூர்வமான கருத்தை அஷ்ரஃபில் எம்மால் பார்க்க முடிகின்றது. இதன்படி இக்கட்டுரை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை மிகச் சுருக்கமாக ஆராய்வதுடன் இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்த மறுவாசிப்பாகவும் அமைகின்றது.

முஸ்லிம் கல்வி

கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டனர். 1902இல் இலங்கையில் கல்வி கற்ற முஸ்லிம்களாக வெறும் 119 பேர் மட்டுமே இருந்தனர். பேராசிரியர் விஷ்வ வர்ணபால குறிப்பிடுவதன்படி 1920களில் முஸ்லிம்கள் மத்தியில் செயற்பட்ட சிறந்ததொரு கல்வியியலாளராக டி.பி. ஜாயா விளங்கினார். அவர் அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களின் போது முஸ்லிம்களின் நலன்களுக்காக வாதாடியதுடன் நாட்டின் கல்விக் கொள்கைகளுக்குப் பங்களிப்புச் செய்து இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கான பாதையில் முஸ்லிம்களையும் பங்குதாரர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருந்தார்.

டி.பி.ஜாயா அவர்களின் முயற்சியால் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் அதிபராகவும் அவர் பணியாற்றினார். ஆரம்பத்தில் இப்பாடசாலை வெறுமனே 6 ஆசிரியர்கள், 59 மாணவர்களுடன் இயங்கத் தொடங்கியது. அப்போது இப்பாடசாலையில் கல்வி கற்பதற்கு பொருத்தமான சூழல் காணப்படவில்லை. பற்றைகள் நிறைந்த காடு போல இவ்வளாகம் தென்பட்டதுடன் தளபாடப் பற்றாக்குறை, போதிய கட்டிடங்கள் இன்மை, தங்குமிட வசதி மற்றும் சமூக விரோத செயல்கள் என்பனவும் மலிந்து காணப்பட்டன. இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வி முறையை ஏற்படுத்த ஜாயா மிகவும் பாடுபட்டார். இவ்வாறான கல்வியூட்டலே முஸ்லிம்கள் மத்தியில் அரசியல், சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் கருதினார். எனினும் இவரது காலத்தில் (1921-1948) குறைந்தளவிலேயே கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டது.

பேராசிரியர் ஐவர் ஜெனிங்ஸின் (இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தர்) அறிக்கையின்படி 1927இல் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட 315 மாணவர்களுள் மூன்று மாணவர்களே முஸ்லிம்களாவர். அதேபோல 1942இல் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 904 மொத்த மாணவர்களுள் 25 பேர் முஸ்லிம் மாணவர்கள் என்பதுடன் அது பின்னர் படிப்படியாக அதிகரித்து 1946இல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 1302 பேரில் முஸ்லிம் மாணவர்கள் 37 பேர் என்ற நிலைக்கு மாற்றமுற்றது. இவ்வாறு முஸ்லிம் மாணவர்களின் தொகை அதிகரித்து வந்தபோதும் மொத்த மாணவர் தொகையுடன் ஒப்பிடும்போது அதன் விகிதாசாரம் மிகக் குறைவாகும். 1927-1947 வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர் அனுமதி 185 வீதத்தால் அதிகரித்த போதும் முஸ்லிம்களின் உள்நுளைவு 800 வீதத்தால் அதிகரித்தது.

ஏ.எம்.ஏ. அஸீஸ்

முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றிய பிறிதொரு ஆளுமை ஏ.எம்.ஏ.அஸீஸ் ஆவார். இவர் 1945இல் கல்முனையின் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். இவர் கல்முனை முஸ்லிம் கல்விச் சமூகத்தை (Kalmunai Muslim Educational Society) உருவாக்கி அதன்மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு உதவி செய்தார். 1948இல் அஸீஸ் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் ஜாயாவைப் பின்பற்றி தமது கல்விப் பங்களிப்பினை இச்சமூகத்திற்கு ஆற்றினார். இவர் பற்றிக் குறிப்பிடும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் (1995) ‘முஸ்லிம்களின் கல்வி எனும் வைரத்தை ஜாயா தோண்டி எடுத்தார். அஸீஸ் அதனைப் பட்டை தீட்டினார்’ என்கிறார்.

