போர்க் குற்ற விசாரணையும் முஸ்லிம்களுக்கான நீதியும்

🕔 February 19, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

சிங்களப் பேரினவாதிகளின் வாய்களில், அவ்வப்போது அவலை அள்ளிப் போடுவதில், ரணில் விக்கிரமசிங்க பிரசித்தி பெற்றவர்.

பேரினவாதிகளுக்குக் கடுப்பேற்றும் கருத்துகளைக் கூறி, அவர்களின் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது ரணிலுக்கு வாடிக்கையாகும்.

சில நாள்களுக்கு முன்னர், வடக்குக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைத்துக் கூறிய விடயங்கள், அரசியலரங்கில் ‘காட்டுத் தீ’யை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன் காரணமாக, அவர் கடுமையான விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கின்றார்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், விடுதலைப் புலிகள், ராணுவத்தினர் என, இரண்டு தரப்பாலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

“உள்நாட்டுச் சண்டையின் போது, இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில், இரு தரப்பினரும் உண்மையைப் பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பைக் கோரி, முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.

இதனால், பேரினவாதச் சிங்களத் தரப்பிலிருந்து மட்டுமன்றி, தமிழர் பக்கமிருந்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை, ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் இந்தக் கருத்தையடுத்து, “படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டார்” என்று, சிங்களத் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மறுபுறம், “இலங்கை ராணுவம் போர்க் குற்றம் இழைத்தமையை, பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளதை வரவேற்கும் அதேநேரம், இதை ஏற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு 10 ஆண்டுகள் எடுத்திருக்கின்றன” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

ஆயினும், ராணுவத்தினரின் யுத்தக் குற்றத்தை மன்னிப்பதற்கு, தாம் தயார் இல்லை என்றும், அது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் தமிழர் தரப்பு வலியுறுத்தி உள்ளது.

எது எவ்வாறாயினும், உள்நாட்டுச் சண்டை தொடர்பாகப் பேசப்படும் ஒவ்வொரு தருணத்திலும், அதனால் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினராகிய முஸ்லிம் மக்கள் குறித்துப் பேசுவதிலிருந்து, அரசாங்கங்களும் தமிழர் தரப்பும் தவிர்த்துக் கொள்வதைத் தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கிறது.

அதையும் தாண்டிப் பேசுவதற்கான முயற்சிகள் எழுகின்ற போது, மிக நாசூக்காக, அவை தட்டிக் கழிக்கப்பட்டு வந்துள்ளன.

இலங்கையின் உள்நாட்டுச் சண்டையில், தனித்தரப்பாக முஸ்லிம்கள் பங்கு கொள்ளவில்லை என்றாலும் கூட, ராணுவத்தால், புலிகளால் உயிர், பொருளாதார இழப்புகளை முஸ்லிம்கள் அதிகளவில் சந்தித்துள்ளமையை மறைக்க முடியாது. அதிலும் புலிகளால், அதிகளவில் இழப்புகளையும் வலிகளையும் முஸ்லிம்கள் எதிர்கொண்டனர் என்பது கசப்பான உண்மையாகும்.

1990ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த விடுதலைப் புலிகள், அங்கு தொழுது கொண்டிருந்தவர்கள் மீது நடத்திய தாக்குதலில், 140 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.

1990ஆம் ஆண்டு மட்டும், கிழக்கு மாகாணத்தில் 700க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் கொன்றதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் எழுதிய நூலொன்றுக்கு வழங்கிய குறிப்பொன்றில், தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ். அருளானந்தன் தெரிவித்திருக்கிறார்.

அதேபோன்று, 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 முஸ்லிம் பொலிஸார், படுகொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததை அடுத்து, கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களைச் சுற்றி வளைத்த புலிகள், அங்கிருந்த பொலிஸாரைச் சரணடையுமாறு கோரினர். அதையடுத்து, புலிகளிடம் சரணடைந்தவர்களில் தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பொலிஸாரை விடுவித்த புலிகள், ஏனையவர்களை அழைத்துச் சென்றார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட சுமார் 600 முஸ்லிம் பொலிஸாரை, புலிகள் சுட்டுக் கொன்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் மிக அதிகமானோர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் 2011ஆம் ஆண்டு, பல முஸ்லிம்கள் சாட்சியம் வழங்கியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

புலிகளிடம் சரணடைந்த முஸ்லிம் பொலிஸார் 600 பேர் தொடர்பில், முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று, நல்லிணக்க ஆணைக்குழுவினர் யோசனைகளை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இன்னொருபுறம், 1990ஆம் ஆண்டில் வடக்கில் வாழ்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை, 48 மணி நேரத்துக்குள் புலிகள் துரத்தியடித்தமை குறித்தும் பேசப்பட வேண்டியுள்ளது. புலிகளின் அந்தச் செயற்பாடானது ஓர் ‘இன அழிப்பு’ நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

வடக்கு முஸ்லிம்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தக் கறுப்பு தினத்தன்று, புலிகள் விடுத்த அறிவித்தலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம் எழுதிய ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றச் சவால்கள்’ எனும் நூலில் இப்படி நினைவு கூருகிறார். ‘இங்கு வாழும் முஸ்லிம்களுக்கு, விடுதலைப் புலிகளின் அறிவித்தல்: முஸ்லிம்கள் அனைவரும், 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டும், கிராமத்தை விட்டும் வெளியேற வேண்டும். பணம், நகை, விலை உயர்ந்த பொருள்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும். நகைகளையும் பணத்தையும் புலிகளின் காரியாலயத்தில் ஒப்படைக்க வேண்டும். வழிச் செலவுக்கு 500 ரூபாய் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். வாகனங்கள், மோட்டார் சைக்கிள், இழுபொறி, சைக்கிள்கள் போன்றவையும் காரியாலயங்களில் ஒப்படைக்கப்பட வேண்டும். 48 மணி நேரம் தவறும் பட்சத்தில் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை’.

ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்பதும், அன்றைய நிலைவரங்களை நேரடியாகக் கண்டும் கேட்டும் அனுபவித்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், அவர்களுக்குச் சொந்தமான சுமார் 22 ஆயிரம் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு, அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தோணிகளும் வலைகளும் பறிபோயுள்ளன. முஸ்லிம்களின் 79 பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. 65 வரையிலான முஸ்லிம் பாடசாலைகள் அழிந்து போயுள்ளன என்று, ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் நூலில், சுஐப் எம் காசிம் குறிப்பிடுகின்றார்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்னர், சேதமாக்கப்பட்ட அவர்களுடைய வீடுகளின் அப்போதைய மொத்தப் பெறுமதி, சுமார் 192 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 1990ஆம் ஆண்டின் பெறுமதியாகும். அப்போது தங்கம் ஒரு பவுணின் விலை சுமார் 6,000 ரூபாயாகும். இப்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை, 60 ஆயிரம் ரூபாயாகும். அந்த வகையில் பார்த்தால், வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களின், சேதமாக்கப்பட்ட வீடுகளின் இன்றைய பெறுமதி, 1,920 கோடி ரூபாய்களாகும்.

அதேபோன்று, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது, அவர்கள் இழந்த சொத்துகளின் அன்றைய மொத்தப் பெறுமதி, சுமார் 254 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவற்றுக்கான இப்போதைய பெறுமதி 2,540 கோடி ரூபாய்களாகும்.

இந்த அநீதிகளைப் புரிந்த விடுதலைப் புலிகள், இறுதியில் மன்னிப்பை மட்டுமே முஸ்லிம்களிடம் கோரியிருந்தனர். அதுவும் அந்த மன்னிப்பு, ‘பூசி மெழுகலாக’ மட்டுமே அமைந்திருந்தது.

2002ஆம் ஆண்டு, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில், கிளிநொச்சியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, புலிகளின் ஆலோசகராகப் பதவி வகித்த அன்ரன் பாலசிங்கம், “கடந்த காலங்களில் நடந்தவற்றுக்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்புக் கேட்கிறோம்; நடந்தவை மறக்கப்பட வேண்டும். முஸ்லிம்களிடம் பேசி, அவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண, நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்று, கூறியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிராகப் புலிகள் புரிந்த அத்தனை நடவடிக்கைகளுக்கும், அந்த மன்னிப்பு மாத்திரம் போதுமானது என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். அதனால்தான், முஸ்லிம்களுக்கு எதிராகத் தாங்கள் புரிந்தவற்றுக்குப் பதிலீடாக, வேறு எதையும் செய்வதற்குப் புலிகள் முயற்சிக்கவில்லை.

முஸ்லிம்களைக் கொன்று, அவர்களின் பொருளாதாரத்தை அழித்துவிட்டுப் பின்னர், “மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள்” என்று, அன்ரன் பாலசிங்கம் அப்போது கோரிக்கை விடுத்தமைக்கும், வடக்குக்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, “உள்நாட்டுச் சண்டையின் போது, இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையைப் பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பைக் கோரி, முன்னோக்கிச் செல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டமைக்கும் இடையில், பெரிதாக வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, உள்நாட்டுச் சண்டையின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் குறித்து, விசாரணைகள் மேற்கொள்ளப்படுமானால், முஸ்லிம்களுக்கு எதிராக, புலிகள் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும்.

ஆனால், புலிகளின் தலைவர் உட்பட முக்கிய தளபதிகள் அனைவரும் இறந்து போயுள்ளதாக நம்பப்படும் நிலையில், புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை யாரின் ‘தலை’களில் சுமத்துவது என்கிற கேள்வியும் உள்ளது.

எவ்வாறாயினும், தமிழர்களுக்கு எதிராக இராணுவம் புரிந்த அட்டூழியங்களுக்கு எதிராக, நீதி வேண்டும் எனக் கோரி, தமிழ் அரசியல் தலைவர்கள் போராடி வருகின்றமை போல், முஸ்லிம்கள் மீது, புலிகள் கட்டவிழ்த்து விட்ட அநீதிகளுக்கும் நியாயம் கோரி, முஸ்லிம் அரசியல் தலைவர்களும் களத்தில் இறங்க வேண்டும்.

நீதி எல்லோருக்கும் பொதுவானது; நீதியின் முன்னால் எல்லோரும் சமமானவர்கள்.

நன்றி: தமிழ் மிரர் (19 பெப்ரவரி  2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்