மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு?

🕔 October 31, 2018

– அஹமட் –

ரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கூடி, தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருந்தது.

உண்மையாகவே, இந்த உயர்பீடக் கூட்டத்துக்கு முன்னர், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – இந்தியாவில் இருந்த நிலையில், அங்குள்ள ஊடகங்களிடம் பேசிய போதே, பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கருத்துக்களைத்தான் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகுதான், மு.காங்கிரசின் உயர்பீடம் கூடியது. இதன்போது, தமது கட்சித் தலைவர் – யாருக்கு ஆதரவான மனநிலையில் இருக்கின்றார் என்பது, உயர்பீட உறுப்பினர்களுக்குத் தெரிந்திருந்தது.

தலைவருக்கு மாற்றமான கருத்தைக் கூறினால் – அது எடுபடாது என்றும், அவ்வாறு மாற்றுக் கருததுக் கூறுகின்றவர்களுக்கு கட்சிக்குள் ‘வெட்டு’ விழும் என்பதும், உயர்பீட உறுப்பினர்களுக்கு தெரியும். அதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில், ரணிலுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானத்துக்கே அனைவரும் தலையாட்டி விட்டு வந்தனர்.

ஆனாலும், மு.காங்கிரசின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உயர்பீட உறுப்பினர்களுக்கும் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதில் விருப்பமில்லை என அறிய முடிகிறது.

கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த மனநிலை பற்றி, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு தெரிய வந்துள்ளதாகவும், அதனையடுத்து அவர் பதட்டமான மனநிலையில் காணப்படுவதாகவும், உட்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இன்றைய தினம், மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்த ரஊப் ஹக்கீம், அவர்களிடம்; “தலைவரின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட மாட்டோம்” என்று, உறுதியெடுத்திருக்கிறார்.

மட்டுமன்றி, அவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதி பெற்றுக் கொண்டபோது, எடுக்கப்பட்ட படத்தையும், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில், மு.கா. தலைவர் பதிவிட்டிருக்கிறார்.

என்றாலும், தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது,  ஹக்கீமுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை; அவர் ஒருவித அச்சத்தில் இருக்கிறார் என்று, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

மு.கா. தலைவருக்கு ஏன் இந்த அச்சம்?

பயப்புடுடிறியா குமாரு?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்