சித்திலெப்பை, டி.பி. ஜாயா, அஸீஸ் போன்றோருக்கு வேறு வேறு நோக்கங்கள் இருந்தன. ஆனால் எல்லோரும் அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் இணைத்தவாறே கல்வி (Islamization of knowledge) இடம்பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தனர்.

அஸீஸ் முஸ்லிம் சிறுவர்களின் கல்வி, பெண்களின் கல்வி தொடர்பாக அதிக அக்கறை செலுத்தியதுடன் ஏழை மாணவர்களின் கல்வி இடைவிலகல் தொடர்பாகவும் கவனம் செலுத்தினார். டி.பி. ஜாயா Islamic Foundation என்ற அமைப்பைத் தாபித்தது போல அஸீஸ் Philosophical Foundation (Alama Iqbal) என்ற அமைப்பைத் தாபித்து கல்வி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

டொக்டர். பதியுதீன் மஹ்மூத்

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியானது அவர்கள் அரசியலில் முக்கிய பதவிகளைப் பெறவும் காரணமாகியது. அத்தகையதொரு பின்புலத்திலிருந்து வந்தவரே டொக்டர். பதியுதீன் மஹ்மூத் அவர்கள். அவர் 1960இல் கல்வி மற்றும் ஒளிபரப்பு அமைச்சராகப் பணியாற்றியதுடன் 1970இல் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார். அஸீஸ் அவர்கள் தமிழில் கல்வி கற்க வேண்டும் எனக்கூறியவேளை பதியுதீன் மஹ்மூத் முஸ்லிம்கள் சிங்களத்தில் கல்வி கற்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தார். பின்னர் இக்கருத்தினை அவர் தவறு என ஒத்துக்கொண்டதாகும் வரலாறு குறிப்பிடுகின்றது. இவருடன் இணைந்தவகையில் டொக்டர். எம்.சி.எம்.கலீல் மற்றும் சேர்.ராஸிக் பரீட் ஆகியோரும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றினர். எனினும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியானது குறிப்பிடும்படியான முன்னேற்றங்கள் எதனையும் காணவில்லை.

கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்

இந்தப் பின்னணியில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றிய தலைவர்களுள் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்குப் பிரதான இடமுண்டு. அரசியல், சட்டம், கல்வி, இலக்கியம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கிய அவர், முஸ்லிம்களின் கல்வி தொடர்பாக கூடுதல் அக்கறை எடுத்ததுடன் முஸ்லிம்களின் உயர் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தினை ஏற்படுத்தினார். அவரது அயராத முயற்சியினால் இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால கல்வி நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கான அரசியல் தலைமைத்துவத்தினையும் அவர் தொடர்ந்து வழங்கிவந்தார்.

அஷ்ரபின் கல்விப் பங்களிப்புக்கும் அவரது அரசியலுக்கும் மிக நெருக்கமான தொடர்பிருக்கின்றது. குறிப்பாக 1980களில் உக்கிரமடைந்த தமிழர் விடுதலைப் போராட்டமும் ஆயுதக் குழுக்களின் தோற்றமும் இலங்கை இனமோதலில் ஒரு புதிய நிலைமாற்றத்தைக் காட்டியதுடன் இக்காலப்பகுதியில் தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கிடையிலான இன ஐக்கியம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தப் புறநிலைச் சூழல்தான் அஷ்ரஃபினை தமிழ் தேசியத்திலிருந்து விலகி முஸ்லிம் தேசியத்திற்கான அரசியல் தளத்தினை உருவாக்கத் தூண்டியிருந்தது. தமிழ்-முஸ்லிம் இன ஐக்கியத்தினை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயற்பட்ட அவர், தனது சமூகத்திற்கான புதிய பாதையினைத் தேர்ந்தெடுப்பதற்கு திணிக்கப்பட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கப் பின்னணி

இக்காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியினை (1981) ஆரம்பித்தது. 1986 ஒக்டோபரில் கிழக்குப் பல்கலைக்கழகம் என இக்கல்லூரி பெயர் மாற்றப்பட்டது. 1986.09.25ஆம் திகதியிடப்பட்ட பல்கலைக்கழக கட்டளைச் சட்டத்தின்படி அதன் அமைவிடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பாக இருக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இன ஐக்கியத்தினை முதன்மையாகக் கொண்டே இவ்விட அமைவிடம் நிர்ணயம்செய்யப்பட்டது.

