ஜனநாயகத்திலிருந்து முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்காகவே, அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டது: றிசாட்

🕔 November 5, 2019

னவாதிகள் சார்ந்துள்ள வேட்பாளர் வெற்றி பெறுவாரேயானால் இனிவரும் காலங்களில் சிறுபான்மையினரின் வாக்குப் பலம் செல்லாக் காசாகிவிடும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமனா றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் சல்மான் பாரிஸின் தலைமையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை அமைச்சர் றிசாட் பதியுதீன் உரையாற்றினார்.

“சிறுபான்மையினரில் அதி பெரும்பான்மையானோர் சஜித் பிரேம்தாஸவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். எனினும், தேர்தலில் பெரமுன வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவாராக இருந்தால், நமது வாக்குகள் பெறுமதி இல்லாததாகவும் நமது சமூகத்திற்கு பாதுகாப்பு இல்லாமலும் தொடர்ந்தும் கால காலமாக அச்சத்தில் வாழும் சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

எனவே. , வாக்களிப்பில் நாம் பொடுபோக்குத்தனமாக – இருந்து விடாமல் வாக்களிப்பு வீதத்தை கூட்ட வேண்டும். ஒட்டகத்திற்கோ அல்லது மூன்றாவது அணியினருக்கோ வாக்களிப்பது, கோட்டாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவே செய்யும்.

‘சிறுபான்மை வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை’ என தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கொக்கரித்து திரிந்த இனவாதிகள், இப்போது அவர்களது ஏஜெண்டுகளை அனுப்பி சிறுபான்மை மக்களின் வீட்டு வாசலை தட்டுவதிலிருந்து, தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மையினர் என்பதை அவர்கள் சரியாக  இப்போது புரிந்துள்ளனர்.

முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கோ தீவிரவாத்திற்கோ ஒத்துழைப்பு வழங்குபவர் அல்லர் என்பதை, சாய்ந்தமருதுவில் சஹ்ரானின் கும்பலை காட்டிக்கொடுத்து பயங்கரவாதத்தின் மூலவேரை பிடுங்கி எறிவதற்கு அவர்கள் வழங்கிய  அனைத்து ஒத்துழைப்புக்களும் எடுத்துக்காட்டாகும். எனினும் இந்த தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் புத்திஜீவிகள் மீதும் அடுக்கடுக்காக போலியான குற்றங்களும் பழிகளும் சுமத்தப்பட்ட போதும், இனவாதிகளின் அத்தனை முயற்சிகளும் தவிடுபொடியாகின.

நடுநிலையாக சிந்திக்கக்கூடிய, நிதானமாக செயல்படக்கூடிய சிங்கள சமூகத்தின் மனங்களில், முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்களை பரப்பி, அவர்களை நமக்கு எதிராக திசை திருப்பினர். இருந்த போதும், நீதியும் சட்டமும் இன்னுமே உயிருடன் வாழ்வதால் அத்தனை குற்றச்சாட்டுக்களும் நிராகரிக்கப்பட்டு இனவாத முயற்சிகள் அனைத்தும் புஸ்வானமாகின. இருந்த போதும், நீதித்துறையையும் பொலிஸாரையும் இனவாதிகளும் இனவாத மதகுருமார்களும் வேண்டுமென்றே குற்றம் சுமத்தினர்.

ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை எதிர்பார்த்தவர்களாகவே இந்த இனவாதக் கூட்டம் நன்கு திட்டமிட்டு தமது காய்களை நகர்த்தியது. முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக முத்திரைகுத்தி அவர்களை அந்நியப்படுத்துவதும் ஜனநாயக நீரோட்டத்திலிருந்து அவர்களை தூரப்படுத்துவதும் என்ற குறிக்கோளுடன்தான் அவர்கள் செயற்பட்டனர். அதன் மூலம் எமது சமுதாயத்தின் குரல் வளையை நசுக்குவதே அவர்களின் பிரதான இலக்காகும்.

இதன் மூலம் தேர்தல்களில் தாம் எண்ணியதை சாதிக்க முடியும் என நினைத்தனர். இவர்கள் தான் கோட்டாவை வேட்பாளராக கொண்டு வந்தவர்கள். கோட்டாவை வெற்றிபெறச் செய்வதன் மூலமே தமது சிறுபான்மை விரோத இலக்கை அடைய முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.

ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தவரே இந்த ஹிஸ்புல்லாஹ்தான். யாரையோ திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்தார். மர்ஹூம் அஷ்ரப், பேரியல் அஷ்ரப் ஆகியோருக்கு துரோகம் இழைத்த செய்த இவர், மக்கள் காங்கிரஸிலிருந்துவிட்டு மஹிந்தவுக்கு ஆதரவளித்தார்.

மஹிந்த தோற்றதால் மைத்திரிக்கு ஆதரவளித்து பதவிகளை பெற்றுக்கொண்டார். இப்போது வேறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் செயற்பட்டுக் கொண்டிருப்பது புத்தியுள்ள ஒவ்வொருவருக்கும் விளங்கும். இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்லப்போவதாக கதையளந்து, அப்பாவி பாமர மக்களை பிழையாக வழிநடத்தப் பார்க்கின்றார். அவரது பிரச்சார யுக்திகளில் அவர் எதையோ மையமாக வைத்து காய் நகர்த்துகின்றார் என்று நன்கு விளங்குகின்றது.

எனவே, இவர் விடயத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதியானவை. எனவே சஜித் பிரேமதாஸவுக்கு நமது வாக்குகளை வழங்கி அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்