பங்கம்

🕔 November 13, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

பத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்:

1. தைரியசாலிகள்

2. முட்டாள்கள்

3. குழந்தைகள்

தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, பிறகு அதைக் கலைப்பதென்பது, அரசியலில் மிகவும் ஆபத்தான காரியங்களாகும். ஆனால், இத்தனையையும் இரண்டு வாரங்களுக்குள் தடாலடியாகச் செய்து முடித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

கட்சி சார்பான அரசியல் மனநிலையுடன் கருத்துச் சொல்கின்றவர்கள், ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகளை, தத்தமது அறிவுக்கு ஏற்றால் போல் நியாயப்படுத்தியும் விமர்சித்தும் பேசுகின்றனர். ஆனால், தனது செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி சிறிசேன, தொடர்ந்தும் நியாயங்களைக் கற்பித்துக் கொண்டே வருகின்றார்.

எவ்வாறாயினும், சட்ட ரீதியாக ஜனாதிபதியின் செயற்பாடுகள் சரியா, பிழையா என்கிற முடிவுதான், மக்களுக்குத் தேவையானதாகும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, இந்தக் கட்டுரை எழுதப்படும் போது, அடிப்படை உரிமை மனுக்கள் 12, உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இனி, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதால், மேற்படி விவகாரங்கள் குறித்து நாம் இங்கு அலசத் தேவையில்லை.

அரசியலில், கடந்த 26ஆம் திகதி தொடக்கம் ஏற்பட்டு வரும் குழப்பங்கள் காரணமாக பல அசிங்கங்களையும் சுவாரசியங்களையும் நயவஞ்சகங்களையும் குத்து – வெட்டுகளையும் சோகங்களையும் காணவொண்ணாக் காட்சிகளையும் காணக் கிடைத்துள்ளது. குறிப்பாக வடிவேல் சுரேஷ் போன்றோர், கட்சிகளுக்கிடையில் தாவித் தாவி விளையாடியமை, ‘பார்வையாளர்’களுக்கே, கிறுகிறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

கட்சி மாறும் மேற்படி கோதாவில், மஹிந்த தரப்புக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். மஹிந்த தரப்புக்குச் சென்றோரில், மனுஷ நாணயக்காரவை மட்டுமே, ஐக்கிய தேசியக் கட்சியால் கழற்றியெடுக்க முடிந்தது.

தாவி விளையாடும் இந்த ஆட்டம், கொழுத்த இலாபமுடையது. அணி மாறுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மஹிந்த தரப்புப் பணம் வழங்கியதாக, ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியது. கட்சி தாவுகின்றவர்களுக்கு 100 தொடக்கம் 150 மில்லியன் ரூபாய் வரையில் பேரம் பேசப்பட்டதாக, ஜனாதிபதியே தனது உரையில் கூறியிருக்கிறார். சில சமயங்களில் இந்தத் தொகையானது 500 மில்லியன் ரூபாய் (50 கோடி) வரையில் சென்றதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

கட்சி மாறுவதற்குக் காசு கொடுக்கப்பட்டதைப் போன்று, தத்தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய பங்காளிக் கட்சிகள் தம்மோடு இருப்பதற்கும், அரசியல் கட்சிகள் பணம் வழங்கியதாகவும், ஆங்காங்கே கதைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண அரச ஊழியர் ஒருவரின் மாதச் சம்பளம், சராசரியாக 35 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அந்த வகையில், 500 மில்லியன் ரூபாய் என்பது, மேற்படி அரச ஊழியர் ஒருவரின் 1,190 ஆண்டுகாலச் சம்பளமாகும். சாதாரண மனிதர் ஒருவரின் ஆயுட்காலம், 70 ஆண்டுகள் என்கிற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், 500 மில்லியன் ரூபாயை உழைப்பதற்கு, 17 தலைமுறைகள் ஆகும்.

மறுபுறமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைத் தமது அணிக்குப் பெற்றுக் கொள்வதற்காக, 500 மில்லியன் ரூபாயை வழங்குமளவுக்குப் பணத்தை, மேற்படி அரசியல் கட்சிகள் எங்கிருந்து பெற்றுக் கொண்டன என்கிற கேள்வியும் முக்கியமானதாகும். ஒன்றில், தத்தமது ஆட்சிக் காலத்தின் போது, இந்த அரசியல் கட்சிகள் ஊழல், மோசடிகள் மூலமாக இந்தப் பணத்தைப் பெற்றிருக்க வேண்டும்; அல்லது, வெளிநாடுகள் இவர்களுக்கு இந்தப் பணத்தை வழங்கியிருக்க வேண்டும்.

