பிரதேசவாதத்துடன் செயற்படும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்: அட்டாளைச்சேனையின் கல்வியை திட்டமிட்டு சீரழிக்கின்றாரா?

🕔 January 2, 2020
வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மதுல்லா

– அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். றஹ்மதுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

வளங்கள், நிதிகள் மற்றும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்யும் போது அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளைப் புறக்கணித்து, பிரதேசவாதத்துடன் வலயக் கல்விப் பணிபாளர் செயற்படுவதாகவும் அட்டாளைச்சேனை பாடசாலை சமூகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மதுல்லாவின் சொந்த ஊர் அக்கரைப்பற்று என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பாட ஆசிரியருக்களுக்கான இரண்டு வெற்றிடங்கள் இருக்கின்றபோதும், ஒரு ஆசிரியர் மட்டுமே அங்கு பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், தமது பாடசாலைக்கு இன்னுமொரு விஞ்ஞான பாட ஆசிரியரை வழங்குமாறு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மிக நீண்ட காலமாக, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பாடசாலை சமூகத்தினர் கோரிக்கை விடுத்து வந்த போதும், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அதனைக் கணக்கில் எடுக்கவில்லை.

இதனையடுத்து, தமது பாடசாலையில் நிலவும் விஞ்ஞான பாட ஆசிரியருக்கான வெற்றிடத்தை நிரப்புமாறு கோரிக்கை விடுக்கும் கடிதமொன்றினை, சில மாதங்களுக்கு முன்னர் பதிவுத் தபாலில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். றஹ்மதுல்லாவுக்கு அறபா வித்தியாலய அதிபர் அனுப்பி வைத்தார்.

இந்த செயற்பாடானது தனக்கு சவால் விடும் நடவடிக்கை போலானது என்று கூறிய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், மிக நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பின்னர், இன்னும் சில மாதங்களில் ஓய்வில் செல்லவுள்ள ஆசிரியர் ஒருவரை விஞ்ஞான பாடம் கற்றுக் கொடுப்பதற்காக அறபா வித்தியாலயத்துக்கு அண்மையில் நியமித்திருக்கிறார்.

உடல் நலன் குன்றியுள்ள மேற்படி ஆசிரியரின் வைத்திய காரணங்களின் நிமித்தமே, அவரை அறபா வித்தியாலயத்துக்கு அனுப்புவதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், வழங்கியுள்ள இடமாற்றக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாடத்துக்கான ஆசிரியர் வெற்றிடங்களை விடவும் அதிகளவான ஆசிரியர்களை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பணிக்கு அமர்த்தியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் காணப்படுகின்ற விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் எத்தனை என்றும், ஒவ்வொரு பாடசாலையிலும் கடமையாற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்றும் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அண்மையில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் வழங்கிய பதிலின் அடிப்படையில்; அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாடத்துக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 05 ஆக உள்ள நிலையில், அங்கு குறித்த பாடத்துக்கு 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று அக்கரைப்பற்று அல் முனவ்வறா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாடத்துக்கு 04 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள நிலையில், 07 ஆசிரியர்கள் அங்கு பணியில் உள்ளனர்.

அக்கரைப்பற்று ஆயிஷா பெண்கள் கல்லூரியிலும் 04 விஞ்ஞான பாட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள நிலையில், அந்தப் பாடத்துக்கான 07 ஆசிரியர்கள் அங்கு கடமையாற்றி வருகின்றனர்.

இப்படி அட்டாளைச்சேனை பாடசாலைகளுக்கு உரித்தான ஆசியர்களை வழங்காமல் இழுத்தடித்து வரும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் றஹ்மதுல்லா, அக்கரைப்பற்று பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கும் அதிகமான ஆசிரியர்களை வழங்கி வருகின்றமையானது மிக மோசமான பிரதேசவாதச் செயற்பாடாகும்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தை சீரழிக்கும் உள்நோக்கம், வலயக் கல்விப் பணிப்பாளரின் இந்த நடவடிக்கைகளில் உள்ளனவா என்கிற சந்தேகமும் அட்டாளைச்சேனை பிரதேச கல்விச் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

அவ்வாறு சந்தேகம் எழுவதற்கு காரணம் இல்லாமலுமில்லை.

அது என்ன என்பதை நாளை பார்க்கலாம்.

பாடசாலைகளில் நிலவும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடமும், கடமையாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்