300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை

🕔 July 26, 2019

– ஹாரிஸ் அலி உதுமா –

300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை.

ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் அவர்களிடம் விரல் நுனியில் இல்லை. தோழர் ஹிஸ்புல்லாஹ் மட்டும் ஏதோ ஒரு எதிர்ப்பை தெரிவித்தார். அரசியல்வாதிகளிடம்தான் இல்லையென்று பார்த்தால் ஊடகவியலாளர்கள் என்று சொல்லி பீத்திக் கொள்ளும் நாய் செத்தால் செய்தி எழுதும் தகைமையுடைய செய்தியாளர்களிடமும் இல்லை.

எந்தக் காலத்தில் எந்தெந்த 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று கொழுத்தார்கள் என்று குற்றச்சாட்டுப் பத்திரத்தில் முன்னாள் நீதியரசர் குறிப்பிடவில்லை. வழமையாக பொலிஸ்தான் குற்றச்சாட்டுப்பத்திரத்தை சமர்ப்பிக்கும். இங்கு மாறாக நீதிபதியே குற்றத்தையும் சாட்டி – தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்.

சரி விடயத்தை நாம் விளங்கிக் கொள்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழும் இடங்களாக காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பெரிய நகரங்களும், அவற்றைச் சுற்றி, சில சிறிய கிராமங்களும் காணப்படுகின்றன. இவை தவிர படுவான்கரை செங்கலடி – பதுளை வீதியூடாக செல்லும் பகுதிகள், அத்துடன் புணானை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வேளாண்மை வயல் காணிகளை கொண்டுள்ளனர்.

1982 ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலை இயக்கங்களின் மட்டக்களப்பு வருகையும் அவர்களின் பயிற்சி தளங்களும் முஸ்லிம்களின் விவசாய நிலங்களை அண்டிய தமிழ் கிராமங்களில் அமைந்தமையால், சுதந்திரமான விவசாய செய்கையும் நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டன. படிப்படியாக விடுதலை இயக்கங்களின் செல்வாக்கின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் வந்த முஸ்லிம்களின் விவசாய நிலங்கள், 2010ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை விவசாயம் பண்ணப்படாமலும் அந்தப் பகுதிக்கு சென்று தமது நிலங்களைப் பார்க்க முடியாமலுமே முஸ்லிம்கள் இருந்தனர்.

1982ல் இருந்து 2010 வரை தமிழ் விடுதலை இயக்கங்களின்
கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை முஸ்லிம்கள் எப்படி பெயர் மாற்றியிருக்க முடியும். புலிகளின் கட்டுப்பாடு இல்லாது, அரச கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த சகல அரச தமிழ் உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும், தமிழ் இயக்கங்களுக்கு கிழமை தோறும் சென்று பதிலளிக்கும் நிலையிலேயே இருந்தனர். இவ்வாறு தமிழர்கள் மிகப்பலமாக இருந்த இந்த காலப் பகுதியில் ஒரு பலமுமற்ற முஸ்லிம் சமூகம் எவ்வாறு 300கிராமங்களையும் தின்று செமித்திருக்க முடியும்?

2010 ஆண்டுக்கு பிறகு, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இருந்து இன்று வரை எல்லா பிரதேசங்களும் அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சகல அரச திணைக்கள உயர் உத்தியோகத்தர்களும், குறிப்பாக காணி அதிகாரிகள் மட்டக்களப்பில் தமிழர்களாகவும் அம்பாறையில் சிங்களவர்களாகவுமே இருக்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் காணிகளை அபகரிப்பதும் கிராமங்களுக்கு பெயர் மாற்றுவதும் சட்ட ரீதியாக சாத்தியமாகக் கூடியதா?

முஸ்லிம்கள் ஒரு இனத்துவ யுத்தத்தை நடத்தி ஆக்கிரமித்த வரலாறு இலங்கையில் எங்காவது – வரலாற்று காலம் தொட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா? இவ்வாறான லொஜிக்கான கேள்விகளை
விக்னேஸ்வரனிடம் யார் கேட்பது?

அவர்கள் (தமிழர்கள்) எம்மை (முஸ்லிம்களை) தமிழர்கள் என்று சொல்வதானால் நாம் தமிழீழ நிலப்பரப்பில் குடியேறுவதிலும் வாழ்வதிலும் என்ன பிரச்சனையென்று சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் இல்லை சோனிகள் என்று தெளிவாக வரையறுத்துச் சொன்னால், எங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஆட்சி செய்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையென்று சொல்ல வேண்டும்..
இரண்டையும் சொல்லாமல் சிங்களவர்கள் தமிழர்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பது போன்று, முஸ்லிம்களை தமிழர்கள் அடிமையாக வைத்திருக்க நினைப்பதும் செயற்படுவதும் எல்லா காலமும் செய்ய முடியாத ஒரு அரசியல் செயற்பாடாகவே அமையும்.

மிக விரைவாக சகல தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கிழக்கு – வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டுக்கு வருவது காலத்தின் கட்டாயமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்