தனித்துவமும், தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம்

🕔 November 19, 2019

முகம்மது தம்பி மரைக்கார்

சிறுபான்மையினர் தலையை உயர்த்தி மலைப்புடன் பார்க்கின்ற வெற்றியொன்றை ஜனாதிபதி தேர்தலில் பெற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ஷ. கணித ரீதியாக ஓரளவு இந்த வெற்றியை முன்னதாகவே சிலர் கணித்துக் கூறியிருந்தனர். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜனபெரமுன பெற்றுக் கொண்ட 50 லட்சம் வாக்குகளும், அதே தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த சுமார் 15 லட்சம் வாக்குகளும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் போது, அவர் வெற்றி வேட்பாளராகி விடுவார் என்பதே அந்தக் கணக்காகும். ஆனாலும், மிக வெளிப்படையான இந்த உண்மையை சிறுபான்மையினர் தட்டிக்கழித்தனர். அதன் விளைவாக, தனிமைப்பட்டு நிற்கும் வகையிலான தேர்தல் முடிவுவொன்றை தமிழர்களும் முஸ்லிம்களும் பெற்றிருக்கின்றனர்.

முரட்டு அரசியல்

அரசியல் என்பது நாசூக்காகவும் தந்திரோபாயத்துடனும் அணுக வேண்டியதொரு செயற்பாடாகும். சாத்தியமானவற்றைச் சாதித்துக் கொள்ளும் கலையே அரசியல் என்று, அறிஞர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் காய்களை அடித்துக் கனிய வைக்கும் செயற்பாட்டில், சிறுபான்மையினர் குதித்து விட்டார்கள் என்பது புலனாகிறது. நாட்டில் நடந்த யுத்தத்துக்குப் பிறகு, குறிப்பாக ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இலங்கை அரசியலின் ஒழுங்கு முறையில் ஏற்பட்ட மாறுதலுக்கேற்ப தமிழர், முஸ்லிம் சமூகங்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்பதை, நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அப்பட்டமாகக் காட்டி நிற்கிறது.

முன்கூட்டிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை வைத்துக் கொண்டும், ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்புறவு மனநிலையுடனும் மடடுமே, ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற  முடிவுகளை, சிறுபான்மை அரசியல் தலைவர்கள் எடுத்திருந்தனர். கடந்த 10 வருடத்துக்குள் இலங்கையின் அரசியல் ஒழுங்கு முறையில் ஏறபட்டுள்ள சடுதியான மாற்றத்தினையும், அதன் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தினர் தமது அரசியலை எவ்வாறு வடிவமைத்துக் கொள்தல் வேண்டும் என்பதையும் புரிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் இருந்தும், அவற்றினை சிறுபான்மை அரசியல் தலைவர்களில் கணிசமானோர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அலட்சியப்படுத்தியிருந்தனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின வாக்காளர்களின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமையைப் போன்று, இந்தத் தேர்தலிலும் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்து விடலாம் என்று மட்டுமே சிறுபான்மையினர் தரப்பில் யோசிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவை ஓர் அனுபவமாகக் கொண்டு, சிங்களப் பெரும்பான்மை மக்களின் அரசியல் – எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதை, சிறுபான்மையின மக்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள். அல்லது கண்டும் காணாமல் விட்டு விட்டனர்.

தவறிய தலைவர்கள்

மக்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளது. ஆனால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டும் என்பதற்கான கலந்துரையாடல்களிலோ, ஆராய்வுகளிலோ சிறுபான்மை அரசியல் தலைவர்களில் கணிசமானோர் ஈடுபடவில்லை. மஹிந்த அல்லது ராஜபக்ஷ எதிர்ப்பு வாதம் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்புறவு ஆகியவற்றை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு, யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தமிழர், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தீர்மானித்து விட்டனர்.

உதாரணமாக முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார். சஜித் பிரேமதாஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக முதன் முதலில் பிரேரித்தவர் தான்தான் என்றும், அதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தேர்தல் பிரசார மேடைகளில் கூறியிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

மட்டுமன்றி, இந்த நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிக்கப் போவதாகவும், “சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல; அது – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்” என்றும் பிரசார மேடைகளில் ஹக்கீம் பெருமையுடன் கூறிவந்தார்.

