காடைத்தன அரசியலுக்கு உயிர் கொடுக்க வேண்டாம்; உதுமாலெப்பை அணியினரை, தோற்கடித்து வெல்வோம்

🕔 January 31, 2018

– எம்.ஐ. இஸ்பான் (அட்டாளைச்சேனை) –

ட்டாளைச்சேனை பிரசேத்தில் அரசியலை சாக்கடை நிலைக்கும், சட்டித்தனத்தின் உச்சத்துக்கும் எடுத்துச் சென்றவர்களில் முதன்மையானவரும், முக்கியமானவரும் யார் என்கிற கேள்வியொன்று முன்வைக்கப்பட்டால், அதற்கான விடை, எம்.எஸ். உதுமாலெப்பை என்பதாகவே இருக்கும்.

தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அமைச்சராக இருந்த போது, அந்த அதிகாரத்தினையும், தான் மாகாண சபை அமைச்சர் என்கிற மமதையினையும் பயன்படுத்தி, அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பை – மிக மோசமான அரசியல் காட்டுத் தர்பாரினை நடத்தி வந்தமையினை மக்கள் மறந்து விடக் கூடாது.

அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பை சண்டித்தன அரசியல் செய்தமையினால்தான், மாற்றுத்தரப்பு அரசியல் அணியினரும் சண்டியர்களை அரசியலுக்குள் தலைமை தாங்கக் கொண்டு வர நேர்ந்தது என்கிற உண்மையும் ஒரு பக்கம் உள்ளது.

போலி அஹிம்சை

இப்போது, அதாஉல்லாவும் உதுமாலெப்பையும் அதிகாரங்கள் எவையுமற்று இருக்கின்றமையினால்தான், அட்டாளைச்சேனையில் உதுமாலெப்பையும் அவரின் ஆட்களும் அஹிம்சை அரசியல் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர், அவர்கள் செய்த அட்டகாசங்கள் பற்றி மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் எதிர்க்கட்சியினரின் அலுவலங்களை அடித்து உடைப்பது, தீ வைப்பது, தங்கள் அலுவலகங்களை தாங்களே சேதப்படுத்தி விட்டு, அதனுடன் எள்ளளவும் தொடர்பில்லாதவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்து, அவர்களை மறியலில் அடைப்பது என்று, உதுமாலெப்பையும், அவரின் ஆட்களும் அட்டாளைச்சேனையில் காட்டிய அட்டகாசத்தை மக்கள் ஒரு போதும் மறந்து விட்டு, இந்த உள்ளுராட்சித் தேர்தலில், அவரின் சகோதரன் ஜவ்பருக்கு வாக்களித்து விடக் கூடாது.

பொய்யான பொலிஸ் முறைப்பாடுகள்

உதுமாலெப்பை அணியினர் அதிகாரத்தில் இருந்தபோது, தங்களுக்கு எதிரானவர்கள் மீது பொய்யாக பொலிஸ் முறைப்பாடு செய்ததால், நமது ஊரிலுள்ள மரியாதைக்குரிய பலரும் பாதிக்கப்பட்டமை பற்றி, அட்டாளைச்சேனை மக்கள் மறந்து விட்டு, உதுமாலெப்பை தரப்பினருக்கு வாக்களித்தால், அது – ஊருக்குச் செய்யும் துரோகமாகவே பார்க்கப்படும்.

தமக்கு பிடிக்காத இளைஞர்கள் மீது, பொலிஸில் பொய் முறைப்பாடு செய்வதற்கு, உதுமாலெப்பை தரப்பில் தலைமை தாங்குகின்றவர், தற்போது இக்ரஹ் வட்டாரத்தில் போட்டியிடும் உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பர் ஆவார்.

பொலிஸில் பொய் முறைப்பாடு செய்யும் பொருட்டு, தமக்கு பிடிக்காத இளைஞர்களின் பெயர்ப்பட்டியலை இந்த ஜவ்பர்தான் தயார் செய்வார். இவர்கள் பொய்யாக செய்த முறைப்பாட்டின் காரணமாக, பொலிஸ் நிலையத்துக்கும் நீதிமன்றத்துக்குமாக அலைந்து – தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தொலைத்த இளைஞர்களின் கண்ணீருக்கு உதுமாலெப்பையும், அவரின் தம்பி ஜவ்பரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஓட்டிய ரத்தம்

அதற்கிடையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினராக வேண்டும் என்கிற ஆசை, உதுமாலெப்பையின் தம்பி ஜவ்பருக்கு இப்போது வந்திருக்கிறது. இந்த அதிகாரத்தை உதுமாலெப்பையின் சகோதரர் ஜவ்பவருக்கு நாம் வழங்குவது, நம்மை நாமே அசிங்கப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பானதாகும்.

உதுமாலெப்பை தரப்பினர் ஊரில் செய்த அட்டகாசங்களையும், ஊரில் ஓட்டிய ரத்த வெள்ளத்தையும் நினைத்துப் பார்ப்பவர்கள், அவரின் சகோதரருக்கு வாக்களித்து, மீண்டும் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க – ஒருபோதும் துணிய மாட்டார்கள்.

இவர்கள் பல்லிழந்த பாம்பாக இருப்பதால்தான் இப்போது கொஞ்சம் அடங்கிக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு அரசியல் அதிகாரத்தினை மீண்டும் வழங்கினால், அவர்களின் அடாவடித்தனங்களுக்கு நாம் பயந்து திரிய வேண்டிய நிலை, மீண்டும் ஏற்படும்.

எனவே, காடைத்தன அரசியலை அட்டாளைச்சேனையிலிருந்து துடைத்தெறிய வேண்டுமாயின், உதுமாலெப்பை அணியினரை தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்