‘மெலியோய்டொசிஸ்’ நோயினால், ஆலையடிவேம்பில் 05 பேர் மரணம்; ஒரு மாதத்தில் பதிவு: வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிர் தெரிவிப்பு

🕔 December 21, 2017

– மப்றூக் –

‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோய் காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தினுள் 05 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று பேரும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இருவருமாக, ஐந்து பேர், இந்த நோயின் காரணமாக இறந்துள்ளனர்.

மண்ணின் மேற்பகுதியில் காணப்படும் பக்ரீரியாக்கள் மூலம், இந்த நோய் ஏற்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் கூறினார்.

இதுகுறித்து, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம். இஸ்மாயில் தெரிவிக்கையில்;

“மரணித்தரவர்கள் ஐவரும் வழமைக்கு மாறான காய்ச்சலினாலும், சுவாச நோயினாலும் பாதிக்கப்பட்டனர்.

மரணம் சம்பவித்தவர்களுக்கு ‘மெலியோய்டொசிஸ்’ நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். இது தொடர்பில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

‘மெலியோய்டொசிஸ்’ எனும் நோயினால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரல் செயலிழப்பதாலேயே, இவ்வாறான மரணம் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்