சிங்கள மக்களையும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் கோபப்பட வைக்கும் அறிவுப்புகளாக இவை அமையும் என்பதை, மு.கா. தலைவர் ஏன் கவனிக்கத் தவறினார் என்று தெரியவில்லை. ஆனாலும் “இந்த நாட்டில் 74 வீதம் மிகப் பெரும்பான்மையாக நாங்கள் வாழும் போது, இந்த நாட்டுக்கான ஜனாதிபதியை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? அதை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று, நடந்து முடிந்த தேர்தல் முடிவின் மூலம், சிங்கள மக்கள் அடித்துக் கூறியிருக்கின்றனர்.

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு விருப்பமில்லை என்பதை பலரும் அறிவர். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் சஜித் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலொன்றில் களமிறக்கி வெற்றிபெறச் செய்ய முடியாது என்கிற மனநிலை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் – சஜித் பிரேமதாஜஸவைத்தான் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.

இதனால், ஒரு கட்டத்தில் தனது முடிவிலிருந்து ரணில் விக்ரமசிங்க இறங்கி வர வேண்டியிருந்தது. சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு விருப்பமின்றியே ரணில் விக்ரமசிங்க சம்மதித்தார். அதனால், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்ரமசிங்க பெரிதாகத் தலை காட்டவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருக்கும் முக்கியஸ்தர்களான ரணில் விசுவாசிகளும் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக உழைக்கவில்லை என்பதை இப்போது யோசித்தால் புரிந்து கொள்ள முடியும்.

கவனிக்கத் தவறிய சவால்கள்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவரின் கட்சிக்குள்ளும், வெளியிலும் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவால்கள் குறித்தும், அவற்றின் அசுரத்தன்மை பற்றியும் சஜித் பிரேமதாஸ தரப்பு கணப்பிடத் தவறி விட்டதாகவே தெரிகிறது. குறிப்பாக சஜித் மீது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருக்கும் மேட்டுக்குடி முக்கியஸ்தர்கள் கொண்டுள்ள அதிருப்திகளும், சஜித் பிரேமதாஸவின் சாதி அடையாளமும் அவரின் கட்சிக்குள்ளேயே அவருக்குச் சவாலாக இருந்தமையை மறைத்து விட முடியாது.

மறுபுறம் மஹிந்த ராஜபக்ஷ எனும் ஆளுமை குறித்தும், அந்த ஆளுமையின் நிழலில் சிங்கள மக்களின் ஹீரோவாக வளர்த்து விடப்பட்டிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கான ஆதரவு பற்றியும், சஜித் தரப்பு போதியளவு மதிப்பீடு செய்திருக்கவில்லை என்பதையும் இந்தத் தேர்தல் முடிவு மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.

நாட்டில் நிலைவிய யுத்தத்தின் பின்னரும், ஏப்ரல் 21 தாக்குதலின் பிறகும் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிறுத்தி புதிதாகச் சிந்தித்திருந்தால், இந்தத் தேர்தல் முடிவின் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். மஹிந்த தரப்பை முரட்டு அரசியல் மூலம் எதிர்கொள்வதற்குப் பதிலாக, இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாசூக்காகக் கையாண்டிருக்கலாம் என்பதே நேர்மையாகச் சிந்திப்போரின் கருத்தாகும்.

‘சாட்சிக்காரனிடம் சென்று சமாதானம் பேசுவதை விடவும் சண்டைக்காரனிடம் போய் சமாதானம் பேசுவதே நல்லதாகும்’ என்று, நமது முன்னோர்கள் சொன்னதில் மிகப்பெரும் அரசியலும், தந்திரோபாயமும் உள்ளது. ஆனால் தமது பகைவன் என்று, சிறுபான்மை சமூகத்தினர் இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்தத் தேர்தல் காலத்திலாவது சென்று பேசுவதற்கு சிறுபான்மையின அரசியல் தலைவர்கள் முயற்சிக்கவில்லை.

