அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

🕔 February 3, 2018

– முன்ஸிப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கிடையில் இப்போதே, யார் தவிசாளர் என்கிற போட்டி ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகிறது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு மொத்தமாக 18 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர். இந்தத் தொகையில் 10 உறுப்பினர்களைப் பெறுகின்ற கட்சிதான் தனித்து ஆட்சியமைக்க முடியும். இல்லையென்றால், தொங்கு ஆட்சிதான்.

ஒரு கதைக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கின்றது என வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், தவிசாளர் யார்? அல்லது எந்தப் பிரதேசத்துக்கு அந்தப் பதவி செல்லும் என்கிற கேள்விகள், இப்போதே அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளன.

கனவுத் தவிசாளர்கள்

அட்டாளைச்சேனையில் போட்டியிடும் மு.கா. வேட்பாளர்களில் ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ரி. ஆப்தீன் ஆகியோருக்கு தவிசாளர் ஆசை உள்ளது. இவர்கள் இருவரும் தலா இரு தடவை – பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அதிலும், ஆப்தீன் இரண்டு தடவையும் தேர்தலில் வெற்றி பெற்று நேரடியாக தெரிவானவர்.

அதேபோன்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த மு.கா. வேட்பாளர் நபீல் என்று அழைக்கப்படுகிற அமானுல்லாவும் தவிசாளர் கனவில் மிதந்து வருகிறார். தனது கனவு குறித்து வெளிப்படையாகவும் பேசி வருகிறார். இவரும் இரண்டு தடவை பிரதேச சபை உறுப்பினராக பதவி வகித்தவர். அதில் ஒரு முறை பிரதித் தவிசாளராகவும் இருந்துள்ளாளர்.

இந்த நிலையில், பாலமுனை வட்டாரத்தில் மு.கா. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டும்தான் வெளிப்படையாக தவிசாளர் பதவி குறித்து பேசவில்லை போல் தெரிகிறது.

ஆக, யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.கா. வெற்றி பெற்றால், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக இவர்களில் எவர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதுதான் பெறுமதி மிக்க கேள்வியாகும்.

மிகச் சரியாக கணித்தால், மேற்சொன்ன எவருக்கும் தவிசாளர் பதவி கிடைக்காது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

எப்படியென்று பார்ப்போமா?

அதிகாரச் சமன்பாடு

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீருக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இன்னுமொருவருக்கு பிரதேச சபைத் தவிசாளர் எனும் அரசியல் அதிகாரத்தினையும், மு.காங்கிரஸ் இப்போதைக்கு வழங்காது. அப்படி வழங்கினால், ஏனைய ஊர்கள் மு.கா. தலைமை மீது கோபம் கொள்ளும்.

ரஊப் ஹக்கீமுக்கு இப்போதிருக்கின்ற அரசியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதென்பதே பெரும் காரியமாக உள்ளது. இந்த நிலையில், புதியதொரு பிரச்சினையை உருவாக்குவதற்கு, அவர் விரும்ப மாட்டார்.

எனவே, தவிசாளர் போட்டியிலிருந்து அட்டாளைச்சேனை ‘அவுட்’டாகி விடும்.

அப்படியாயின் ஒலுவில், பாலமுனை ஆகிய இரண்டு ஊர்களும்தான் தவிசாளர் போட்டிக்கு தகுதி காணும்.

இந்த இடத்தில், சில அனுமானங்களைப் போட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

கணக்கு

பாலமுனையில் மயில் சின்னத்தில் போட்டியிடும் அன்சிலை தோற்கடிக்க வேண்டும் என்பது, மு.கா. தலைவரின் இலக்காக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு காலகட்டத்தில் மு.கா. தலைவரின் அன்புக்குரியவராக இருந்தவர் அன்சில். இப்போது கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், ஹக்கீமுடைய வண்டவாளங்கள் அனைத்தினையும் பகிரங்க மேடைகளில் – புட்டுப் வைத்து வைக்கின்றார்.

எனவேதான், அன்சிலைத் தோற்கடிக்கும் இலக்குடன் இருக்கின்ற மு.கா. தலைவர், அதற்காகத்தான் அம்ஜத் மௌலவியை மு.கா. சார்பில் களமிறக்கியுள்ளார்.

