நிகழ காத்திருக்கும் அதிசயம்

🕔 June 5, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம்  அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது.

புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும்.

தொடங்கிய கதை

முஸ்லிம் அரசியலரங்கில், தேசியப்பட்டியல் என்பது துரும்பாகவும் வியாபாரப் பண்டமாகவும் பயன்படுத்தப்பட்ட வரலாறுகள் அதிகமாகும். 1989ஆம் ஆண்டு, என்.எம். புகார்தீன் என்பவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதிலிருந்து, இந்த ‘வியாபாரம்’ தொடங்குகிறது.

“1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, முஸ்லிம் காங்கிரஸின் நிதித் தேவைகளுக்காக புகார்தீன் ஹாஜியாருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது” என்று, முஸ்லிம் காங்கிரஸில் அப்போது முக்கிய பதவி வகித்தவரும், அரசியல் ஆய்வாளருமான இனாமுல்லாஹ் மஸீஹுத்தீன் ஒரு தடவை, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதியிருந்தமை இந்த இடத்தில் நினைவுகொள்வதற்குப் பொருத்தமானதாகும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், முதன்முறையாகப் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்டது 1989ஆம் ஆண்டாகும். அப்போது, அந்தக் கட்சியின் தலைவராக எம்.எச்.எம். அஷ்ரப் பதவி வகித்தார்.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ‘ஏழை’க் கட்சியாக இருந்ததாகக் கூறுவார்கள். அதனால், தேர்தல் செலவுகளை அப்போது எதிர்கொள்வதற்கு, முஸ்லிம் காங்கிரஸ் கஷ்டங்களை எதிர்கொண்டது.

எனவே, செல்வந்தரான புகார்தீன் ஹாஜியார் என்பவரிடம் கட்சியின் தேர்தல் செலவுகளுக்காக நிதியுதவி பெறப்பட்டதாகவும், அதற்கு உபகாரமாகவே, அப்போது முஸ்லிம் காங்கிரஸூக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, புகார்தீன் ஹாஜியாருக்கு வழங்கப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றனர்.

முஸ்லிம் அரசியல் ‘சந்தை’யில், தேசியப்பட்டியல் என்கிற வியாபாரம் இப்படித்தான் ஆரம்பமானது. ஆனாலும், அத்தோடு அந்த வியாபாரம் முற்றுப் பெறவில்லை என்கிற விமர்சனம் அல்லது குற்றச்சாட்டுகள் பாரியளவில் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அடையாளத்துக்கான முயற்சி

நாடாளுமன்றில் தற்போது 21 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். இது எம்.எச்.எம். நவவி, ராஜிநாமாச்  செய்வதற்கு முன்னரான கணக்காகும்.

தேர்தல் காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்,
ஐ.தே.கட்சி தனக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை ஒன்றை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வழங்கியது. அதையடுத்து, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எச்.எம் நவவியை அ.இ.ம.காங்கிரஸ், அந்தப் பதவிக்கு 2015ஆம் ஆண்டு நியமித்தது.

இந்தநிலையில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக் கொண்டமைக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நவவி, தன்னுடைய பதவியை மே 23ஆம் திகதியன்று ராஜிநாமாச் செய்தார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எம்.எம் இஸ்மாயில் என்பவரை நியமிப்பதற்கு, அ.இ.ம.காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் கட்சிகளுக்கு, அம்பாறை மாவட்டமானது பிரதான அரசியல் களமாகும். அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து, அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகள் – தேசிய ரீதியான கவனிப்புகளைப் பெறுவதில்லை. காரணம், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் மிகப்பெரும்பான்மையாக வாழுகின்றனர். எனவே, அரசியல் அதிகாரங்களை அங்கு தக்கவைத்துக் கொள்கின்ற கட்சிகள்தான், ‘முஸ்லிம்களின் தேசியக் கட்சி’ எனும் அடையாளத்தைப் பெறுகின்றன.

வாக்குறுதி

அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலரங்கில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் வரை, முஸ்லிம் காங்கிரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைத்தன. அதேதேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், முதன்முறையாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.காங்கிரஸ், சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 33 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும், அந்தக் கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 1,500 வாக்குகள் குறைவால், அந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

இருந்தபோதும், அ.இ.ம.காங்கிரஸூக்குக் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றை, அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவேன் என்று, அந்தக் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியொன்றை வழங்கியிருந்தார்.

அதற்கிணங்க, அம்பாறை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவருக்கு, நவவி இராஜிநாமாச் செய்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில், மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இஸ்மாயிலுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள இஸ்மாயிலின் சொந்த ஊரான சம்மாந்துறைப் பிரதேச முக்கியஸ்தர்களும் இந்த ஒப்பந்தத்தில் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ளனர். அ.இ.ம.காங்கிரஸின் ஊடாகத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொண்ட பின்னர், அந்தக் கட்சிக்கு விசுவாசமாக நடக்க வேண்டும் என்றும், பதவியைப் பெற்றுக் கொண்டு, கட்சி மாறக் கூடாதெனவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மேற்படி, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் இஸ்மாயில் என்பவர், கடந்த பொதுத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார். இவர்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமாவார்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இஸ்மாயில் வெற்றி பெற்றிருந்தாலும், அவரால் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியாது என, அப்போது சர்ச்சைக்குரிய கருத்தொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர், தான் வகித்த உபவேந்தர் பதவியை இராஜிநாமாச் செய்திருக்க வேண்டிய இஸ்மாயில், வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், இராஜிநாமாச் செய்தமையின் காரணமாகவே, அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது என்று அப்போது கூறப்பட்டது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இது குறித்து அப்போது பேசியிருந்தார். “தேர்தலில் இஸ்மாயில் வெற்றி பெற்றாலும், அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. அதையும் தாண்டி, அந்தத் தேர்தல் மூலம் இஸ்மாயில் நாடாளுமன்றம் செல்வாராயின், எனது காதை அறுத்துஎறிவேன்” என்று பகிரங்க மேடையொன்றில் சவால் விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், மு.கா தலைவரின் அந்தச் சவாலுக்கும், முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், தற்போது தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ளமைக்கும் இடையில் தொடர்புகள் எவையும் கிடையாது.

அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இந்த நிலையிலேயே, அ.இ.ம.காங்கிரஸும் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது. இன்னொருபுறம், சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கின்ற நிலையில்தான், அதே ஊரைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறுகிய காலத்தில், முஸ்லிம் காங்கிரஸின் பிரதான அரசியல் களமான அம்பாறை மாவட்டத்திலே, அ.இ.ம.காங்கிரஸ் ஆழக் காலூன்றத் தொடங்கியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் மூலமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளை அ.இ.ம.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றில் நிந்தவூர் பிரதேச சபை, மு.கா வசமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள இறக்காமம் பிரதேச சபையில், பிரதித் தவிசாளர் பதவியையும் மக்கள் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இந்தச் சபையும் முன்னர் மு.கா வசமிருந்ததாகும்.

இவ்வாறானதோர் அரசியல் சூழ்நிலையில்தான், அம்பாறை மாவட்டத்தில் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் மக்கள் காங்கிரஸ் களமிறக்கத் தீர்மானித்திருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, மக்கள் காங்கிரஸின் இந்த நகர்வுகள் மு.காவுக்கு மேலும் அச்சுறுத்தலாகவே அமையும்.

எந்தவோர் அரசியல் அதிகாரமும் இன்றி, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்த உள்ளூராட்சி சபைகளை, அ.இ.ம காங்கிரஸ் கைப்பற்றியுள்ள நிலையில், அந்தக் கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிடைக்கும்போது, அதன் பலமும் வெற்றி இலக்குகளும் இன்னும் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்துக்கு மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக பேச்சுகள் எழுத்தபோது, அதைத் தமக்கு வழங்குமாறு அம்பாறை மாவட்டத்திலுள்ள அந்தக் கட்சியின் சில முக்கியஸ்தர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருந்தபோதும், அரசியல் கணக்குகளை மிக நுணுக்கமாகப் போட்டுப் பார்த்த பின்னர்தான், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த, முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்குத் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதென, ரிஷாட் பதியுதீன் தீர்மானித்திருக்கின்றமையை விளங்கிக் கொள்ள முடிகிறது.

இவையொருபுறம் இருக்கத்தக்கதாக, அம்பாறை மாவட்டத்தை இலக்கு வைத்து, முஸ்லிம் கட்சிகள் மேற்கொண்டு வருகின்ற போட்டி அரசியல் காரணமாக, அந்த மாவட்டத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தேர்தல் மூலமாகப் பெறப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், தேசியப்பட்டியல் மூலமாக வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவரும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸூக்கு உள்ளனர்.

இந்தநிலையில், மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அம்பாறை மாவட்டத்துக்குக் கிடைக்கும் போது, அங்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரிக்கும். ஆனாலும், இதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு, என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்பது கேள்விக்குரியதாகும்.

அதிசயம்

கடந்த காலங்களில், தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பங்கு வைப்பதென்பது, முஸ்லிம் அரசியலரங்கில் இலகுவான காரியமாக இருக்கவில்லை. குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய பிளவுகள் ஏற்படுவதற்கு, தேசியப்பட்டியல் விவகாரம் பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது.

அதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்களிடம், அதனை மீளப்பெற்றுக் கொள்வதிலும் மு.கா படாதபாடு பட்டுவிட்டது.

ஆனால், அ.இ.ம. காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்ட எம்.எச்.எம். நவவி, இந்த விடயத்தில் கனவானாக நடந்து காட்டியிருக்கிறார்.

தனது கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேட்டுக்கொண்டமைக்கிணங்க, மாறு செய்யாமல், பதவியைத் துறந்து கொடுத்திருக்கும் நவவியின் நேர்மை பாராட்டுக்குரியதாகும்.

பெற்றுக் கொண்டவர்கள் ‘வெட்டி’க் கொண்டோடுவதும், வாக்குக் கொடுத்தவர்கள் வாக்கை நிறைவேற்ற முடியாமல் திணறுகின்றமையுமே  அநேகமாகப் பழக்கப்பட்டுப்போன ‘தேசியப்பட்டியல்’ விவகாரமாகும்.

இந்த விவகாரத்திலும் விதிவிலக்காக, அவ்வப்போது சில அதிசயங்களும் நிகழாமலில்லை.

நவவி இராஜிநாமா செய்ததும், அதையெடுத்து ரிஷாட் அம்பாறைக்குக் கொடுக்கவிருப்பதும் அதிசயங்களில் சிலவாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (05 ஜுன் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்