புலிகள் மீதான தடையை நீக்கச் சொல்லி, கூட்டமைப்பினர் கடிதம் தந்தால், ஜனாதிபதியிடம் அதைச் சமர்ப்பிப்பேன்: அங்கஜன் எம்.பி.

🕔 January 31, 2018
– பாறுக் ஷிஹான் –
மிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தமது கட்சி விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது எனவும், தற்போது விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்றும் கடிதம் ஒன்றினை எழுதி கையொப்பமிடுவார்களாயின், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் நேற்று செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைக் கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும் என, வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டின் போது, ‘நித்திரையா தமிழா’ எனும் பாடலை ஒலிபரப்பியமை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பியதாகவும், அங்கஜன் ராமநாதன் இதன்போது குறிப்பிட்டார்.

“விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு என அதில் அங்கம் வகிக்கும் சிலர் கூறுகின்றனர், மேலும் சிலர் விடுதலைப்புலிகள் எமது கட்சியை உருவாக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்; ‘இறுதி யுத்தத்தின் போது ராணுவத்தினர் மாத்திரம் போர்க் குற்றம் செய்யவில்லை விடுதலைப்புலிகளும் போர்க் குற்றம் செய்தார்கள்’ என்று கூறுகின்றார்.

ஆகவே புலிகள் மீதான பயங்கரவாதத்தடைச்சட்டத்தினை நீக்குவதற்கு கூட்டமைப்பினர் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

குறித்த கூட்டத்தில் நீண்ட காலமாக காணியின்றி வசிக்கும் அப்பகுதி மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்த அங்கஜன் ராமநாதன், நிரந்தரமான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்