கிங் மேக்கர்

🕔 October 8, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

கப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன.

• பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது.
• அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாகவும் இது உள்ளது.
• அதிக சிறுபான்மையினத்தவர் போட்டியிடும் தேர்தல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
• இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவர் முதன்முதலாக போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் எனும் அடையாளத்தையும் இந்தத் தேர்தல் பெற்றுள்ளது.
• இந்த நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாமல் போன ஒரு தேர்தலாகவும் இது உள்ளது. இப்படி அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

கிங் மேக்கர்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன; “ஒரு தடவை மாத்திரமே நான் ஜனாதிபதி பதவியை வகிப்பேன்” என்றும், “அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்” எனவும் கூறியிருந்தார். அவர் சொன்னபடிதான் நடந்திருக்கிறது. ஆனால், அது அவரின் விருப்பத்துடன்தான் நடந்துள்ளதா? அல்லது அவ்வாறானதொரு நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளாரா என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை” என்று மைத்திரி கூறியிருந்த போதிலும், இடையில் – இரண்டாவது முறையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆசை அவருக்குள் எட்டிப் பார்த்ததை, அவருடைய பேச்சுகளிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால், களநிலைவரம் அதற்குச் சாதகமாக இல்லை. கடந்த உள்ளுாட்சி சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – நாடு முழுவதும் பெற்ற மொத்த வாக்குகள் அண்ணளவாக 14 லட்சம்தான். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 36 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தது.

இந்த நிலையில் 14 லட்சம் வாக்குகளை நம்பி, ஜனாதிபதித் தேர்தலொன்றில் களமிறங்குவது புத்திசாலித்தனமான முடிவல்ல. அதனால், தேர்தலில் போட்டியிடாமல் விடுவதே நல்லது என்று மைத்திரி தீர்மானித்திருக்கக் கூடும்.

ஆனாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சியொன்றின் வேட்பாளருக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவதன் மூலம், அவரை வெற்றியாளராக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. அந்த வகையில், ‘கிங் மேக்கர்’ எனும் தகுதி சுதந்திரக் கட்சிக்குக்குக் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தத் தரப்புக்கு, சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்குவது என்கிற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை, கட்சித் தலைவர் மைத்திரிக்கு, சுதந்திரக் கட்சியின் செயற்குழு வழங்கியுள்ளது. அதனால், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ‘கிங் மேக்கர்’ எனும் தகுதி மைத்திரிக்கு கிடைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கே சுதந்திரக் கட்சியின் ஆதரவை மைத்திரி அறிவிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக, அரசியலரங்கில் பேசப்படுகிறது. அப்படி நடந்து விட்டால், மிக இலகுவாகவே வெற்றிக்கு மிக அருகில் கோட்டா சென்று விடுவார்.

கசப்பு

மைத்திரியின் கணக்கில்; ஐக்கிய தேசியக் கட்சியை விடவும் மஹிந்த தரப்பு பரவாயில்லை என்பதாகவே தெரிகிறது. கடந்த 52 நாள் அரசியல் குழப்பத்தின் போது, ரணிலிடமிருந்த பிரதமர் பதவியைப் பிடுங்கி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மைத்திரி வழங்கிய போதே, இதனை விளங்கிக் கொள்ள முடிந்தது.

சஜித் பிரேமதாஸவுடன் ஒரு வகையான நெருக்கத்தை மைத்திரி காட்டி வந்தார். இதனை வைத்து, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால், மைத்திரி ஆதரவு வழங்குவார் என்கிற பேச்சுக்களை அதிகம் காண முடிந்தது.

ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஓரம் கட்டுவதற்காகவே, சஜித் பிரேமதாஸவை மைத்திரி அரவணைத்திருக்கக் கூடும். அது ஒருவகை அரசியல் தந்திரோபாயமாகவும் இருந்திருக்கலாம். அல்லது அது உண்மையான நெருக்கமாகவும் இருக்கலாம்.

ஆனால், சஜித் ஜனாதிபதியானால் ரணில் விக்ரமசிங்கவின் கைகள் ஓங்குவதை தவிர்க்க முடியாது போகலாம். அந்த நிலை ஏற்படுவதை மைத்திரி விரும்ப மாட்டார். ரணிலுடன் மைத்திரி கடுமையான கசப்பில் உள்ளார். ஜனாதிபதியின் கடந்த கால உரைகளில், ரணில் – குறி வைத்துத் தாக்கப்பட்டமை, அதனை ஊர்ஜிதம் செய்திருந்தது.

இணக்கத்துக்கான முயற்சி

மறுபுறம், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பிளவு ஏற்படுவதற்கு காரணம் – தீர்க்கவே முடியாத பகைமைகளில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரி எதிர்பார்த்திருந்தார். அது அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான், மஹிந்தவுக்கு மைத்திரி ‘காய்’ வெட்ட நேர்ந்தது.

எனவே, மஹிந்த தரப்புடன் ஏற்பட்ட கசப்பை சரி செய்து கொள்வதற்கும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.கட்சிக்கு குழி பறிப்பதற்குமான தக்க தருணமாக, இந்த ஜனாதிபதித் தேர்தலை மைத்திரி பயன்படுத்திக் கொள்வார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதேவேளை, கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கக் கூடாது என்று, அந்தக் கட்சிக்குள் சில முக்கியஸ்தர்களும் கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதையும் மீறி, கோட்டாவுக்கு மைத்திரி ஆதரவு தெரிவித்தால், சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படலாம். அல்லது சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க முன்வரலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதேவேளை இந்தத் தேர்தலின் பிறகு, ஜனாதிபதி பதவியிருந்து நீங்கிய பின்னரும், அரசியலில் தொடர்ந்தும் செயற்படப் போவதாக மைத்திரி கூறியிருக்கின்றார். இது கவனிப்புக்குரியது.

அப்படியென்றால், அவர் வைத்திருக்கும் அடுத்த திட்டம் என்ன என்கிற கேள்வியொன்றும் உள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு கிடைத்திருக்கும் ‘கிங் மேக்கர்’ என்கிற தகுதி போன்று, அடுத்த கட்ட அரசியலில் அவருக்குக் கிடைப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நன்றி: தமிழ் மிரர் (08 ஒக்டோபர் 2019)

Comments