கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சலீம், சுயவிருப்பில் ஓய்வு

🕔 January 31, 2020

– நூருல் ஹுதா உமர் –

கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். சலீம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் சுயவிருப்பில் ஓய்வு பெறுகிறார்.

இவர் சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்டவர்.

பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்ற இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார்.

அதன்பின் தான் கல்வி கற்ற பாடசாலையான கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராக இடமாற்றம் பெற்று கடமையாற்றினார். இதன் போது இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் தேறி பிரதியதிபராக அதேபாடசாலையில் பதவியுயர்வு பெற்றார்.

இதே காலத்தில் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தி, திருகோணமலையில் 1996ஆம் ஆண்டு உதவி காணி ஆணையாளராக நியமனம் பெற்றார்.

சாய்ந்தமருது பிரதேச வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் இலங்கை நிருவாக சேவை இரண்டிலும் சித்தியெய்திய ஒரேயொரு நபராக இவரே காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதே ஆண்டில் கொழும்பு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் உதவிக் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தபோது சுவிச்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்கான முதல் செயலாளராக 2001/2002ஆம் ஆண்டில் சேவையாற்றி, இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் அத்தியவசிய தேவைகளை சிறந்த முறையில் கையாண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு வரை விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றிய இவர், ஜனாதிபதி செயலகத்திலும் இணைக்கப்பட்டு சேவையைத் தொடர்ந்தார்.

இவர் அரச தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளராகவும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதன் பின்னர், 2007ஆம் அண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.

இந்தக் கலப்பகுதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 2016 முதல், மேலதிக செயலாளராக சட்டம் ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சில் கடமையாற்றியதோ, இறுதிவரை கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிலும் மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்தார். அத்துடன் சிறிது காலம் ஏற்றுமதி சபையின் பதில் தலைவராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவர் பொது நிர்வாகத்துறையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் சிறி ஜயவர்த்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் முதுமானிப்பட்டங்களைப் பெற்று கல்வியில் உயர்நிலையை அடைந்தவர்.

சாய்ந்தமருது மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில், பிரதேச செயலாளராக கடமையாற்றிய காலங்களில் சுனாமிக்குப் பின்னர் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். அந்த வகையில் சாய்ந்தமருதில் சுனாமிக்குப் பின்னர் வொலிவேரியன் என்ற கிராமத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களை அங்கு குடியேற்றி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அரும்பாடுபட்டார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 1000 வீடுகளை அமைப்பதற்கும், அவ்வீடுகளை சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசத்தின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுத்து பல்வேறு நிவாரணங்களையும் மக்களுக்கு கிடைக்கச் செய்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்