அமைச்சுகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை, முஸ்லிம் எம்.பி.கள் நிராகரிப்பு: காரணத்தை ஜனாதிபதிக்கு றிசாட் விளக்கியதாக, பௌசி தெரிவிப்பு

🕔 July 26, 2019

தவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை ஏற்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு  அங்கிருந்து அழைப்புக்கள் வந்திருந்த போதும், சமூகத்தின் அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடனும், ஜனாதிபதியுடனும் மீண்டும் சந்தித்து பேசிய பின்னரே, அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்று நாம்  நேற்று மாலை முடிவு செய்திருந்தோம் என்று  முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்தார். 

“எனது இல்லத்தில் நேற்று மாலை நானும் முன்னாள் அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் ஆகியோர் அரசாங்கத்தின் இந்த அழைப்பு தொடர்பில் சந்தித்து விரிவாக பேசியதை அடுத்தே இவ்வாறு ஒருமித்த முடிவை மேற்கொண்டோம்.

அந்த வகையில் இன்று  காலை அமைச்சு பதவிகளை  பொறுப்பேற்க முடியாத நிலைமையை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்துவதெனவும்  அது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து எமது ஒட்டுமொத்த முடிவை தெளிவு படுத்துமாறும் நானும்  ஹக்கீமும் நேற்று இரவு றிசாட் பதியுதீனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். 

எமது வேண்டுகோளை ஏற்று இன்று காலை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியை சந்தித்து பதவியை துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவி ஏற்க முடியாத சூழ்நிலை குறித்த, எமது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான மீண்டுமொரு சந்திப்பின் பின்னர், பிறிதொரு தினத்தில் அது பற்றி தீர்மானித்துக்கொள்ள முடியும் எனவும் றிசாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீதும், முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் சிலரின் மீதும் சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டுக்கள், வகை தொகையின்றிய கைதுகள்  மற்றும் கண்டி உண்ணாவிரதத்தினால் நாட்டில் ஏற்படவிருந்த பேரழிவு ஆகியவற்றின் அச்சம் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருந்தனர். 

எனினும் பின்னர் எமது முடிவுக்கு இணங்க கபீர் காசிம், ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை பொறுப்பேற்றனர். 

ஆனால் தாக்குதலின் பின்னர்  முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டிருந்த பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணும் வரை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை ஏற்பது இல்லை எனவும் அப்போது முடிவு செய்யப்பட்டது.  

 அதன் பின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை அடுத்து, அப்பாவி முஸ்லிம்களின் விடுதலை உட்பட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்ட போதும். இன்னும் சில பிரச்சினைகளுக்கான தீர்வை பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே  இன்று ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு ஒட்டுமொத்தமாக பதவி துறந்தார்களோ, அதே போன்றே ஒற்றுமையாக பதவி ஏற்பார்கள் என்று  ஒன்றியத்தின் தலைவர் பெளசி தெரிவித்தார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்