றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நேர்மையான பார்வை என்ன?

🕔 May 23, 2019

– அஹமட் –

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து நாம் அறிவோம்.

இது பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளே, இது தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் குறித்து, நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

“றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையானது முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானது” என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

இன்னொரு சாரார்; “அதனை தனி நபர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையாகவே பார்க்க வேண்டும்” என்றும், “முஸ்லிம் சமூகத்துக்கும் அந்தப் பிரேரணைக்கும் முடிச்சுப் போடத் தேவையில்லை“ எனவும் கூறுகின்றனர்.

மேலும், தனது அமைச்சுப் பதவியை – றிசாட் இப்போதே ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பும், அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று வேறொரு தரப்பும் சொல்கின்றனர்.

எனவே இந்த விவகாரத்தை நேர்மையாக நாம் அனுகவேண்டியுள்ளது. இந்த விடயம் குறித்த சரியான பார்வை என்ன என்பதை, நாம் பேச வேண்டி தேவையும் உள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று சஹ்ரான் கும்பல் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்களைக் குறி வைத்து குறிப்பிடத்தக்க சில காரியங்களை பேரினவாதிகள் செய்யத் தொடங்கியுள்ளனர். அவற்றில் முக்கியமானவை;

  • புர்கா மீதான தடை
  • முஸ்லிம் மக்கள் மீதும் அவர்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை
  • ஹபாயா அணிவதற்கான எதிர்ப்பு
  • வீட்டுப் பாவனைக்கான கத்தியொன்றைக் கூட வைத்திருப்பதற்கு அச்சப்படும் மனநிலையொன்றினை, முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியமை
  • பெயர்ப்பலகை போன்றவற்றில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டுப்பாடு (அரபு மொழியை பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது)

இவ்வாறானவற்றின் தொடர்ச்சியாகவே, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பார்க்க வேண்டியுள்ளது.

எனவேதான், முஸ்லிம் சமூகத்துக்கெதிரான செயற்பாடாக, மேற்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையை நோக்கும் நிலை, முஸ்லிம் சமூகத்துக்குள் உருவாகி இருக்கிறது.

றிசாட் பதியுதீனுக்கு எதிரான அரசியல் குரோதம் என்பது, ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னர் பேரினவாதிகளுக்கு ஏற்பட்டதல்ல. அந்த வெறுப்புக்கு வயது நீளமானது.

றிசாட் பதியுதீனை அரசியல் ரீதியாகத் தீர்த்துக் கட்டுவதற்கு, நாள் பார்த்துக் காத்திருந்த பேரினவாதிகளுக்கு, ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னரான சூழ்நிலை, நல்ல சகுனமாக இருந்துள்ளது.

அதனால்தான், ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களையும், றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையினையும் முஸ்லிம்களில் கணிசமானோர் சமனாகப் பார்க்கின்றனர்.

பேரினவாதிகளின் முஸ்லிம் வெறுப்புச் சிந்தனையிலிருந்து உதித்தவற்றில் ஒன்றுதான், அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்கிற குரல், முஸ்லிம்களுக்குள் உயர்ந்து எழுந்துள்ளது.

சுற்றி வளைக்காமல் சொன்னால்; இதில் றிசாட் தோற்றுப் போவது முஸ்லிம் சமூகத்துக்கு நல்லதல்ல.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்