அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு; நாளை சம்மாந்துறையில்: ரணில் பிரதம அதிதி

🕔 November 5, 2019

– முன்ஸிப் அஹமட் –

னாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆரவு வேண்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடத்தும் இளைஞர் மாநாடு, நாளை புதன்கிழமை சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, அந்தக் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எம். முஷர்ரப் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகவும், மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் சிறப்பு அதிதியாகவும், அந்தக் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்றூப், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் முஷர்ரப் கூறினார்.

சம்மாந்துறையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

“ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஸவுக்கு ஆதரவு தேடி, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்வாறான இளைஞர் மாநாடுகளை எமது கட்சியின் சார்பாக நடத்தியுள்ளோம். அந்த வகையிலேயே, நாளை சம்மாந்துறையில் அம்பாறை மாவட்டத்துக்கான இளைஞர் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்த மாநாாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்.

சிறுபான்மை பெரும்பான்மை என்கிற பேதங்களின்றி நாட்டைக் கட்டியெழுப்புவேன் என, சஜீத் பிரேமதாஸ வாக்குறுதியளித்துள்ளார். அதனால் அவரை ஆதரிக்க முடியும்.

ஊடக தர்மங்களை மீறி, சிங்கள ஊடகங்கள் சில செயற்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கேள்வி: ஜனாதிபதி வேட்டபாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் சஜித் பிரேமதாஸவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் ஆதரவு வழங்குகிறது?

பதில்: “அமைச்சர் றிசாட் பதியுதீனை இனவாதியாகவும் அடிப்படைவாதியாகவும் காட்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். இந்த வேளையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் நிபந்தனைகளை நாம் விதித்தால், அதை சிங்கள இனவாதிகள் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, சஜித் பிரேமதாஸவுக்கு எதிரான பிரசாரங்களை செய்யத் தொடங்குவார்கள்.

எமது நடவடிக்கைகள் அவர்களுக்கு உரமிட்டு விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

ஆயினும், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் காங்கிரஸின் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரசார செயலாளர் ஜுனைதீன் மான்குட்டியும் கலந்து கொண்டார்.

Comments