தனித்துவம் என்கிற அதீத பேச்சு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது: பஷீர் சேகுதாவூத் கவலை

🕔 November 19, 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) –

னித்துவம் என்கிற அதீதமான பேச்சு, முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் பிபிசியிடம் கவலை தெரிவித்தார்.

அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, தனிமைப்படாமல் இருப்பதற்குரிய அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மூடுண்ட மனநிலையில், அறிவியல்பூர்வமான அரசியல் பார்வையைக் கொடுக்காத தலைவர்கள், தமிழர்களையும் முஸ்லிம்களையும் உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக மாற்றி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் எடுத்த தீர்மானங்கள் வெற்றியளிக்காதது தொடர்பிலும், சிங்கள மக்களின் தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் கோட்டாபய ராஜபக்ஷ, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றமை குறித்தும், முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் உடன் பிபிசி தமிழ் பேசியபோது, அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழர் விடுதலை இயக்கங்களில் ஒன்றான ‘ஈரோஸ்’ அமைப்பின் மூத்த போராளியான பஷீர் சேகுதாவூத், அந்தக் இயக்கம் ஊடாக 1989ஆம் ஆண்டு நாடாளுமன்றம் சென்றார்.

அதன்பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்ட அவர், அந்தக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமை அந்தஸ்துள்ள தவிசாளர் பதவியை நீண்டகாலம் வகித்துவந்தார்.

ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் ஏற்பாட்ட முரண்பாடு காரணமாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிய பஷீர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் தவிசாளர் பதவியை தற்போது வகிக்கின்றார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பஷீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. இதற்காக முஸ்லிம் சமூகம் சார்பில் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியுடன் இவர் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினையும் செய்து கொண்டது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தமொன்றினை செய்து கொண்ட ஒரே முஸ்லிம் கட்சி ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில், பஷீர் சேகுதாவூத் தரப்பினர் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது வெற்றிபெற்றுள்ள நிலையில், அதுகுறித்தும் பிபிசி உடன் பசீர் பேசினார்.

“கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியானது, இலங்கை அரசியலில் பெரிய மாறுதலையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தும். இதன் மூலம் புதிய யுகம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். தமிழ் பேசும் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் புரிந்துணர்வு வரக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார் பஷீர்.

யாரும் யாரையும் பழிவாங்காத வகையில், குரோத உணர்வுகள் இல்லாத வகையில் மத, இன, மொழி அடிப்படையிலான வேறுபாடுகள் இல்லாத வகையில், புதியதொரு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு இருக்கிறது என்பது தனது நம்பிக்கை. என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் எல்லா மக்களும் சேர்ந்து, கைகோர்த்து வாழ்கின்ற புதியதொரு நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கள மக்களின் மனநிலை

“சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் தங்களுக்குரிய தலைவர் யார் என்பதைத் தனியாகத் தெரிவு செய்கிற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையானது புதிய தலைமுறைக்குள் விரிசலாக வளராமல் எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லா அரசியல்வாதிகளுக்கும், இன – மதத் தலைவர்களுக்கும் உள்ளது.

காலகாலமாக தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்துதான் சிங்களத் தலைவர் ஒருவரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்து வருகின்றனர் என்கிற பெருமையடிப்பு தமிழ்பேசும் மக்களிடம் இருக்கிறது.

ஆனால், அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். பெரும்பான்மையினமாக இருக்கும் மக்கள் நாங்கள், பெரும்பான்மையாக வாக்களித்து, பெரும்பான்மையினத் தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும்” என்கிற எண்ணப்போக்கு 2015ஆம் ஆண்டிலிருந்து சிங்கள மக்களுக்குள் பெருவாரியான எடுப்போடு வளரத் தொடங்கி விட்டது.

அந்த வளர்ச்சிதான் கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றியாகும்.

நாங்கள் இந்த சூழ்நிலையை சரியாகப் பார்த்து, அறிவுபூர்வமான ஓர் அரசியல் நோக்கோடு சிந்தித்து, கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி நிச்சமானது என்பதை, ஏற்கனவே பிரசாரங்களின்போது நாம் கூறிவந்தோம்.

ஆனால், அந்தக் கருத்துக்களை தமிழ் பேசும் மக்களுக்குள் கொண்டு செல்வதற்கான கால அவகாசம் இருக்கவில்லை.

அதேநேரம், மூடுண்ட மனநிலையில், அறிவுபூர்வமான அரசியல் பார்வையைக் கொடுக்காதவர்கள் தலைமை தாங்கி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களிடையே அரசியல் செய்து வந்தனர். அதனால், உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்கும் இயந்திரங்களாக தமிழர்களையும், முஸ்லிம்களையும் அந்தத் தலைவர்கள் மாற்றியிருக்கின்றனர்.

“தனிமைப்பட்டு விட்டோம்”

பெரும்பான்மையான சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதற்குரியதொரு அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.

தமிழ் மக்களோடு வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் இணைந்து வாழ்கிறோம் என்கிற அடிப்படையில், அவர்களோடு சினேக பூர்வமான உறவை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற புதிய அரசியலைச் மேற்கொள்ள வேண்டும்.

அடையாள அரசியலில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது. அடையாளத்தையும் தனித்துவத்தையும் பேணிக் கொண்டு, தனிமைப்படாமல் இருப்பதற்குரிய அரசியலை முஸ்லிம்கள் செய்ய வேண்டும்.

தனித்துவம் என்கிற பேச்சும், முஸ்லிம் தலைவர்களின் அதீதமான உரைகளும் முஸ்லிம் சமூகத்தைத் தனிமைப்படுத்தி விட்டது.

‘நாங்கள் தனிமைப்படுகிறவர்கள் அல்ல, ஆனால் தனித்துவம் பேண விரும்புகிறோம்’ என்கிற செய்தியைச் சொல்வதற்கு முஸ்லிம் சமூகம் தவறி விட்டது.

எனவே, எதிர்வரும் காலங்களில் முஸ்லிம்களாகிய நாங்கள் தனித்துவத்தைப் பேணிய வண்ணம், இலங்கையராக வாழ வேண்டும்.

இலங்கையை சிங்களத் தேசமாகப் பிரகடனப்படுத்தி விடுவதாக, இந்தத் தேர்தல் முடிவுகள் மாறி விடக் கூடாது. அதற்கேற்ற வகையில் முஸ்லிம்கள் தமது அரசியலை மேற்கொள்ள வேண்டும்.

சிங்களம் பேசுகிற மக்களோடு தமிழ் பேசும் முஸ்லிம்கள் நல்லுறவுடன் வாழ்கிறோம் என்கிற செய்தியை எதிர்காலத்தில் சொல்ல வேண்டும். மட்டுமன்றி, இலங்கையர்கள் எனும் நிலைப்பாட்டுடன் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும்.

அதேவேளை, செல்வாக்குள்ள முஸ்லிம் தலைவர்களை சிங்கள மக்களிடையே உருவாக்க வேண்டிய தேவையும் உள்ளது. தெற்கிலே அங்கிகாரம் பெறுகிற, கிழக்கின் முஸ்லிம் தலைவர் ஒருவர் இப்போது அவசியப்படுகிறார்.

இதனை உணர்ந்து எதிர்காலத்தில் வடக்கு – கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வாழ்கிற முஸ்லிம்கள் அறிவு பூர்வமாக அரசியல் செய்கின்ற தலைவர்களை தமக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றும் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்