போதைப் பொருள் பாவிக்கும் அமைச்சர்கள் உள்ளனர்: ரஞ்சனின் கருத்துக்கு ஹக்கீம் உள்ளிட்டோர் கண்டனம்

🕔 February 20, 2019

– ஆர். சிவராஜா –

போதைப்பொருள் பாவிக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துத் தொடர்பில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஹரீன் பெர்னாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட்ட பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம், இன்று புதன்கிழமை நடைபெற்ற போதே இவர்கள் இவ்வாறு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொகெய்ன் போதைப் பொருள் பாவிக்கின்றனர் என்று, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஏற்கனவே குற்றச்சாட்டினை முன்வைத்திருந்ததோடு, இவர்களில் பலர், போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, ரஞ்சனின் கருத்துக்கு எதிராக இன்று அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் ரஞ்சன் கொச்சைப்படுத்திவிட்டதாகவும், இதன்போது விசனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஞ்சனின் குற்றச்சாட்டு குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்தும் ஆராய, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

இன்றைய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் ரஞ்சன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்