அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி

🕔 December 19, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்; உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினை அடுத்து, அப் பிரதேச மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம் என்பவர், அங்கு பல்வேறு ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குழுவொன்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் இறங்கியது.

இதற்கிணங்க உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களைத் திரட்டிய மேற்படி சமூக ஆர்வலர்கள் குழுவினர் – அவற்றினை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், லஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமர்ப்பித்து, தமது முறைப்பாடுகளையும் பதிவு செய்தது.

இதனையடுத்து மேற்படி உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசேட அதிகாரி ஒருவரை நியமித்து, அவரின் ஊடாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த உதவித் திட்டப் பணிப்பாளருக்கு, அரசாங்க அதிபர் இடமாற்றம் வழங்கி உத்தரவிட்டார்.

குறித்த இடமாற்றத்துக்கு அமைய, இன்று வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் தனது கடமையைப் பொறுப்பேற்றதாக அறிய முடிகிறது.

கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுப்பு

உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் என்பவருக்கு அனுப்பப்பட்ட இடமாற்றக் கடிதத்தை, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகள் நேற்றைய தினம் அவருக்கு வழங்க முயற்சித்த போதும், அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் மறுத்திருந்தார்.

இதனையடுத்து, பொலிஸார் மூலம் குறித்த இடமாற்றக் கடிதத்தை வழங்குவது குறித்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகள் கலந்தாலோசித்ததாகவும், இதனையடுத்தே தனக்கான இடமாற்றக் கடிதத்தை அஸ்லம் பொறுப்பேற்றதாகவும் பிரதேச செயலக வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.

உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லம் இடமாற்றப்பட்டுள்ள போதும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் தெரியவருகிறது.

தொடர்பான செய்தி: ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்