ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

🕔 December 18, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் பின்னணியிலேயே, அவர் இவ்வாறு இடம்மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவர், வீதி நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியைக் கொண்டு, தனது வயற் காணிக்கு மணல் இட்டு நிரப்பியமை, கூரை அமைப்பதற்கு ஏழைக் குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்ட அரச பணத்தை வற்புறுத்தி மீளப் பெற்று, அதனை இரண்டரை மாதங்களுக்கும் மேலாக, சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த நபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தொடர்ந்தும் பணியில் இருந்தால், அவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு குந்தகம் ஏற்படலாம் என்றும், குறித்த விசாரணைகள் தொடர்பிலான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைஅவர் இல்லாமல் செய்யலாம் என்றும் அஞ்சப்பட்டு வந்த நிலையில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, தனக்கு இவ்வாாறனதொரு இடமாற்றம் வழங்கப்படவுள்ளமையை அறிந்து கொண்ட மேற்படி உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம், தனது சகோதரர் ஒருவருடன் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேற்றைய தினம் சந்தித்து, தான் விரும்பும் ஒரு பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கெஞ்சிக்கு கூத்தாடியதாக அறிய முடிகிறது.

ஆயினும், அதனை பொருட்படுத்தாத அரசாங்க அதிபர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லமுக்கு, அம்பாறை கச்சேரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கியுள்ளார்.

ஏழு வருடங்களுக்கும் மேலாக அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய அஸ்லம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளும், முறைப்பாடுகளும் உள்ளன.

இவர் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிலும் கடந்த வாரம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்