மஹிந்தவின் கசப்பு

இன்னொருபுறம், சிறுபான்மை சமூகங்களின் பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவை இந்தத் தேர்தலில் மஹிந்த தரப்பு கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை மஹிந்த தரப்பு புறக்கணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முஸ்லிம் கட்சிகள் மீது மஹிந்த தரப்பு கொண்டுள்ள கசப்புக் குறித்தும் இங்கு பேச வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் நடந்து கொண்ட விதமே, அந்தக் கட்சிகள் தொடர்பில் மஹிந்த தரப்பு அதிருப்தியும், கசப்பும் கொள்வதற்குக் காரணமாகவும் உள்ளன. குறிப்பாக, முஸ்லிம்களின் கணிசமான ஆதரவைக் கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸ்; 2005, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவற்ற முடிவுகளையே எடுத்திருந்தது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துச் செயற்பட்ட மு.காங்கிரஸ்; அந்தத் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியமைத்ததும், அவரின் அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டது. ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கும் வகையிலான முடிவை மு.காங்கிரஸ் எடுத்தது. அந்தத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று அமைத்த ஆட்சியில் – மீண்டும் மு.காங்கிரஸ் இணைந்து கொண்டது. பின்னர் 2015ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து நின்றது.

தேர்தலின் போது எதிர்ப்பதும், ஆட்சியமைத்த பின்னர் ஒட்டிக் கொள்வதுமான மு.காங்கிரஸின் இந்த அரசியல்தான், அந்தக் கட்சி மீது – மஹிந்த தரப்புக்கு கடுமையான கசப்பை ஏற்படுத்தியதாக அறிய முடிகிறது. அந்த கசப்பின் காரணமாகவே, மு.காங்கிரஸை இந்தத் தேர்தலில் அரவணைத்துக் கொள்வதற்கு மஹிந்த தரப்பு தயங்கியதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் குறித்து பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள மோசமான மனப்பதிவும், அவர்களை மஹிந்த தரப்புக்கு தமது அரசியலில் இணைத்துக் கொள்ள முடியாமல் போனமைக்கான காரணங்களில் பிரதானமானதாகும்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் மத்தியிலும், பெரும்பான்மையான சிங்கள மக்கள் மத்தியிலும் தம்மைப் பற்றி ஏற்பட்டுள்ள மோசமான மனப்பதிவைக் களைவது குறித்து முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இனியாவது கவனம் செலுத்த வேண்டும்.

பிளவு

சிங்கள மக்கள் ஒரு புறமும், சிறுபான்மை சமூகத்தினர் மற்றொரு புறமுமாக பிளவுபட்டு நிற்கின்றனர் என்பதை, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வேறொரு வகையில் கூறினால், சிங்கள மக்களிடமிருந்து விலகி, சிறுபான்மை சமூகத்தினர் தனிமைப்பட்டுப் போயுள்ளனர். இது எந்த வகையிலும் நல்லதல்ல. இதை இப்படியே விட்டால், சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையில் மென்மேலும் குரோதங்கள் வளர்வதற்கே வழிகோலும்.

நாளையோ அல்லது விரைவில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னரோ அமையவிருக்கும் அரசாங்கத்தில், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கொள்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகவே உள்ளன. ஆனால் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள், அதன்போது அரசியலின் நடுத் தெருவில் நிற்க வேண்டிய நிலைவரம் ஏற்படும் என்பதையும மறந்து விடக் கூடாது.

புதிய அரசியல் மாற்றமொன்றுக்கு சிறுபான்மையினர் தயாராகுதல் வேண்டும். ராஜபக்ஷ எதிர்ப்பு வாதத்தினையும், இனத்துவக் கோஷத்தினையும் வைத்துக் கொண்டு, சிறுபான்மையின அரசியலை இனியும் முன்கொண்டு செல்ல முடியாது என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் புரிந்து கொள்ள அவசியமாகும்.

தனித்துவ அரசியல் என்று நினைத்துக் கொண்டு, தனிமைப்படும் அரசியல் செயற்பாடுகளை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளும் போது, சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் மாற்றம் என்பது நிச்சயமாக சாத்தியமாகத் தொடங்கும். 

Comments