நாஜிமை மீண்டும் உபவேந்தராகக் கொண்டு வரும் பொருட்டு, சட்டத்துக்கு முரணான கையெழுத்து வேட்டை: ஆசிரியர் சங்கம் கண்டனம்

🕔 August 2, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை, மீண்டும் அதே பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராகக் கொண்டுவரும் நோக்குடன், குறித்த பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட கல்வியலாளர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தில் கையெழுத்துச் சேகரிப்பதாகவும், இந்த நடவடிக்கையை தாம் கடுமையாகக் கண்டிப்பதாகவும் தென்கிழக்குப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கத்தின் கடிதத் தலைப்பில், அதன் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே, மேற்படி கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு, வாக்கெடுப்பின் மூலம் மூன்று விண்ணப்பதாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் உபவேந்தர் நாஜிமும் ஒருவராவார்.

மேற்படி மூவரில் ஒருவரை புதிய உபவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ள நிலையிலேயே, நாஜிமை புதிய உபவேந்தராக நியமிக்குமாறு கோரி – கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையில், பல்கலைக்கழகத்திலுள்ள சிலர் ஈடுபட்டுள்ளளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் – குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

‘தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக வருவதற்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் தனது பலமான ஆதரவை வழங்கும் என்று, கடந்த மே மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற எமது சங்கத்தின் விசேட பொதுக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆசிரியர் சங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு மாற்றமாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உபவேந்தர் நாஜிமுக்கு ஆதரவாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சில சிரேஷ்ட கல்வியலாளர்கள், கையெழுத்து வேட்டை மேற்கொள்வதாக எமக்கு தெரியவந்துள்ளது.

கலை – கலாசார, வர்த்தக – முகாமைத்துவ, இஸ்லாமிய கற்கைகள் – அறபுமொழி மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்தவர்களிடம் இவ்வாறு கையெழுத்துகள்கள் பெறபட்டபோது; பேராசிரியர் நாஜிம் மீண்டும் உபவேந்தரானால், தற்போது கையெழுத்திடுகின்றவர்களுக்கு ஆதரவாக அவர் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சைக் கடமையிலிருந்த – தற்காலிக உதவி விரிவுரையாளர்களிடமும், சட்டத்துக்கு முரணான வகையில் இவ்வாறு கையெழுத்துக்கள் பெயறப்பட்டுள்ளன. இதன்போது, இரண்டாவது தடவையாகவும் உபவேந்தராக நாஜிம் வருவாராயின், மேற்படி தற்காலிக உதவி விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிற பொய்யான வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரேயொரு சட்டரீதியான ஆசிரியர் சங்கத்தினுடைய தீர்மானத்துக்கு முரணாக, இவ்வாறு நாஜிமை ஆதரித்துக் கையெழுத்துக்கள் திரட்டப்படுகின்றமையானது நெறிமுறைக்கு முரணான செயலாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்’.

இந்த அறிக்கையின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் நாஜிம் – களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையிலேயே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு கடந்த முறை தெரிவானார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்