ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாட்டார்: சரத் பொன்சேகா தெரிவிப்பு

🕔 December 22, 2019

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தன்னிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தில் இருப்பார் என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிடம் கட்டாயம் கையளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பார்ப்பதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு நேற்று சனிக்கிழமை சென்று திருப்பிய போது, சிறைச்சாலைக்கு வெளியில் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பொன்சேகா இதனைக் கூறியுள்ளார்.

“ நான் எந்த அணியிலும் இல்லை. கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி நாங்கள் ஒரு தேர்தலை எதிர்கொண்டோம். தேர்தலுக்கு தேர்தல் வெவ்வேறு விதமாக செல்ல முடியாது. ரணில் விக்ரமசிங்கவிடம் நான் பேசினேன். மீண்டும் தேர்தலில் நிற்க போவதில்லை என்று அவர் கூறினார். அவரது மனநிலை அப்படியாக இருக்குமாயின் அவர் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்க வேண்டும்” எனவும் சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.

Comments