மஹிந்த பாலூட்டி வளர்த்தவர்களே, அளுத்கம கலவரத்தை அரங்கேற்றினர்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு
பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டா, ஒருபோதுமே வெல்லமாட்டார் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அக்குரணையில் இன்று செவ்வாய்கிழமை காலை பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார்.
கட்சியின் முக்கியஸ்தர் அம்ஜாத் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் ஹலீம் ஆகியோரும் உரையாற்றினர்.
அமைச்சர் ரிஷாட் மேலும் கூறுகையில்;
“இனவாத, மதவாத கொள்கையோடு நாட்டை ஆளத்துடிக்கும் வேட்பாளர் ஒருவருக்கு பெரும்பான்மை இன பெளத்தர்கள் ஒருபோதுமே வாக்களிக்க மாட்டார்கள். எனவே இந்த தேர்தலில் எல்லா இனங்களையும் சமமாக மதிக்கும் சஜித் பிரேமதாசாவுக்கே அமோக வாக்குகள் கிடைக்கும். பெளத்தர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் இனவாதிகளை படிப்படியாக அடையாளம் கண்டு வருகின்றனர்.
மஹிந்த அரசாங்கத்தில் அளுத்கம சம்பவத்தை ஒரு சில நாட்களில் அடக்கியதாக பெருமை பேசுகின்றனர். இவர்கள் பாலுட்டிவளர்த்தவர்களே அளுத்கமை கலவரத்தை அரங்கேற்றியதால், அவர்களுக்கு தங்களது சகாக்களை அடக்குவது ஒரு தொலைபேசி அழைப்பிலேயே இலகுவான காரியமாக இருந்தது.
மஹிந்த அரசாங்கத்திலும் மைத்திரி – ரணில் அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டுழியம் நடத்தியவர்கள் மொட்டு இனவாதிகள்தான். எனவே இந்த அரசாங்கத்தில் இனவாதிகளின் அட்டுழியத்தை கட்டுப்படுத்த கொஞ்சநாட்கள் எடுத்தன. இந்த அரசாங்கத்தில் சட்டமும் ஒழுங்கும் பொலிஸும் ஓரளவு நியாயமாக இருப்பதனாலும், நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதனாலும், இனவாதிகளின் செயற்பாடுகள் முடிந்தளவு கட்டுப்படுத்தப்பட்டன .
குற்றம் செயதோர் கைதுசெய்யப்பட்டு அடைக்கப்பட்டனர். ஆனால் கடந்த அரசாங்கத்தில் அலுத்கம, தம்புள்ள, கிரேன்ட்பாஸ் ஆகிய இடங்களில் முஸ்லிம்கள் மீது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டோர் ஒருவரேனும் கைதுசெய்யப்படவில்லை. பொலிஸில் எத்தனையோ முறைப்பாடுகள் பதியப்பட்டபோதும் பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து வந்த உத்தரவால் எவருமே கைதுசெய்யப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை.
நாம் தொடுத்த பல்வேறு வழக்குகளின் காரணமாக இனவாத தேரர்கள் கொஞ்சம் மெளனமாக இருந்தனர். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நிம்மதியை தொலைத்தார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமும் இனவாத ஊடகங்கள் மூலமும் சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கையை முழுநாட்டின் முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்தனர். இஸ்லாத்தையும் புனித குர்ஆனையும் இந்த பயங்கரவாத நடவடிக்கையுடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தினர்.
சகோதர தமிழ் மக்கள் போன்று யுத்தத்தினால் அழிவையும் அகதி வாழ்வையும் முஸ்லிம் சமூகமும் சந்தித்தது. யுத்தம் முடிந்த பின்னரும் அதே அழிவும் அகதி வாழ்வும் தொடர்கின்றது. இனவாதிகள் எங்களை அமைதியாக வாழவிடுகின்றார்கள் இல்லை. அப்பாவி சிங்கள மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடப் பார்க்கின்றார்கள், உசுப்பேற்றுகின்றார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட மக்கள் காங்கிரசின் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், அக்குறணை மத்திய குழு அமைப்பாளர் இல்யாஸ் உட்பட பலர் உரையாற்றினர்.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)