கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பில், மு.காங்கிரஸ் இன்று ஆராய்கிறது

🕔 February 13, 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

ல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் எழுந்துள்ள  தொங்கு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது சுயேச்சைக் குழு, தங்களுடன் இணைந்து கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைத்து மேயர் பொறுப்பை ஏற்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை விடுத்த அழைப்பை சாாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் நிராகரித்துள்ள நிலையிலேயே இந்த ஆலோசனைக் கூட்டம் கொழும்பில் இன்று நடைபெறுகிறது.

இதனை விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்  உறுதிப்படுத்தினார்.

கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வட்டார ரீதியாக வெற்றி பெற்றவர்களையும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பிலும் பட்டியல் வேட்பாளர்களாக யார், யாரைத் தெரிவு செய்வது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது என்றும் பிரதியமைச்சர் ஹரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுவதனையும் அவர்  நிராகரித்தார்.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில்  வெளிவந்த தகவல்களை முஸ்லிம் காங்கிரசும் முற்றாக நிராகரித்துள்ளது. கூட்டாட்சி நடத்துவது தொடர்பில் சாய்ந்தமருது சுயேச்சைக் குழுவுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாகவும் ஏனைய எந்தவொரு கட்சியுடனும் இது தொடர்பில் கலந்துரையாடவில்லை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை மாநகர சபையில் நிலையான ஆட்சி ஒன்றை தங்களது கட்சி ஸ்தாபித்த பின்னரே மேயர்  பெயரிடப்படவுள்ளார் என்றும் அந்த விட்டாரங்கள் தெரிவித்தன.

இது இவ்வாறிருக்க, கட்சியில் வெற்றி பெற்ற பலரும் தங்களுக்கே மேயர் பதவி வழங்க வேண்டுமென கட்சித் தலைமையைக் கேடடுள்ளதாகவும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட வட்டாரங்கள் உறுதிபடத் தெரவித்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்