ஆனால் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதற்கு மாற்றமாக, சட்டத்திற்குப் புறம்பாக விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்கள் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டதனால் இப்பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இன ஐக்கியம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது. எனினும் வர்த்தக முகாமைத்துவ, கலைப் பீடங்கள் மட்டக்களப்பிலே இயங்கின.

இந்நிலையில் 1986.02.06ஆம் திகதியன்று உயர்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கமைய இப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் (Multi Campus) இடம்பெறக் கூடியவகையில் அமையப்பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைவாகவே இப்பல்கலைக்கழம் கிழக்குப் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இவ்விடயம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது மூலோபாயத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதய கிழக்குப் பல்கலைக்கழகம் 1981இல் பல்கலைக்கழகக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு இன ஐக்கியம் ஏற்படுத்துவதற்கு ஏற்ப மூன்று இன மாணவர்களும் உள்வாங்கப்பட்டதுடன் ஆங்கிலம் அதன் போதனா மொழியாக்கப்பட்டது. ஆனால் 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்னர் சிங்கள மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பின்மையால் அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களிற்கு நிரந்தரமாக இடமாற்றப்பட்டதுடன் இதன் பின்னரான காலப்பகுதியில் சிங்கள் மாணவர்களை இப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வந்தாறுமூலை வளாகம் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பிடும்படியானளவு பாதகமாக அமையாததால் அவர்கள் தொடர்ந்தும் அங்கு கல்வி கற்றனர்.

எனினும் 1990களுக்குப் பின்னர் தீவிரமாக அதிகரித்த இனரீதியான பிளவு வந்தாறுமூலையில் இருந்த முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தினை ஏற்படுத்தியது. இக்காலப் பகுதியில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டமை, கடத்தப்பட்டமை போன்றன முஸ்லிம்கள் மத்தியிலான பாதுகாப்பின்மையை உணர்த்தியது. இதனால் இப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களிற்கு இடமாற்றப்பட்டனர்.

இடமாற்றம் பெற்றுச் சென்ற முஸ்லிம் மாணவர்கள் பல்வேறு அளெகரியங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய முஸ்லிம் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என்போர் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகினர். இவ்வச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமது அலுவல்களுக்குச் செல்வதற்கு அச்சப்பட்டனர். இப் பல்கலைக்கழக நியமனங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதில் இருந்தும் முஸ்லிம் கல்வியியலாளர்கள் பலர் ஒதுங்கிக்கொண்டனர்.

அதேவேளை 1995இல் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் இயங்கி வந்த பிரதான பீடங்களில் கல்வியினைத் தொடர்வதிலும் முஸ்லிம் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அங்கும் முஸ்லிம் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கில் மாணவர் போராட்டம் எழுச்சியடைந்தது. இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பல மாணவர்கள் இணைந்து முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் தலைமையின் கீழ் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அக்கோரிக்கைகளுள் எல்லா இனத்தவர்களும் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடக்கூடிய இடத்தில் பல்கலைக்கழகம் அல்லது அதன் பீடங்கள் அமைய வேண்டும் எனக் குறுpப்பிடப்பட்டதுடன் இன ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு அது இன்றியமையாதது என்ற விடயமும் எடுத்துக்காட்டப்பட்டது.

