இனவாதத்தின் ‘கால்’கள்

🕔 February 27, 2018

– மப்றூக் –

நாய்க்கு எந்த இடத்தில் அடித்தாலும் கால்களைத்தான் தூக்கும் என்பது போல, முஸ்லிம்களுடன் பேரினவாதிகளுக்கு என்னவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் முதலில் தாக்குவது பள்ளிவாசல்களாகவே இருக்கின்றன.

அந்தவகையில், அம்பாறை நகரிலும் நேற்றிரவு பேரினவாதிகள் தமது ‘கால்’களைத் தூக்கியிருக்கின்றனர்.

முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதற்காகவே, சிங்கள பேரினவாதிகள் சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களை கைவசம் வைத்திருக்கின்றனர்.

– சிங்களவர்கள் முஸ்லிம்களின் ஹோட்டலில் வாங்கிய கொத்து ரொட்டியில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து விட்டார்கள்.

– முஸ்லிம்களின் உடுப்புக் கடைகளில் சிங்களப் பெண்கள் ஆடை மாற்றுவதை, படம் எடுத்து விட்டார்கள்.

போன்றவை, இனவாதிகளின் கைகளிலுள்ள ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களில் பிரதானமானவையாகும்.

முஸ்லிம்களுடன் பிரச்சினையினை தொடங்குவதற்காக, அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டு தேவையாக இருக்கிறது. அந்தக் குற்றச்சாட்டு – சிங்கள மக்களை அதிகம் உணர்ச்சிவசப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அதனை மனதில் வைத்து தயார் செய்யப்பட்டவைதான் மேற்படி ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களாகும்.

அம்பாறை நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள், எதேற்சையாக நடந்தவை என்று நம்புகின்றவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அனைத்தும் முன்கூட்டி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நாசகாரச் செயல்களாகும்.

காசிம் ஹோட்டலுக்குச் சென்று கொத்து ரொட்டி வாங்கியவர்கள், வழமை போல் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்து, அதில் கலக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். ஹோட்டல்காரரை சுற்றி வளைக்கிறார்கள். “நீ இதில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்தை கலந்தாய் அல்லவா” என்று கேட்கிறார்கள். ஹோட்டல்காரர் அச்சத்தில் உறைந்து போகிறார். “எனக்குத் தெரியாது” என்கிறார். ஆனால், அவர்கள் விடுவதாக இல்லை. அவர்களின் கேள்விக்கு ‘ஆம்’ என்று சொல்லாமல் விட்டால், அடித்துக் கொன்று விடுவார்கள் என்கிற நிலை. ஹோட்டல்காரர் “ஆமாம்” என்கிறார். வேட்டை ஆரம்பிக்கிறது.

காசிம் ஹோட்டல் தாக்கப்படுகிறது. ஹோட்டலில் இருந்தவர்களும் தாக்கப்படுகிறார்கள். அங்கிருந்தவாறே இனவாதிகள் – தங்கள் சகாக்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுக்கின்றனர். சற்று நேரத்தில் இரண்டு பஸ்கள், வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பாரிய கும்பலொன்று வந்திறங்குகிறது.

நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது, தாக்குதலுக்குரிய கும்பலைத் தயார் செய்து விட்டுத்தான், காசிம் ஹோட்டலில் பிரச்சினை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, துல்லியமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. உண்மையில் இது காசிம் ஹோட்டல்காரர்களுடன் ஏற்பட்ட – தற்செயல் பிரச்சினை மட்டும்தான் என்றால், அனைத்துத் தகராறுகளும் அங்கேயே முடிந்திருக்க வேண்டும். ஆனால், இனவாதிகளின் இலக்குகள் அகன்றதாக இருந்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பி, அம்பாறை நகரிலிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களையெல்லாம் தாக்கினார்கள். அப்போது அகப்பட்ட முஸ்லிம்களையும் கடுமையாக அடிக்கின்றனர். கும்பல் பள்ளிவாசலை நோக்கிச் செல்கிறது.

