தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ

🕔 September 14, 2015
Sajeeth - 001– அஷ்ரப் ஏ. சமத் –

லங்கையில் 15 தொடக்கம் 20 இலட்சம் குடும்பங்கள் வீடுகளின்றி உள்ளன. இவர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து,  பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும், கஸ்டப்படுகின்றனர், இவ்வாறான  வீடற்றோர் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதமந்திரியும் என்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.

பத்தரமுல்ல – செத்சிரிபாயவிலுள்ள வீடமைப்பு அமைச்சில், இன்று திங்கட்கிழமை காலை 5.00 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்ற பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே, அமைச்சர் சஜீத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“எனது தந்தை மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச,  இந்த நாட்டில் 10 லட்சம், 15 லட்சம் வீட்டுத் திட்டங்கள் என, நாடுபூராகவும் வீடுகள் அமைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் கிராமோதயம், செவன மற்றும் கம் உதாவ போன்ற வீடமைப்புக் கிராமங்களை உருவாக்கினார். அத்துடன் 2000 ஆம் ஆண்டளவில் ‘யாவருக்கும் புகலிடம்’ என்ற  இலக்கை நோக்கிச் சென்றாா். ஆனால், அவா் மறைந்த பின்னர் – அந்த இலக்கை அதன் பின்னர் வந்த வீடமைப்பு அமைச்சா்களால் அடைய முடியவில்லை.

ஆனால் தற்பொழுது நகரங்கள், கிராமங்கள் தோறும் 25 லட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் பொறுப்பினை முன்னெடுக்குமாறு  பிரதமரும் ஜனாதிபதியும் என்னிடம் கூறியுள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தில், வீடமைப்பு அமைச்சினை நான் பாரமெடுத்த கடந்த 06 மாத காலத்துக்குள் 35 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அடுத்த டிசம்பருக்குள் இந்த வீடுகள் நிறைவு செய்யப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்படும்.’சகலருக்கும் செவன’ என்ற திட்த்தின் கீழ், மறைந்த ஜனாதிபதியின் வீடமைப்புத்திட்டங்கள் என்னால் முன்னெடுக்கப்படும்.

எனது அமைச்சின் அதிகாரிகள் என்னோடு ஒத்துழைத்து, மக்களின் வீட்டுப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவ வேண்டும். இந்த அமைச்சில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம், மக்களை அலைக்கழித்தல் போன்ற செயல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.

கடந்த 100 நாள் அரசில்  பிரதியமைச்சா் அமீா் அலியுடன்  இணைந்து அமைச்சின் வேலைத்திட்டங்களை எவ்வித தடங்கலுமின்றி முன்னெடுத்தேன். அதே போன்று ஸ்ரீ.ல.சு.கட்சியின் இந்திக்க பண்டார  பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்த தேசிய அரசில் அரசியல், கட்சி, நிறம், மதம், இனம், பாகுபாடுகளின்றி சகல இன மக்களுகளையும் ஒரே சமமான முறையில் கவனித்து எனது அமைச்சின் பொறுப்புக்களை முன்னெடுப்பேன்.

அத்துடன்  வீட்டுப் பிரசினைகளைக் கண்டறிய, ஒவ்வொரு பிரதேச, மாவட்ட மட்டத்திலும், நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படும். அத்துடன் ஒக்டோபர் 05ஆம் திகதி நடைபெறவுள்ள உலக குடியிருப்பு தினத்தினை முன்னிலைப்படுத்தி, பல்வேறு வீடமைப்பு வேலைத்திட்டங்கள் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.Sajeeth - 002

Comments

புதிது பேஸ்புக் பக்கம்