எந்தத் தேர்தல் முன்னே வரும்? ஜ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? குறுக்கு நெடுக்காக யோசிக்கலாம் வாங்க

🕔 July 25, 2019

– மப்றூக் –

நாட்டில் இந்த வருட இறுதிக்குள் தேர்தல் ஒன்று நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்தத் தேர்தல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது.

அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியமே அதிகமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறுவதையே விரும்புகின்றன.

சு.கட்சி விரும்பும் தேர்தல்

ஆனால், அதற்கு முன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கே, ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி விரும்பம் கொண்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலொன்று நடந்தால் அதில் ஐக்கிய தேசியக் கட்சி மண் கவ்வும் என்று பலரும் நம்புகின்றனர்.

அதனால்தான், மாகாண சபைத் தேர்தல் நடத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி தட்டிக் கழித்து வருகிறது. நியாயமாகப் பார்த்தால், கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலைத்தான் முன்னதாக நடத்த வேண்டும்.

மறுபுறமாக, ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் நடந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக யாரை வேட்பாளராகக் களமிறக்குவது என்கிற கேள்வி அந்தக் கட்சிக்குள் இப்போதே சர்ச்சைக்குரிய விடமாகப் போய் விட்டது.

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

எப்படிப் பார்த்தாலும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முகத்தை, ஜனாதிபதித் தேர்தலொன்றில் சந்தைப்படுத்த முடியாது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியினர் மிக நன்றாகவே அறிவர். ரணில் விக்ரமசிங்கவுக்கும் அது தெரியும். எனவே, வேறொரு நபரைத்தான் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும்.

ஆனாலும், இம்முறை கட்சிக்கு வெளியிலிருந்து வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி தேடாது. மைத்திரியை கொண்டு வந்தமையின் கசப்பான பாடம், அந்த முடிவுக்கு அவர்களை கொண்டு வந்து நிறுத்தும் என்று நம்பலாம்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்து களமிறக்கப்படும் அந்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டொலர் கேள்வியாகும்.

சஜித் – கரு

இப்போதைக்கு சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலின் உச்சத்தில் உள்ளன. ஆனாலும், கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியில் எப்போதும் தன்னுடன் பனிப் போரொன்றில் ஈடுபட்டு வரும் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறக்குவாரா என்பது சந்தேகம்தான்.

தப்பித் தவறி சஜித் பிரேமதாஸ களமிறங்கி அவர் ஜனாதிபதியாகவும், ரணில் பிரதமராகவும் தெரிவானால், இப்போதைய மைத்திரி – ரணில் மோதல், பிறகு சஜித் – ரணில் மோதலாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

மேலும், சஜித் ஜனாதிபதியானால் ரணிலிடமுள்ள ஐ.தே.கட்சியின் தலைமைத்துவம் சஜித்தின் கைகளுக்குச் செல்வதற்கான சாத்தியங்களும் அதிகமாகும். இதனையும் ரணில் ஒருபோதும் விரும்ப மாட்டார்.

ணிலின் தெரிவு

எனவே, இப்போதைக்கு ஒப்பீட்டளவில் தனக்கு விசுவாசமாக இருக்கக் கூடிய கரு ஜயசூரியவையே ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்குவதற்கு ரணில் விக்ரமசிங்க விரும்புவார் என்றுதான் அனுமானிக்க முடிகிறது.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் சஜித் பிரேமதாஸவை ஓரம் கட்டினால், பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியிலிருந்தும் அவரை இலகுவாக ஒதுக்கி விடலாம் என்றும் ரணில் சிந்திக்கக் கூடும்.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் அதிஷ்டம் கரு ஜயசூரியவுக்கே அதிகம் காணப்படுகிறது.

சிக்கல்

ஆனால், பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் கரு ஜயசூரியவை விடவும், சஜித் பிரேமதாஸவுக்கே செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.

அதனால், இதனைக் காரணம் காட்டி – கரு ஜயசூரியவை களமிறக்கும் ரணிலின் முடிவை, கட்சிக்குள்ளிருக்கும் முக்கியஸ்தர்கள் எதிர்க்கக் கூடும்.

ஆனாலும் அவ்வளவு எளிதில் சஜித்தை முன்னிலைப்படுத்தும் தீர்மானத்துக்கு, ரணில் சம்மதிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

Comments