அம்பாறை நகரிலுள்ள ஒரேயொரு பள்ளிவாசல் அதுதான். அந்தப் பள்ளிவாசல் பழைமையானது. அம்பாறையில் முஸ்லிம்களும் இருக்கின்றார்கள் அல்லது இருந்தார்கள் என்பதை நிரூபிப்பதற்கான வரலாற்று ஆதாரம் -அந்தப் பள்ளிவாசலாகும். அதனால், கண்களுக்குள் விழுந்த தூசிபோல், சிங்கள இனவாதிகளுக்கு அந்தப் பள்ளிவாசல் உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஏற்கனவே, அந்தப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான பின் பகுதிக் காணியை இனவாதிகள் அபகரித்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசலை நேற்றிரவு நெருங்கிய இனவாதக் கும்பல், பள்ளிவாசல் சுற்று மதிலின் ஒரு பகுதியை உடைத்து வீழ்த்தினார்கள். பிறகு, பள்ளிவாசலின் கண்ணாடி ஜன்னல்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். அப்படியே பள்ளிவாசலுக்குள் புகுந்த அவர்கள், அங்கிருந்த புனித குர்ஆன் பிரதிகளையெல்லாம் கொண்டுவந்து தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

இந்த நாசகாரச் செயல்களெல்லாம் நடந்து முடியும் போது அங்கிருந்த ஒரு வேனும், மோட்டார் சைக்கிளொன்றும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டதில், அவை முற்றாக எரிந்து போயின. இன்னும் சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தக் காடைத்தனங்கள் பல மணி நேரங்களாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், அதனைத் தடுப்பதற்கு அங்கு ‘மருந்து’க்கும் பொலிஸார் வரவில்லை. மோட்டார் சைக்கள்களில் தலைக்கவசம் அணியாமல் வருகின்றவர்களைப் பிடிப்பதற்காக, திருடனைப் போல் ஒளிந்திருக்கும் போக்குவரத்துப் பொலிஸாரும், சம்பவம் நடந்த நேரத்தில், சொல்லி வைத்தால் போல், காணாமல் போயிருந்தார்கள்.

இந்தச் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கும் அம்பாறை பொலிஸ் நிலையத்துக்கும் இடையில், சில நிமிட நடைதூரம்தான் உள்ளது. ஆனாலும், சம்பவம் நடந்தபோது, அந்த இடத்துக்கு பொலிஸார் வரவேயில்லை. அளுத்கம, ஜின்தோட்ட உள்ளிட்ட பகுதிகளிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடக்கும் தருணத்தில் பொலிஸார் மாயமாய் மறைந்து போயிருந்ததாக, பாதிக்கப்பட்ட மக்கள் கூறியிருந்தமையும் இந்த இடத்தில் நினைவுகொள்ளத்தக்கது. வழமையாக, இவ்வாறான சம்பவங்களின் போது, எல்லாம் நடந்து முடிந்த பிறகு வருவதைப்போலவே, நேற்றிரவும் அம்பாறை நகருக்கு பொலிஸார் வந்து சேர்ந்தனர்.

இந்த அட்டூழியங்கள் அனைத்துமே – துல்லியமாகத் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை நிரூபிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ஆனாலும், இதுவரையில் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இது தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவுள்ள பிரதமரும் இதுவரை வாய்திறக்கவில்லை.

முஸ்லிம் சமூகமும் – இந்த சம்பவம் குறித்து  இரண்டு – மூன்று நாட்களுக்கு மட்டுமே பொங்கிக் கொண்டிருக்கும். பிறகு தங்கள் அரசியல் தலைவனுக்காக சமூக வலைத்தளங்களில் வக்காலத்து வாங்குவதில் பரபரப்பாகி விடும்.

யானையை தங்கள் கவட்டுக்குள் கட்டி வைத்திருப்பதாகக் கூறி, தேர்தல் காலத்தில் வீராய்ப்புப் பேசித் திரிந்த சோனக யானைப் பாகன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களாலான ஓர் அறிக்கையினை மட்டும் வெளியிட்டு விட்டு, தமது கடமையினை முடித்துக் கொள்வார்கள்.

இன்னுமொரு வேட்டைக்காக இனவாதிகள் காத்திருக்கும் இடைவெளியை, அமைதி நிலவும் காலமாக சில அப்பாவிகள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்