மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

🕔 October 11, 2018

னாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

முதலில் தற்போதுள்ள அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஜனாதிபதி மைத்திரி பிரித்தெடுத்துக் கொண்டு வரட்டும். பிறகு, இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசலாம் என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர் கூறியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் இன்று வியாழக்கிழமை இரவு ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் நடைபெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட பலர்; இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தும் யோசனைக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டதாக அறியமுடிகிறது.

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியில் வந்தால், அடுத்த கட்டம் பற்றி பேசலாம். அதற்கு முன்னர் எதையும் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை.

சுதந்திரக் கட்சி வெளியே வராமல், மைத்ரியின்  அரசியல் நகர்வுகளை நம்பக் கூடாது. எனவே, சுதந்திரக் கட்சியினர் முடிவு எடுக்கும் வரை காத்திருப்போம்” என்று இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)

Comments