மக்கள் வழங்கிய ஆணையை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு விற்பது மிகப் பெரும் துரோகமாகும். ஆனால், வேட்பாளர்களிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் பொதுமக்களுக்கு, இந்தத் துரோகம் பற்றிக் கேட்பதற்கு அருகதை இருப்பதாகத் தெரியவில்லை. தேர்தலில் பெருந்தொகைப் பணத்தைக் கொட்டிச் செலவு செய்யும் வேட்பாளர்கள், வெற்றிபெற்றவுடன், இழந்த பணத்தை உழைப்பதற்கு, இவ்வாறான மோசடி வழிகளையே அதிகமாக நாடுகின்றார்கள்.

அரசியலில் இவ்வாறான குழப்பங்கள் ஏற்படும் காலங்களில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகக்குறைந்தது ஒருவராயினும், கட்சி தாவி விடுவது வழமையாகும். ஆனால், இம்முறை அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமாகும். அதற்காக, அவர்கள் திருந்தி விட்டார்கள் என்கிற முடிவுக்கு வந்து விடக்கூடாது. இம்முறையும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தாவுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் பேரங்களிலும் ஈடுபட்டார்கள், அணி மாறுவதற்குத் தயாராக இருந்தார்கள், ஆனால் அது தடைப்பட்டு விட்டது.

தமிழ் மிரரின் சகோதரப் பத்திரிகையான ‘சண்டே டைம்ஸ்’ வெளியிட்ட கட்டுரையொன்றில், மஹிந்த தரப்புக்கு விலைபோகவிருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தது. அதன்படி முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா உட்பட மூவர், மஹிந்த தரப்புக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக இருந்துள்ளனர். அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம். இஸ்மாயில், அப்துல்லா மஹ்றூப் ஆகியோரும் அணி மாறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அதிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற எஸ்.எம்.எம். இஸ்மாயில், கிட்டத்தட்ட அணி மாறி முடித்திருந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. அ.இ.ம.காங்கிரஸுக்கும் அதன் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும் தெரியாமல், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்குச் சம்மதித்த இஸ்மாயிலுக்கு, சுகாதாரப் பிரதியமைச்சர் பதவி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றும், இந்த நிலையில், இஸ்மாயிலின் இந்தத் துரோகம் குறித்து அறிந்து கொண்ட ரிஷாட் பதியுதீன், உடனடியாக பசில் ராஜபக்‌ஷவைத் தொடர்புகொண்டு, அந்த முயற்சியைத் தடுத்தார் எனவும், இதனையடுத்து, “நீங்கள் அணி மாறுவதென்றால், உங்கள் கட்சியுடன் வாருங்கள்” என்று கூறி, இஸ்மாயில் திருப்பி அனுப்பப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகித்த இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்தவர். அவருடைய அந்தப் பதவிக் காலத்தில் ஏராளமான ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் உள்ளன. அவை தொடர்பான விசாரணைகள், தற்போதும் நடந்து வருகின்றன. உபவேந்தராக இஸ்மாயில் பதவி வகித்த காலத்தில், உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க இருந்தார். இதன்போது, இவர்கள் இருவருக்குமிடையில் நெருக்கமான உறவு ஏற்பட்டிருந்தது. அதேபோன்று, அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்மாயிலுக்கும் இடையிலும், ஒரு நெருக்கம் உள்ளது. ஹிஸ்புல்லாவின் ‘மட்டக்களப்பு கம்பஸ்’இல், மிக முக்கிய பதவியொன்றில் இஸ்மாயில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில், இஸ்மாயிலுக்குத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தீர்மானித்த போது, “கொடுக்க வேண்டாம்” என்று, கட்சிக்குள்ளும் வெளியிலுமிருந்தும் ரிஷாட் பதியுதீனிடம் ஏராளமானோர் கூறியிருந்தனர். அவ்வாறு வழங்கினால், எஸ்.பி. திஸாநாயக்க, ஹிஸ்புல்லா ஆகியோருடன் இருக்கும் உறவைப் பயன்படுத்தி, இஸ்மாயில் கட்சி மாறி விடுவார் என்று, அப்போதே பலர் கிட்டத்தட்ட ‘ஆரூடம்’ தெரிவித்திருந்தனர்.

ஆனாலும், இஸ்மாயிலின் சொந்த ஊரான சம்மாந்துறைக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வழங்குவதாக ரிஷாட் பதியுதீன் வாக்குறுதி வழங்கியிருந்தமையாலும், கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறையிலிருந்து இஸ்மாயில் போட்டியிட்டமையின் காரணமாகவும், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, ரிஷாட் பதியுதீன் வழங்கினார்.

