அதாஉல்லாவுக்கு இந்தத் தேர்தல் முள்ளிவாய்க்காலாக மாறும்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம்

🕔 August 12, 2015

Thavam - 01


முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தத்தளித்தது போன்று, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவும் அவரின் அக்கரைப்பற்று ஆதரவாளர்களும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினரும், அக்கரைப்பற்று பிரதேச தேர்தல் குழுத்தலைவருமான ஏ.எல். தவம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலில் பிரபாகரனும் அவரின் ஆட்களும் மாண்டதைப்போல்,  எதிர்வரும் 17ஆம் திகதியுடன் அதாஉல்லாவின் அரசியல் அதிகாரம் முடிவுக்கு வரவுள்ள போதிலும், முள்ளிவாய்க்காலில் மக்களுக்கு நிகழ்ந்த அனர்த்தம் போல், அக்கரைப்பற்று மக்களுக்கு நிகழாமல் – தான் பாதுகாப்பேன் என்றும் தவம் கூறினார்.

அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. ஹோட்டலில் நேற்று செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,

“முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், மு.காங்கிரசின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றார். அதேபோல், 2004 ஆம் ஆண்டு கல்முனையில் எச்.எம்.எம். ஹரீசையும் சம்மாந்துறையில் அன்வர் இஸ்மாயிலையும் தன்னுடன் இணைத்தக் கொண்டதால் வெற்றி பெற்றார். பின்னர், 2010 ஆம் ஆண்டு கல்முனையில் அதிபர் பசீரையும் சம்மாந்துறையில் அன்வர் இஸ்மாயிலுடைய ஆதரவாளரான எம்.எல்.எம். அமீ்ரையும் தனது வெற்றிக்காக வேட்பாளராக்கினார்.

இப்படி, காலத்துக்கு காலம் – முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை, தான் வெற்றி பெறுவதற்காக, வேட்பாளராக்கிக் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ்காரர்களின் வாக்குகளைப் பெற்றுதான், நாடாளுமன்றத்துக்கு அதாஉல்லா தெரிவாகினார்.

ஆனால், இம்முறை அதாஉல்லாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வாக்குகள் கிடைக்காது. அதேவேளை, அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வாக்குகளை மட்டும் வைத்துக் கொண்டு,  முன்னாள் அமைச்சர் நாடாளுமன்றம் செல்லவும் முடியாது. ஆகவே, அக்கரைப்பற்று பிரதேச மக்கள், இத்தேர்தலில் தங்களது வாக்குகளை வீணாடிக்காமல், முஸ்லிம் காங்கிரஸ் வகுத்த திட்டத்திற்கமைவாக வாக்களித்து, மூன்று வேட்பாளர்களுடைய வெற்றியிலும் பங்காளர்களாக வேண்டும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, பிரதம மந்திரியாகி – மீண்டும் முஸ்லிம் மக்களை அடக்கியொடுக்க முயற்சிக்கும் மஹிந்தவையும், அவரின் வெற்றிலைச் சின்னத்தையும் தோற்கடித்து,  கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் நல்லாட்சியையும் தொடர்ந்தும் பாதுகாப்போம்.

அளுத்கம, பேருவளை மற்றும் தம்புள்ள ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளின்போது, கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிம் சமூகம் சார்ந்து எதுவுமே பேசவில்லை. அவர் மௌனியாக இருந்தார்.  முஸ்லிம்ளுக்கு எதிராகச் செயற்பட்ட  பொதுபலசேனவைச் சேர்ந்த ஒருவரைக் கூட கைது செய்யுமாறு, அப்போதை ஜனாதிபதியை அதாஉல்லா கோரவில்லை. தனது நடவடிக்கை காரணமாக, அப்பாடி யாராவது கைதாகியதை அதாஉல்லா நிரூபிப்பாராயின், எனது மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு, அரசியலில் இருந்து உடனடியாக விலகிக் கொள்வேன்.

அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் அதாஉல்லாவின் அரசியல் நடவடிக்கைகள், எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், பெருந்திரளான பொதுமக்கள் எங்களது கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பதைக் கூறலாம். இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி 04 ஆசனங்களை கைப்பற்றி பெரு வெற்றி பெறவுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர்.

வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா உள்ளிட்ட குழுவினரை, அம்பாறை மாவட்டத்தில் தோற்கடிப்பதனூடாக,  முஸ்லிம் சமூகத்தை மஹிந்தவிடமிருந்தும், பொதுபலசேனவிடமிருந்தும் ஏனைய கடும்போக்குவாத அமைப்புகளிடமிருந்தும் பாதுகாக்கவேண்டும். அது நமது கடமையாகும்.

அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதியின் பின் மு.கா. தலைவரினால் அதிகாரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதில் எந்த சந்தேசமும் இல்லை. அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று கூட்டங்களில் எமது தலைவர் கலந்து கொண்டு, இதை உறுதிப்பட தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில், சின்னப்பாலமுனையில் நடைபெற்ற கூட்டத்திலும் அதனைக் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்து தேர்தல் கேட்பதில் எங்களுக்கு எந்தப் பாதகமும் இல்லை. எங்களது வாக்கில் எந்த சரிவுமில்லை. ஆனால் தேசிய காங்கிரஸ் கட்சியின் வாக்குகளில்தான் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குதான் பாதிப்பு ஏற்படும்.

கட்சியின் தீர்மானத்திற்கமைவாகவும், மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காகவும்,  தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நான்  தவிர்ந்து கொள்ள நேரிட்டது.  இதை சிலர் பிழையாக கூறி, எங்களது வாக்குகளை திசை திருப்ப முனைகின்றனர். இக்கதைகளுக்கெல்லாம் முடிவு கட்டுவதற்காக,  தேர்தலின் பின்னர் அதிகாரங்களை வழங்கவுள்ளதாக மு.கா. தலைமைத்துவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது” என்றார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் எம்.எம்.எம்.றிஷாம் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம்.றக்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

– ஊடகப்பிரிவு –

Comments

புதிது பேஸ்புக் பக்கம்