பொலிஸ் வேட்டை; 04 மணி நேரத்தில் 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

🕔 September 14, 2015
Traffic police - 01– பழுலுல்லாஹ் பர்ஹான் –

கா
த்தான்குடி பொலிஸ் பிரிவில் சுமார் 04 மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போக்குவரத்து சட்டங்களை விதிகளை மீறிய 152 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதென, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி துஷார் ஜெயலால் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களை தடுத்து,வீதிப் போக்குவரத்து சட்ட விதிகளை அமுல்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலும் – கடந்த வெள்ளிக்கிழமை, இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்கவே, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும், மேற்படி நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை வீதியில் நடத்திய சோதனையின் போது, தலைக்கவசம் அணிந்து செல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 141 பேரும், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகனக் காப்புறுதி இல்லாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய 10 பேரும், போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரொருவருக்கும் எதிராக, சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந் நடவடிக்கைகளுக்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மேலதிக போக்குவரத்துப் பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தலைக்கவசம் அணித்து செல்லாமல் மோட்டார் சைக்கில் செலுத்திய 141 பேரில் அதிகமானோர், வெள்ளிக்கிழமைகளில் ஜூம்மா தொழுகைக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்