ஆப்கானிஸ்தானில் சந்தைகளை உருவாக்குமாறு, இலங்கைக்கு அழைப்பு

🕔 August 1, 2018

ப்கானிஸ்தானில் மூன்று ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள எண்ணெய் எரிவாயு கனியவள வைப்புக்கள் இருப்பதாகவும், அந்த வளங்களை இலங்கை வர்த்தகத் துறையினர் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும்,  இலங்கைக்கான ஆப்கானிஸ்தானிய தூதுவர் முனீர் கயாஷி தெரிவித்தார்.

“உலர் பழங்கள், நெய்யப்பட்ட தரை கம்பளங்கள், பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த கற்கள் உள்ளடங்கிய ஆப்கான் உற்பத்திப் பொருட்களை பல்வேறு நாடுகளில் விரிவாக சந்தைப்படுத்துவதற்கான திறந்த வான்வழி பாதைகளுக்கான  புதிய கொள்கையொன்றை உருவாக்கியுள்ளோம். மேலும், ஆப்கானிஸ்தானில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளடங்களான ட்றில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரும்பு, செம்பு மற்றும் தங்கம் உள்ளிட்ட கனியவள பொருட்களும் எமது நாட்டில் உண்டு” என்றும் தூதுவர் கூறினார்.

“இவ்வாறான கனியவள இருப்புக்கள்  நூற்றாண்டு காலமாக இருக்கின்றன. அவற்றுக்கு பிரமாண்டமான கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் உலகளாவிய ரீதியிலான பல்தேசிய கம்பனிகள் இவற்றை நாடி வருவது எமது நாட்டை பொறுத்தவரையில் அதிக செலவீனமாகும். ஆகவே, இந்த பிராந்தியத்திலுள்ள ஆப்கானிஸ்தானின் அயல் நாடுகள்  எமது நாட்டுக்கு இந்த முயற்சிகளுக்காக வருவது செலவீனங்களை குறைக்கும் என்பதால், அவற்றை வரவேற்கின்றோம்.

ஆப்கானிஸ்தானுக்கு இலங்கை வர்த்தகர்களையும், நிறுவனங்களையும் வருகை தருமாறு நாங்கள் அழைப்புவிடுக்கின்றோம். தேவை ஏற்படும் பட்சத்தில் இதில் ஆர்வமுள்ள இலங்கை நிறுவனங்கள் முதலில் எமது நாட்டுக்கு வந்து அதற்கான சாத்திய கூறுகளை ஆராய முடியும். இலங்கை சுரங்க தொழிலாளர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். தற்போது இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் சாதாரன நிலையிலேயே உள்ளன. இலங்கையானது இந்த வர்த்தகத்தை மேலும் பலப்படுத்தி வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் தூதுவருடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறுகையில்;

“வர்த்தக திணைக்களத்தின் கூற்றுக்கமைய ஆப்கான் – இலங்கை இருதரப்பு வர்த்தகம் மிகவும் குறைவானது. எனவே, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக வளர்ச்சியை பிரமாண்டமாக அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்ததுடன், ஆப்கானிஸ்தான் தூதுவரின் அழைப்பையும் வரவேற்றார்.

“ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் மொத்த வர்த்தகம் கடந்த வருடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு குறைவாகும். அதாவது, 820ஆயிரம் அமெரிக்க டொலரையே எட்டியிருந்தது. அத்துடன் எமது ஏற்றுமதியானது 700 ஆயிரம் அமெரிக்க டொலராக இருந்தது. 2016ம் ஆண்டில் 630ஆயிரத்திற்கு சற்று அதிகமாகவே இருந்தது” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

“இந்த பெறுமானங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், புதிதாக  வர்த்தகத்தை கட்டியெழுப்ப இது நல்ல தருணம்” என்றார். ஆப்கானிஸ்தானின் கனிமப் பொருட்கள் அகழ்வு துறையில் இலங்கை வர்த்தகர்களையும், கம்பனிகளையும் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுத்தமைக்காக தானும், தனது அமைச்சின் அதிகாரிகளும் வரவேற்பதாகவும் இது ஒரு நல்லதொரு செய்தியென தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

எமது நாட்டின் அகழ்வு துறையின் பொறிமுறையானது மிகவும் சிறியதாக இருந்தபோதும் எங்களது புவிசார்ந்த அளவீடுகள் சுரங்க முகாமைத்துவம் ஆகியவை சிறப்பான மட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், உங்களது அழைப்புக்கு இந்த துறையுடன் நேரடி கட்டமைப்பு சாராத துறைறசார் அனுபவமுள்ள நிறுவனங்கள் செவிசாய்க்கும் என்றார்.

ஆப்கானிஸ்தானுக்கான இலங்கையின் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், செய்தித் தாள்கள் உட்பட அச்சுத் தொழில் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியானது 2015ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016, 2017ம் ஆண்டில் 68 சதவீதமாக அதிகரித்துள்ளதெனவும், ஆனால், ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கையின் ஏற்றுமதியானது புறக்கணிக்கதக்கது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் முதலீட்டாளர்களை ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்யக்கூடிய வகையிலும் ஆப்கானிஸ்தானின் வர்த்தக சம்மேளனத்தை சந்திக்கக்கூடிய வகையிலான ஆலோசனைகளை தாங்கள் வழங்குவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்