நெருக்கடி நிறைந்திருந்த இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஒப்பீட்டு ரீதியாக குறைந்த ஆபத்துமிக்க பிரதேசமாக அம்பாரை மாவட்டமே காணப்பட்டது. இதனால் இன ஐக்கியத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம்கள் உட்பட ஏனைய இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் சுதந்திரமாகக் கல்வி கற்கக் கூடிய வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் அம்பாரையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்போது முஸ்லிம் மாணவர்கள் தற்காலிக இடமாற்றத்தை எதிர்த்து, சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று தங்களுக்கும் நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என கோரி நின்றனர். அவ்வாறின்றி கிழக்குப் பல்கலைக்கழகத்திலேயே தமது கல்வி நடவடிக்கையினை தொடரவேண்டும் என்றால் சிங்கள மாணவர்களும் அங்கு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இவையனைத்தும் சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் அம்பாரை மாவட்டத்தில் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் முஸ்லிம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அவர்களது உயர் கல்விக்கான போராட்டம் பின்வரும் மூன்று பதிலீட்டுக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை: அம்பாரை மாவட்டத்தில் பீடங்களை அமைத்துத்தரல் / மாணவர்களை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றுதல் /அம்பாரை மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தரல் என்பனவாகும்.

புதிய பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான அரசியல் தலைமைத்துவம்

இத்தகையதொரு பின்புலச் சூழ்நிலையிலேயே அஷ்ரஃபின் தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கப் பிரவாகம் ஆரம்பிக்கின்றது. முதலிரு கோரிக்கைகளும் தமது சமூகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது அல்ல எனத்தென்பட்ட நிலையில் புதிய பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான அரசியல் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு அஷ்ரஃப் முற்பட்டார்.

1980களுக்குப் பின்னரான காலம் இலங்கை முஸ்லிம் அரசியலின் நெருக்கடி நிறைந்த காலமாயினும் 1994இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியது. பெருவாரியான கிழக்கு முஸ்லிம்கள் அஷ்ரஃபின் அரசியல் தலைமைத்துவத்தினை ஏற்று அங்கீகரித்தனர். அஷ்ரஃப் ஆட்சியினைத் தீர்மானிக்கும் மக்கள் ஆதரவினைப் பெற்றுக்கொண்டார். இதன்படி 1994இல் உருவான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அஷ்ரஃப் முக்கியமான பாத்திரத்தினை எடுத்ததுடன் ஜனாதிபதி சந்திரிகாவுடன் நெருக்கமான அரசியல் உறவுகளையும் வளர்த்துக் கொண்டார். அரசியல் ரீதியாக இருந்த இச்சாதக சூழ்நிலை அஷ்ரஃப் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் முஸ்லிம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு முடிவினைப் பெற்றுக்கொடுக்கும் கைங்கரியத்தில் அஷ்ரஃப் தன்னை இணைத்துக் கொண்டதுடன் தனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி புதிய பல்கலைக்கழகம் ஒன்றினை அம்பாரையில் அமைப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார்.

இப் புதிய பல்கலைக்கழக உருவாக்கச் சிந்தனை அஷ்ரஃபுக்கு சூழ்நிலைவயப்பட்டதாக அன்றி அவரது தூரநோக்குள்ள சமூக அரசியல் பார்வையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்றிருந்தது. குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதென்பது தமது இன விகிதாசாரத்தை விடக் குறைவான இருந்ததுடன் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடும்போதும் அது மிக மிகக் குறைவானதாக விளங்கியது. இந்நிலையினைப் போக்கி முஸ்லிம்களைக் கல்வியியல் ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதில் அஷ்ரஃப் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதனை அவரது ஆரம்பகால உரைகள் பலவற்றிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்படி அஷ்ரஃபின் அரசியல் தலைமைத்துத்துடன் 1995 ஒக்டோபர் 23இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 33 இடம்பெயர்ந்த மாணவர்களுடன் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் கட்டிடத்ததில் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த இக்கல்லூரி, கலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களை உள்ளடக்கியிருந்தது. பின்னர் தேசியப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக அரசறிவியல் துறை பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனையில் இயங்கிவந்த இப்பல்கலைக்கழகமானது 1998இல் ஒலுவில் வளாகத்திற்கு இடமாற்றப்பட்டது.

