மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்ல, இலவச ஜனாஸா வாகனம் வழங்க மறுத்தமை தொடர்பில் கண்டனம்

🕔 February 20, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் – பயிற்சி பெற்றுவந்த நிலையில் மரணமடைந்த ஆசிரியை ஒருவரின் பிரேரத்தை, அவரின் ஊருக்குக் கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள, பிரேதங்களை கொண்டு செல்வதற்கான இலவச வாகனங்களை கேட்ட போதும், ‘முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்வதற்கு குறித்த வாகனங்களை வழங்க முடியாது’ எனக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தமை தொடர்பில், கடுமையான கண்டனங்களும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஹட்டன் – மஸ்கெலியாவை சேர்ந்த ஆசிரியை சத்யகலா என்பவரே, சுகயீனம் காரணமாக அட்டாளைச்சேனையில் மரணமடைந்தார்.

இதனையடுத்து, பிரேதத்தை – குறித்த ஆசிரியையின் ஊருக்கு கொண்டு செல்வதற்காக, முஸ்லிம் ஊர்களிலுள்ள இலவச சேவை வழங்கும் ஜனாஸா வாகனங்களை (பிரேதங்களைக் கொண்டு செல்லும் வாகனம்) கேட்ட போதும், முஸ்லிம் அல்லாத பிரேதங்களைக் கொண்டு செல்ல முடியாது என்று கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

இந்த தகவலை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் தொடர்புடைய முஸ்லிம் ஆசிரியர்கள் ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்ததோடு, இது குறித்து தமது விசனங்களையும் பதிவு செய்தனர்.

மரணமடைந்த ஒருவரின் உடலைக் கொண்டு செல்வதிலும், மதப் பாகுபாடு பார்க்கும் இவ்வாறானவர்களின் இந்த எண்ணம் – மிகவும் கேவலமானது என்றும் மேற்படி முஸ்லிம் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தை வெளிக் காட்டுகிறேன் என்று கூறி, ஏனைய மத ஸ்தலங்களில் சிரமதானம் செய்வது, ஏனையவர்களின் மத நிகழ்வுகளில் அன்னதானம் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் ஈடுபடுவதை விடவும், மரணமடைந்த ஒரு மாற்று மதத்தவரின் பிரேதத்தைக் கொண்டு செல்வதற்கு தமது இலவச ஜனாஸா வாகனங்களை வழங்கி உதவுவதே மனிதாபிமானமும், மத நல்லிணக்க செயலுமாகும் என்றும், மேற்படி முஸ்லிம் ஆசிரியர்கள் கூறினர்.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரின் முயற்சியில், குறித்த ஆசிரியையின் பிரேதம் – அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்