மு.கா. சார்பில் போட்டியிடுவோரில் ஒருவரைத் தவிர மற்றெல்லோரும், வேட்பாளர் சந்தர்ப்பத்தினை கேட்டுப் பெற்றவர்களாவர். ஆனால், அம்ஜத் மௌலியை மட்டும்தான் – ஹக்கீம் கடுமையாக முயற்சித்து வேட்பாளராக்கியுள்ளார்.

அம்ஜத் மௌலவியை வேட்பாளராகச் சம்மதிக்கச் செய்வதற்காக, கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் – பாலமுனைக்கு ஹக்கீம் வந்து போன கதைகள் பற்றி நாம் அறிவோம்.

அம்ஜத் மௌலவி படித்த ஒருவர்; தனது கலாநிதி பட்டத்துக்கான கற்கையினை மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு கவனத்துக்குரிய தகவலாகும்.

எனவே, அம்ஜத் மௌலவியை வேட்பாளராகக் களமிறக்க நடைபெற்ற பேச்சுக்களின் போது, ஹக்கீம் சில வாக்குறுதிகளை அல்லது வரப்பிரசாதங்களை வழங்க முன்வந்திருப்பார் என்பதை அனுமானிக்க முடிகிறது.

அப்படி என்ன வாக்குறுதி என்று கேட்கிறீர்களா?

வாக்குறுதிகள்

பாலமுனையைப் பொறுத்த வரையில், நடைபெறவுள்ள தேர்தலில் அன்சிலை தோற்கடிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். அன்சில் இளவயதுக்காரர் என்றாலும், 15 வருடங்களுக்கும் மேலான அரசியல் அனுபவம் உள்ளவர். இரண்டு முறை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் பதவி வகித்துள்ளார். இப்போது அன்சிலுக்கு அரசியல் என்பது – தண்ணிபட்ட பாடாகும். சட்டத்தரணியாகவும் உள்ளார்.

ஆனால், அம்ஜத் மௌலவி – அரசியலில் ஒரு கத்துக் குட்டி. ரஊப் ஹக்கீம் தனது சூதாட்டத்தில், அன்சிலுக்கு எதிரான துரும்பாக பயன்படுத்துவதற்காக அம்ஜத் மௌலவியை தெரிவு செய்துள்ளார்; அவ்வளவுதான்.

எனவே, பாலமுனையில் அன்சில் போட்டியிடும் வட்டாரத்தில் களமிறக்கப்பட்டுள்ள அம்ஜத் மௌலவி தோல்வியடைவார் என்பதை, ஹக்கீமும் அனுமானிக்காமல் இருக்க மாட்டார். ஆகவே, “தேர்தலில் தோற்றுப் போனாலும், வீதாசாரப் பட்டியலூடாக உங்களை உறுப்பினராக்கி, தவிசாளராகவும் ஆக்குவேன்” என்கிற உத்தரவாதமொன்றினை அம்ஜத் மௌலவிக்கு ஹக்கீம் வழங்கியிருக்கக் கூடும்.

இன்னொரு புறம், படித்தவர்களையும் கோட்டுச் சூட்டுப் போட்டவர்களையுமே எப்போதும் விரும்புகின்ற குணாம்சத்தை ஹக்கீம் கொண்டவர். “அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கையை மேற்கொள்வது, சாமானியமான விடயமல்ல” என்று, சின்னப்பாலமுனையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஹக்கீம் சிலாகித்துப் பேசியதை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு, நான் சொல்வதை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியுமும்.

ஆக, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னம் வெற்றி பெற்றால், அடுத்த தவிசாளர் அம்ஜத் மௌலவிதான்.

ஹக்கீம் எடுக்கும் இந்த முடிவினை ஒலுவிலைச் சேர்ந்த நபீல் தரப்பு (நபீல் வெற்றி பெற்றால்) கடுமையாக எதிர்க்கும். ஆனால், அது குறித்து ஹக்கீம் அலட்டிக் கொள்ள மாட்டார். கடந்த பிரதேச சபை ஆட்சிக் காலத்தில் – நபீல் செய்த ‘தில்லாலங்கடி’ மற்றும் ‘திகிடுதத்தோம்’ பற்றிய தகவல்கள் எக்கச் சக்கமாக உள்ளன. அவற்றினைக் கூறி, நபீலை ஹக்கீம் மட்டம் தட்டி விடுவார். ஆனாலும்,  அப்படியே விட்டு விடாமல்  பிரதித் தவிசாளர் பதவியை நபீலுக்கு வழங்கி, ஒலுவிலின் தலையினையும் ஹக்கீம் தடவிக் கொடுக்க முயற்சிக்க கூடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்