இலங்கையின் உயர் கல்வி வளர்ச்சியில் உன்னதாமானதொரு இடத்தினைப் பெற்றிருக்கும் இப்பல்கலைக்கழகமானது தற்சமயம் கலை கலாசார பீடம், முகாமைத்துவ வர்த்தக பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம், பொறியியல் பீடம் ஆகிய ஐந்து பீடங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்து வருகைதரும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் தமது கல்வி நடவடிக்கையினைத் தொடர்ந்துவருவதுடன் அன்மைக்காலத்தில் சர்வதேச மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை பல்தன்மையினைப் பிரதிபலிக்கும் கல்விசார் உழியர் தொகுதி, நிர்வாக ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என இப்பல்கலைக்கழக சமூகம் விரிவாக்கம் பெற்றுள்ளது.

அஷ்ரஃபின் பல்கலைக்கழக உருவாக்கக் கனவு தனது சமூகத்தின் நலனுடன் பெருமளவு பின்னிப்பிணைந்திருந்த போதிலும் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கம் இனத்துவ ரீதியிலானதாக இருந்து விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்கின்றார். அதன் காரணமாகவே அஷ்ரஃப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக உருவாக்கினார். அவர் அரசியலில் உச்சத்தினை அடைந்திருந்த போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் மாணவர்களுடன் தமிழ் மாணவர்களையும் இணைத்து கல்வி நடவடிக்கையினைத் தொடர்ந்ததனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தற்சமயம் பெரும்பான்மையின சிங்கள மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டு தேசியப் பல்கலைக்கழகமொன்றின் அனைத்துக் குணாம்சங்களும் பொருந்தியதாக தென்கிழக்குப் பல்கலைக்கழம் மாற்றமுற்றுள்ளது. அஷ்ரஃபின் கனவும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நாட்டினதும் பிராந்தியத்தினதும் தேவையினைக் கருத்திற்கொண்டு B.A, BBA, B.Sc, B.Com, B.Sc. MIT, B.Sc.ENG போன்ற இளமாணிப் பட்டங்களை வழங்கிவருவதுடன் முதுமாணி, முதுதத்துவமாணி, சான்றிதழ், டிப்ளோமா என பல பாடநெறிகளும் இப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. மேலும் நவீன கலைத்திட்ட மறுசீரமைப்புக்கிணங்க இஸ்லாமிய வங்கியற் துறை, இஸ்லாமியச் சட்டம், தகவல் தொழில்நுட்பம், பொதுக்கொள்கை, மும்மொழிக்கற்கை, சுற்றுலாத்துறை, நில அளவை போன்ற புதிய கற்கைகளை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளையும் இப்பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.

தற்சமயம் இப்பல்கலைக்கழகம் சுமார் 3400 உள்வாரி மாணவர்களையும் 7500இற்கு மேற்பட்ட வெளிவாரி மாணவர்களையும் இணைத்து கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றது. அன்மைக்காலத்திலிருந்து பட்டப்பின்படிப்புத் துறையில் ஆர்வம் காட்டிவரும் இப்பல்கலைக்கழகமானது ஏறத்தாழ 200இற்கு மேற்பட்ட பட்டப்பின்படிப்பு(MBA, MA, M.Phil, PGD) மாணவர்களையும் உள்ளடக்கியுள்ளது.

உயர் கல்வித்துறையில் புதிய தடம்பதித்திருக்கும் இப்பல்கலைக்கழகம் அதன் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களை நினைவுகூறும் வகையில் அஷ்ரஃப் ஞாபகார்த்த நூலகம் ஒன்றினையும் தாபித்துள்ளது. மிகப் பிரமாண்டமான வகையில் அமையப்பெற்றுள்ள இப்பல்கலைக்கழக நூலகம் ஏறத்தாள 120,000 புத்தகங்களுடன் 275 சஞ்சிகைகளையும் 1200 னுஏனு களையும் உள்ளடக்கியதாக பிராந்தியத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றி வருகின்றது. பெருந்தொகையான மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குத் உதவத்தக்கவகையில் அமையப்பெற்றுள்ள இந்நூலகம் 400 ஆசன இருக்கைகளுடன் மாற்றுத்திறனாளிகள் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கத்தக்கதான வசதிகளையும் கொண்டுவிளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அஷ்ரஃபினால் கட்டமைக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம் அதனது உட்கட்டமைப்பில் என்றுமில்லாதவாறு பாரிய வளர்ச்சிகண்டுள்ளது. நூலகம், முகாமைத்துவ வர்த்தக பீடக் கட்டிடம், காபட் வீதிகள், மாணவர் விடுதிகள், பிரயோக விஞ்ஞானங்கள் பீடத்திற்கான கட்டிடம், விளையாட்டு மைதானம் என நீண்டு செல்லும் பல்கலைக்கழக உட்கட்டுமான விருத்தி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் என்றும் நினைவுகூறத்தக்கதாகும். இவ் உட்கட்டுமான விருத்திற்கு பங்களிப்புச் செய்தவர்களையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

