ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

🕔 July 6, 2019

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர். 

சனிக்கிழமை பிற்பகல் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனம் 15 அடி தூரம் வழுக்கிய நிலையில் சென்று, வயல் வெளியோரம் குடைசாய்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், மேலும் மூவர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையிலும், இருவர் அம்பாறை ஆதார வைத்தியசாலையிலும், மட்டக்களப்பு மற்றும் காரைதீவு வைத்தியசாலைகளில் தலா ஒருவர் என, அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட ராணுவ வீரர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தினை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களின் கமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றிலிருந்த படங்கள் ராணுவத்தினரால் அழிக்கப்பட்டதோடு, சில ஊடகவியலாளர்களுக்கு ராணுவத்தினர் அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

மேற்குறித்த ராணுவத்தினர் அனைவரும் வெலிகந்தை ராணுவ விசேட படையணியனராவர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்