முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

🕔 November 13, 2019

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவது, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் இஸ்லாமிய பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான (புர்கா அல்லது நிகாப்) ஆடைகளை அணிந்து வருவதை விடவும், முகம் தெரியும் வகையிலான (ஹிஜாப்) ஆடையை அணிந்து வருவது – அவர்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடையை அணிந்து வருபவர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அதனை நீக்கும் போது, குறித்த வாக்காளரும் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இதனை தவிர்த்துக் கொள்வதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் சட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

ஆணைக்குழுவின் அறிவிப்பு

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடியில் வாக்களர்கள் தங்கள் முகத்தை மறைக்க கூடாதெனவும், முகம் தெளிவாக தெரிய வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

அதற்கமைய முகத்தை மறைக்கும் வகையில் புர்கா, நிகாப், தலைக்கவசம் என்பன அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்