கல்முனையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு, ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவிப்பு

🕔 October 30, 2017

– மப்றூக் –

ல்முனை மாநகர சபையினை பிரிப்பதென்றால் 04  உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்றும், கல்முனை மாநகரசபையிலிருந்து சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் பிரிப்பதற்கு – தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனைப் பிரதேசத்தை தமிழர்கள் தமது ஆதிகத்தின் கீழ் கொண்டு வர வேண்டுமென்று முயற்சித்து வரும் நிலையில், கடந்த 17 வருடங்களாக கல்முனையை, தான் பாதுகாத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கல்முனையில் நேற்று ஞாயிறுக்கிழமை திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பேசும் போதே, பிரதியமைச்சர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“கல்முனை பிரதேச செயலகத்தை தமிழர்கள் அபகரித்து விடுவார்கள் என்கிற அச்சம் இருக்கின்றமையினால், அதற்கு தடுப்பு வேலியாக இருக்கின்றேன். மேலும், கல்முனை கரையோர மாவட்டத்தைப் பெற்றெடுத்து, அதன் தலை நகரமாக கல்முனையை ஆக்கும் நோக்குடன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பிரதமரிடம் ஒரு மணித்தியாலம் பேசினேன். இதனையடுத்து, வருகின்ற யாப்பில் கல்முனை கரையோர மாவட்டத்தை உள்ளடக்குவதற்கு அவர் இணங்கியிருக்கின்றார்.

புதிய யாப்பின் மூலம் வடக்கு – கிழக்கை இணைப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு போராடி வரும் நிலையில், வடக்குடன் கிழக்கு இணைய முடியாது என்று நான் கூறியுள்ளதோடு, அதற்காக போராடியும் வருகின்றேன்.

முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் மட்டும் தனியாக, இந்த எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றேன்.

இவ்வாறெல்லாம் செய்த நான், கல்முனையைக் காட்டிக் கொடுத்து விட்டு, கல்முனை மக்களிடம் வாக்குக் கேட்டு வருவேன் என்று கனவிலும் நினைக்காதீர்கள்.

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விடயமாக பைசர் முஸ்தபாவின் அமைச்சரில் கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. அங்கு கல்முனை மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் தலா 05 பேர் இருந்தனர். அங்கு நானும் இருந்தேன். இதன்போது என்னுடைய நிலைப்பாடு என்ன என்று கேட்டார்கள். ‘கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகத்தான் பிரிக்க வேண்டும். தனியாக சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையினை மட்டும் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிக்கக் கூடாது’ என்று நான் சொன்னேன்.

இப்படிக் கூறியமையினால் நேரடியாகவும் அதிகமாகவும் நஷ்டமடையும் அரசியல்வாதி நானாகத்தான் இருக்கின்றேன். நான் இவ்வாறு கூறியமையினால் சாய்ந்தமருதிலுள்ள 18 வாக்காளர்கள் என்னை துரோகியாகப் பார்க்கின்றார்கள். “எங்கள் ஊருக்குக் கிடைக்கவிருந்த உள்ளுராட்சி மன்றத்தினை கடைசி நேரத்தில் ஹரீஸ் எம்.பி – முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் அழுத்தம் கொழுத்து, தடுத்து நிறுத்தி விட்டார்” என்று கூறி, சாய்ந்தமருது மக்கள் என்னை துரோகியாகப் பார்க்கின்றார்கள்.

இந்தக் கல்முனை மண்ணுக்காகத்தான் இவற்றினையெல்லாம் நான் எதிர்கொள்கிறேன்” என்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்