நாட்டை விட்டு வெளியேற, 07 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன: ஹிஸ்புல்லா தெரிவிப்பு

🕔 June 7, 2019

நாட்டை விட்டும் வெளியேறுவதற்காக சுமார் 07 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகம் ஒன்றுக்கு விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டும் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, இன்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்ஆ தொழுகையின் பின்னர் அவர் உரையாற்றுகையிலேயே இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

“முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக் கூடாது” எனவும் அவர் அங்கு கூறினார்.

”பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் 02 ஆயிரம் முஸ்லிம்கள் அளவில் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மிகுதி அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட, ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்”.

தமது ஜுப்பா ஆடையில் சஊதி அரேபியாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தைமைக்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும் கடைகளையும் எரித்தவர்கள், வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை செவ்வாய்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா நேற்று சாட்சியமளித்தார். 

இதன்போது அவரிடம்; ‘பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு யாராது முஸ்லிம் அரசியல்வாதிகள்  ஏதாவது உதவியுள்ளார்களா’? அது தொடர்பான சாட்சியங்கள், ஆவணங்கள் உள்ளனவா என்று, தெரிவுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சரத்பொன்சேகா கேட்டார். அதற்கு; அவ்வாறு எந்தவொரு முறைப்பாடும் இல்லை என்று, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் கூறியிருந்தார்” என்றும் ஹிஸ்புல்லா கூறினார்.

முஸ்லிம் ஆளுநநர்களும் அமைச்சர்களும் கூட்டாக ராஜிநாமா செய்தமை குறித்து, இங்கு பேசிய அவர்;“முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமை சாதாரணமானது அல்ல. எங்களைப் போன்று முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள், எமது பதவியை ராஜிநாமா செய்தமை பெரிய விடயமல்ல. ஆனால், கபீர் ஹாசிம், ஹலீம், ரஊப் ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்தமை மிகப்பெரிய விடயமாகும். காரணம், இவர்கள் கண்டி, கேகாலை மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றுக்குத் தெரிவானவர்கள். எனவே, அவர்களின் ராஜிநாமாக்கள் மிக உயர்ந்த மட்டத்தில் வைத்துப் பாரக்க வேண்டிவை” என்றும் அவர் தெரிவித்தார்.    

நாட்டில் ஏற்பட்ட பதட்ட நிலையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த எம்.எல்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உள்ளிட்ட இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் மற்றும் 09 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்