தலைப்புச் செய்திகள்

பயங்கரவாதத்துடன் தொடர்பு; சந்தேகத்தில் கைதானவர்ளை, விளக்க மறியலில் வைக்க, கல்முனை நீதிமன்றம் உத்தரவு

– பாறுக் ஷிஹான் –

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான  08 பேரை  14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றுஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு முதல் தடவையாக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது  ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  இரு மாதங்களுக்கு மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இச்சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும்   நீதவானின் பிரத்தியேக அறையில் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ச்சியாக 65 நாட்களுக்கு மேலாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இச் சந்தேக நபர்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், அவர்களை இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க கல்முனை  நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி  ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

சந்தேக நபர்கள் சார்பாக  சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.