மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

🕔 February 6, 2018
மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம்சாட்டினார்.

காத்தான்குடி, நூறாணியா வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றின் சதித்திட்டத்தால் காத்தான்குடிக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டது. அன்று நான் தோல்வியடையவில்லை காத்தான்குடி மண்தான் தோற்கடிக்கப்பட்டது.

கடந்த தேர்தலில் ‘ஹிஸ்புல்லா வெற்றி பெற்றால், மஹிந்த பிரதமர் ஆகுவார்’ என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உள்ளிட்ட அனைவரும், என் மீது மஹிந்த சாயம் பூசியே பிரசாரம் செய்தனர். அதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர். இருந்தும் எனக்கும் சுமார் 27ஆயிரம் வாக்குகளை வழங்கினார்கள்.

நான் தோல்வியடைந்த போதும், மைத்திரிபால சிறிசேனவினால் எனக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டு ராஜாங்க அமைச்சும் வழங்கப்பட்டது. அதனால் என்மீது மஹிந்த சாயம் பூசியவர்களின் வாதத்தை அல்லாஹ் பொய்ப்பித்தான். நான் மைத்திரியின் பிரிதிநிதி என்பது – நான் தோல்வியடைந்ததனாலேயே மக்களுக்கு உணர்த்தப்பட்டது.

அன்று எம்மீது மஹிந்த சாயம் பூசியவர்கள் இன்று ‘ஊழல் ஊழல்’ என்று கத்தித் திரிகிறார்கள். அதற்கான பதிலையும் நாங்கள் ஆதாரபூர்வமாக வழங்கியுள்ளோம். ஆனால், நாங்கள் முன்வைத்துள்ள பதிலுக்கு அவர்களால் மாற்றுக் கருத்து வழங்க முடியாது திக்கு முக்காடியுள்ளனர்.

அதனால் வெறும் மழுப்பல்களால் மக்களை ஏமாற்றி புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர். அதுதான் நாங்கள் இஸ்லாத்துக்கு முரணானவர்களோடு தொடர்பு வைத்துள்ளோம் என்று.

காத்தான்குடி என்ற ஊரில் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாத்திரமே எம்மால் முன்னோக்கிப் பயணிக்க முடியும். நாங்கள் பிரிந்து சண்டைப்பிடிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எம்மால் அதிகாரமுள்ள நகர சபையொன்றை கட்டியெழுப்பவும் முடியாது.

மார்க்கப் பிரச்சினைகளையும், இயக்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலுக்குள் கொண்டு வரவேண்டிய அவசியம் கிடையாது. இது காத்தான்குடி நகரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான விடயம். நாங்கள் பிரிந்து செயற்பட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

விசேடமாக தற்போதுள்ள தேர்தல் முறையில் நாங்கள் பிரிந்து செயற்பட்டால், எமக்கு அதிகாரமுள்ள நகர சபையொன்றை உருவாக்க முடியாது போகும். புதிய தேர்தல் முறையானது எமக்கு பாதிப்பாகவே அமைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள வடக்கு மாகாணத்துக்கு வெளியே உள்ள பிரதேசங்களில் இம்முறைத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றி தனியாக ஆட்சியமைக்க முடியாது. அவ்வாறான நிலை காத்தான்குடி நகர சபையில் ஏற்பட்டு விடக் கூடாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்