இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்: இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

🕔 December 25, 2019

ந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக, அங்குள்ள 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 17 தலித் மக்கள் உயிரிழந்தனர். உயிரிழப்பிற்கு காரணமான ஜவுளிக்கடை உரிமையாள் சிவசுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய பொலிஸார், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனை கைது செய்தனர்.

இந்த வழக்கில் நாகை திருவள்ளுவன் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இளவேனில் தலைமையில் டிசம்பர் 22 ஆம் திகதி, மேட்டுப்பாளையத்தில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த 3000 தலித் இந்துக்கள் – இஸ்லாம் மதத்திற்கு மாற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தமிழ் புலிகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முத்துக்குமார்; ”சுவர் இடிந்து 17 உயிர்களைக் கொன்ற நபர் நிபந்தனை பினையில் வெளியே வந்துவிட்டார், தாழ்த்தப்பட்ட மக்களின் நீதிக்காக போராடியவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதை கண்டித்தும், தலித் மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதும், ஒடுக்கப்படுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதை எதிர்த்தும், எங்கள் கட்சியைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்கவுள்ளோம்.”

”முதற்கட்டமாக, ஜனவரி 5ஆம் திகதி, கட்சி உறுப்பினர்களான 100 பேர் இஸ்லாமியராக மாற திட்டமிட்டுள்ளோம், இதில் சிலர் சுவர் இடிந்த சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். இதற்கான பெயர் பட்டியலை தயாரித்து வருகிறோம். இந்து மதத்தின் அடையாளத்தால் தலித் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இஸ்லாம் மதத்தை ஏற்று அதன் அடையாளங்களை பெற்றால் அனைவரையும் போல சமமாக தலித்துகளும் நடத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இஸ்லாம் மதத்திற்கு மாறும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறவுள்ளவர்கள் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறுவது பற்றி நடூர் பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில்; ”இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என எங்களை யாரும் வற்புறுத்தவில்லை. சொந்த விருப்பத்தில் சிலரும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் சிலரும் முஸ்லிமாக மாறவுள்ளனர். எந்த மதத்துக்கு மாறினாலும் உயிரிழந்தவர்களை மீட்டுக்கொண்டுவர முடியாது. தலித்துகளையும் சமமாக மதித்து நடத்தும் எண்ணம் அனைவரிடத்திலும் தோன்ற வேண்டும். அதுதான் இங்கே அடிப்படைத் தேவை” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்