மு.காங்கிரஸின் சாய்ந்தமருது கூட்டம் மீது தாக்குதல்; மின் விளக்குகளை அணைத்து மக்கள் எதிர்ப்பு

🕔 January 15, 2018

– முன்ஸிப் அஹமட்,  நியாஸ் (சாய்ந்தமருது) –

சாய்ந்தமருது பிரதேசத்தில் மு.காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற போது கைகலப்புகள் இடம்பெற்றதோடு, கடுமையான கல் வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

குறித்த கூட்டம் நடைபெற்ற போது, அங்கு திரண்ட பெருமளவானோர், அந்தக் கூட்டத்துக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், கூட்டம் நடைபெற்ற பகுதியைச் சுற்றியிருந்த பொதுமக்கள், தமது வீட்டு மின் விளக்குகளை அணைத்து, தங்களின் எதிர்ப்பினை தெரியப்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போதே கைகலப்பு இடம்பெற்றதாகவும், கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதன்போது அங்கு பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போதும், அந்த எதிர்ப்பு நடவடிக்கையினைக் கட்டுப்படுத்துவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரியவருகிறது.

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் கலைக்கப்பட்டதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டதாக நம்பப்படும் நிலையிலேயே, மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் பிரசாரக் கூட்டத்துக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மு.காங்கிரஸ் வேட்பாளர்களின் குறித்த கூட்டம் ஆரம்பித்ததில் இருந்து, முடியும் வரை, இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தது.

நேற்றிரவு, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் பாலமுனையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போதும், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கல் வீச்சுத் தாக்குதுல் நடத்தப்பட்டிருந்தது.

அதேவேளை, பாலமுனைக் கூட்டத்துக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் வருகை தருவதற்கு சற்று முன்பாக, அங்கு பாரிய கை கலப்புச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்