அதன்படி உள்ளக ரீதியாகவும் வெளிநாடுகளிலிருந்தும் இப்பல்கலைக்கழகத்தின் உட்கட்டுமான விருத்திற்கு பல மில்லியன்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக குவைத் அரசாங்கம் இலகு தவணை அடிப்படையில் வழங்கிய கடன் உதவி இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடக் கட்டடம், ஊழியர் விடுதிகள், சுகாதார நிலையம், பொழுதுபோக்கு மையம், மாணவர் விடுதிகள், விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைப்பதற்கு செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை, உயர்கல்வி அமைச்சினது நிதி ஒதுக்கீட்டின் கீழ் 4 புதிய மாணவர் விடுதிகளை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொண்டுவருவதிலும் இப்பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளதுடன் பல்லின மத, கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களை ஒன்றிணைத்து இன நல்லுறவினை ஏற்படுத்துவதிலும் இப்பல்கலைக்கழகம் அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றது.

ஆய்வு ரீதியாக புதிய வளர்ச்சிநிலைகளை எட்டுவதற்கு இப்பல்கலைக்கழகம் ஆரம்பம் முதல் முயற்சிசெய்துவருகின்றது. அதற்கமைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களது ஆய்வு நடவடிக்கைள் வரவேற்கப்படுவதுடன் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கலாசாரம் ஒன்றினை உருவாக்குவதற்காக பல தரப்பட்ட ஆய்வரங்குகளையும் இப்பல்கலைக்கழகம் நடாத்திவருகின்றது.

முடிவுரை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை மையப்படுத்தியதாக இங்கு சுட்டிக்காட்டிய அபிவிருத்திகளும் அடைவுகளும் அதன் ஸ்தாபகர் அஷ்ரஃபின் சிந்தனை ஓட்டத்திலிருந்து பெறப்பட்டதனை யாரும் மறுப்பதற்கில்லை. ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போன்று முஸ்லிம்களின் கல்வி நிலையினை மேம்படுத்துதல், அரச மற்றும் தனியார் துறைகளில் முஸ்லிம்களின் வேலைவாய்ப்பு விகிதத்தினை அதிகரித்தல், இன ஐக்கியத்தினை வளர்த்தல் என்ற அஷ்ரஃபின் உயரிய சிந்தனையின் வெளிப்பாடாகவும் இப்பல்கலைக் கழகத்தினை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.

அறிஞர் சித்திலெப்பையுடன் ஆரம்பிக்கும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சி மிக நீண்ட வரிசை கொண்ட ஆளுமைகளை உள்ளடக்கியது. எனினும் உயர் கல்விக்குப் பங்காற்றியவர்கள் குறிப்பிட்ட சிலரே. அக்குறிப்பிட்ட சிலருள் முதன்மைமிக்கவராக நாம் கலாநிதி எம்.எச்.எம்.அஷ்ரபினைப் பார்க்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டு அவர்களது ஐக்கியம் சிதறுண்டு போனபோது இச்சமூகத்தினை கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்ய அஷ்ரப் எடுத்த முயற்சி தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்துடன் நிறைவேறியிருப்பதிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் முஸ்லிம் உயர் கல்வியின் முன்னோடிகளுள் ஒருவராக அவரை அடையாளப்படுத்துவதில் தவறு இருக்காது என நான் உறுதியாக நம்புகின்றேன். இதற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இப்பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம்பெற்று வெளிவரும் மாணவர்களும் தக்கசான்றாக இருப்பர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்