கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு

🕔 October 30, 2017

ட்டார்இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று திங்கட்கிழமை சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான நிலையில்,  நாளை  மாலை நிறைவுபெறவுள்ளது.

நாளைய இறுதி அமர்வில் கட்டார் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேய்க் அஹமட் பின் ஜாஸிம் பின் மொஹமட் அல்தானியும், இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டு முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, றவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பைசர் முஸ்தபா உள்ளடங்கிய இலங்கையின் அரச உயர்மட்ட தூதுக்குழுவினர் கட்டார் நாட்டுக்கு  கடந்த 24ம் திகதி விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது அங்குள்ள அரச தலைவர்களை சந்தித்து, இரண்டு நாடுகளுக்குமிடையே பல்வேறு வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொண்டதுடன், பல துறைகளை மேம்படுத்துவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தனர். இந்த விஜயம் இடம்பெற்று நான்கு நாட்களுக்குள் கட்டார் நாட்டிலிருந்து அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் தலைமையிலான 20பேர் அடங்கிய முன்னணி வர்த்தக தூதுக்குழுவினர் இங்கு வந்திருப்பது, இரண்டு நாடுகளினதும் வர்த்தக பொருளாதார உறவுகளை வெகுவாக மேம்படுத்துமென நம்பப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள கொழும்பு வந்துள்ள இந்த கட்டார் நாட்டுத் தூதுக்குழு, முன்னொருபோதும் இலங்கைக்கு வந்திராத முக்கிய தூதுக்குழுவென கருதப்படுகின்றது. இந்தக்குழுவில் கட்டார் நாட்டின் பல்வேறு நிறுவனங்கள், கட்டார் வர்த்தக சம்மேளனம் மற்றும் சக்தி, வங்கி, உணவு தொடர்பான துறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதிநிதிகளும் இடம்பெறுகின்றனர்.

,இதன்போது வர்த்தகம் முதலீடு சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகியவை தொடர்பிலேயே பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்டார் நாட்டைச்சார்ந்த வர்த்தக சம்மேளனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். இதே வேளை இலங்கையர்கள் பலர் கட்டார் நாட்டில் பல்வேறு தொழில்களை புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

(அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்