கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரும் போராட்டமும், வேதம் ஓதும் சாத்தான்களும்

🕔 June 19, 2019

– மரைக்கார் –

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி, உண்ணா விரதப் போராட்டமொன்று நடைபெற்று வருகிறது.

இது மிக நீண்ட காலமாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் – இழுபறியிலுள்ள விவகாரமாகும்.

உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோருவோர் தமிழர்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் தரப்பில் எதிர்ப்புகள் உள்ளன.

உண்மையில் பிரதேச செயலகம் வழங்குவது இங்கு பெரிய பிரச்சினையல்ல. அதன் எல்லைகள் எவை என்பதைத் தீர்மானிப்பதில்தான் அதிக பிரச்சினைகள் உள்ளதாகத் தெரிகிறது.

இன்னொரு புறம், கல்முனை உப பிரதேச செயலகம் சட்ட விரோதமாக உருவாக்கப்பட்டது என்று தெரிவித்து, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில்  வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருமாறு, கல்முனை விகாராதிபதி மற்றும் இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிள்ளோர், திங்கட்கிழமை காலை தொடக்கம் – உண்ணா விரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பேராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், எஸ். வியாழேந்திரன் மற்றும் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்டோர், உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு வந்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இவர்கள் தெரிவித்த கருத்துகள், உப பிரதேச செயலகத்தை தயமுயர்த்தக் கோருவதோடு நின்று விடாமல், முஸ்லிம் மக்களை வலிந்து வம்புக்கிழுப்பதாகவும் உள்ளன.

“முஸ்லிம் பயங்கரவாதம் இந்த நாட்டில் தலைவிரித்து ஆடுகின்றது” என்று, உண்ணா விரதம் நடக்கும் இடத்துக்கு வருகை தந்திருந்த கருணா அம்மான் ஊடகங்களிடம் கூறியிருக்கின்றார். இது சாத்தான் வேதம் ஓதியமைக்கு சமனானதாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நாட்டில் 30 வருடகாலமாக நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையின் போது, பொதுமக்களையும், சிறுவர்களையும், மதகுருக்களையும் குரூரமாகக் கொலை செய்தவர்கள் புலிகள்.

குறிப்பாக காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை புலிகள் சுட்டுக் கொல்வதற்கு தலைமை வழங்கியவர் இந்தக் கருணா அம்மான்தான்.

அருந்தலாவயில் பௌத்த பிக்குகளை கழுத்தறுத்து படுகொலை செய்தவர்கள், கருணா அம்மான் தளபதியாக இருந்த புலிகள் இயத்தவர்கள்தான் என்கிற கடந்தகால ரத்த வரலாறுகளையெல்லாம் ஏகத்துக்கு மறந்து விட்டு, பயங்கரவாதம் பற்றி, கருணா அம்மான் பேசுவது – சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும் என்று, நியாயமாக சிந்திக்கும் தமிழ் மக்களே கூறுகின்றனர்.

இன்னொருபுறம், தமிழர்களில் கணிசமானோர் விடுதலைப் போராட்டமாக நம்பியிருந்த – புலிகளின் ஆயுதப் போரட்டத்தை காட்டிக் கொடுத்து, துரோகம் செய்தவரும் இந்தக் கருணா அம்மான்தான்.

அவ்வாறான ஒருவரை – இன்று கல்முனை தமிழ் மக்கள் அழைத்து வந்து, தங்கள் உண்ணா விரதப் போரட்டத்தில் பேச வைத்தமையானது, வெட்கக் கேடானதாகும்.

கருணா அம்மான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன் மற்றும் வியாழேந்திரன் போன்றோர், இனங்களுக்கிடையில் குரோதங்களை மூட்டி விட்டு, அதில் தமது அரசியலைச் செய்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான அரசியல் – நெடுங்காலம் நிலைக்காது என்பதற்கு, கடந்த காலங்கள் சாட்சியாக இருக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்