கட்சி மாறச் சென்ற இடத்தில் திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், சில நாள்கள் தலைமறைவாக இருந்தாரெனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வாரத்தின் பின்னர், ரிஷாட் பதியுதீனுடைய வீட்டுக்கு இஸ்மாயிலைச் சிலர் அழைத்து வந்தனர். இதனையடுத்து, மூடிய அறையொன்றுக்குள் இஸ்மாயிலுடன் ரிஷாட் பதியுதீன் பேசினாரென அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள்ளும் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில், எவர் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் கட்சி தாவலாம் என்கிற அச்சம் உருவானதை அடுத்தே, அந்தக் கட்சித் தலைவர்கள் இருவரும், தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, “உம்றா” எனும், சமய வழிபாட்டில் ஈடுபடப் போவதாகச் சொல்லிக் கொண்டு, சவூதி அரேபியாவின் மக்கா நகர் சென்றனர். அங்கு கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் தலைமைகளால் ‘ஹோட்டல் காவலில்’ வைக்கப்பட்டிருந்தனர் என்பதுதான் உண்மை நிலைவரமாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில், மக்காவில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இருந்த படங்களும், இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசுவது போன்ற படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. இதனையடுத்து, இலங்கை அரசியலரங்கில், பாரிய முஸ்லிம் கூட்டணியொன்று உருவாகப் போவதாகவும் கதைகள் பிறந்தன. இது தொடர்பில் பலரும், தத்தமது கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்தத் தொடங்கினர்.

உண்மையாகவே, ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர், மக்காவில் சந்தித்துப் பேசிய எந்தவொரு தருணத்திலும், இரண்டு கட்சிகளும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பேசவில்லை என்று அறிய முடிகிறது. அவர்கள் அங்கிருந்த போது, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த நிலைவரத்தை அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து எவ்வாறு கையாள்வது என்பது பற்றி மாத்திரம்தான், ஹக்கீம், ரிஷாட் ஆகியோர் பேசியிருந்தனர்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற கட்சி தாவும் விளையாட்டில், முஸ்லிம் உறுப்பினர்கள் சிக்கிக் கொள்ளவில்லை என்கிற ஒரு ‘தோற்றப்பாடு’, அரசியலரங்கில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இது ஒரு ‘மாயத் தோற்றம்’ என்பதை, எத்தனை பேர் அறிவார்களோ தெரியவில்லை.

மறுபுறமாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில், எவ்வகையான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டாலும், அரசியலில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூடு தணியப் போவதில்லை. நிறைவேற்றுத் துறைக்கும் சட்டவாக்கத்துறைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகார இழுபறி, தொடரத்தான் போகிறது. இதில் சிக்கித் தவிக்கப் போவது மக்கள்தான்.

ஏற்கெனவே, டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி, மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பமானது, இந்த நிலைவரத்தில் மேலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். வறுமையின் பிடிக்குள் மக்கள் சிக்கித் தவிக்க நேரிடும்.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு, இங்கு வெளிநாடுகள் மூக்கு நுழைக்கத் தொடங்கியுள்ளன. இதுவும் ஆபத்தானதாகும்.

இன்னொருபுறம், இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பாரிய நிதி மோசடி எனக் கூறப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியை, இந்தச் சந்தடியில் மக்கள் மறந்து விடுவார்களோ என்கிற அச்சம் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாமலுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கையில் நிதியமைச்சு இருந்த போதுதான், அந்த மோசடி நடந்தது என்பதையும், இந்த இடத்தில் மீளவும் ஒருமுறை பதிவு செய்து வைத்தல் அவசிமாகிறது.

கூட்டிக்கழித்துப் பார்க்கையில், தற்போதைய நிலைவரமானது, அரசியல் ரீதியானதொரு பங்கத்தை நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. நல்லாட்சி செய்யப்போவதாக வந்தவர்கள், நாட்டை ‘நாறடித்து’ கொண்டிருக்கின்றார்கள். நாற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, நம்மில் பலர் மூக்கைப் பொத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளோம். ஆனால், அது ஒருபோதும் தீர்வாக இருக்கப் போவதில்லை.

நாற்றத்தை ஏற்படுத்தும் ‘அசிங்கங்களை’ துப்புரவு செய்வதே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். அதற்கு, ‘அசிங்கங்களை’ முதலில் நாம் அடையாளம் காண வேண்டும்.

(பொருள் விளக்கம்: பங்கம் – அவமானம்)

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (13 நொவம்பர் 2018)

Comments