வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

🕔 October 23, 2017

– சோனகன் –

வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி வந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஊடவியலாளர்கள் சிலரின் எழுத்துக்களுக்கும், அந்தப் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரியவருகிறது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கே இந்த நிலைவரத்துக்கு முழுமையான காரணமாகும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டிய செய்திகளையும், முஸ்லிம் பிரதேசங்களில் வீதிகள் சேதமடைந்துள்ள செய்திகளையும் ‘முஸ்லிம் சமூகத்தின் செய்திகள்’ என்கிற அடையாளப்படுத்தல்களுடன் பெரிய படங்களோடு பத்திரிகையில் பிரசுரிக்கும் ஸ்ரீகஜன், அவ்வாறான செய்திகளை எழுதுகின்ற பிராந்திய முஸ்லிம் நிருபர்களுக்கு வீரகேசரி நாளிதழில் அதிக சந்தப்பங்களையும் வழங்கி வருகின்றார்.

அதேவேளை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள், முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுளை வெளிப்படுத்துகின்ற  எழுத்துக்களுக்கு  ஸ்ரீகஜன் கதவடைப்புச் செய்து வருகின்றமை குறித்து பாரியளவிலாள விசனங்கள் முஸ்லிம் ஊடகவியலாளர்களிடம் உள்ளன.

ஸ்ரீகஜனின் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சிக்கு பல உதாரணங்களைக் கூற முடியும். ஆயினும், அண்மைய உதாரணமொன்றினை இங்கு பதிவிடுதல் மிகவும் பொருத்தமாகும்.

ஊடகவியலாளர் நிப்றாஸ்

ஊடகவியலாளர் ஏ.எல். நிப்றாஸ் – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். வீரகேசரி நாளிதழில் உதவி  ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். சிறந்த செய்தியாளருக்கான விருதுகளை வீரகேசரிக்காக இரண்டு முறை பெற்றுக் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில், அரச தொழிலொன்றினைப் பெற்றுக் கொண்ட நிப்றாஸ், வீரகேசரியின் உதவி ஆசிரியர் பதவியிலிருந்து விலகிக் கொண்டு ஊர் வந்தார்.

இந்த நிலையில், வீரகேசரி நாளிதழில் ஒவ்வொரு சனிக்கிழமையும் அரசியல் கட்டுரைகளை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தினை நிப்றாஸ் பெற்றுக் கொண்டார்.  இதற்கிணங்க முழுப்பக்க கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் எழுதி வந்தார். முஸ்லிம்களின் அரசியல் தாகம், அவர்களுக்கான தீர்வுத் திட்டம், முஸ்லிம்களுக்கு அடுத்த சமூகத்தவர்கள் இழைத்த அரசியல் துரோகங்கள் பற்றியெல்லாம் நிப்றாஸ் தனது கட்டுரைகளில் எழுதத் தொடங்கினார்.

வெட்டு ஆரம்பம்

நிப்றாஸினுடைய இவ்வாறான கட்டுரைகளை சிறிது காலம் முழுமையாகப் பிரசுரித்து வந்த வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், பின்னர் நிப்றாசின் கட்டுரைகளை வெட்டிக் குதறத் தொடங்கினார். தமிழ் தரப்புக்கு பிடிக்காத அல்லது தமிழ் தரப்புக்கு பிடிக்காது என்று ஸ்ரீகஜன் நினைக்கும் விடயங்கள்  நிப்றாசினுடைய கட்டுரைகளில் இருந்தால், அதனை வெட்டி விட்டுத்தான் பிரசுரிப்பதற்கு ஸ்ரீகஜன் அனுமதித்து வந்தார்.

ஆனாலும், இதற்காக தனது கட்டுரைகளில் எந்தவித மாற்றங்களையும், நிப்றாஸ் வலிந்து செய்யவில்லை.

ஒரு கட்டத்தில் நிப்றாசினுடைய கட்டுரைகளை வீரகேசரி நாளிதழில் பிரசுரிப்பதை அதன் பிரதம ஆசிரியர் கஜன் நிறுத்தி விட்டார். காரணம் என்னவென்று  நிப்றாஸ் கேட்டபோது, ஒரு போலிக் காரணம் கூறப்பட்டது. அடுத்த வாரமும் நிப்றாஸ் கட்டுரைய எழுதி அனுப்பினார். முந்தைய வாரத்தைப் போலவே கட்டுரை பிரசுரமாகவில்லை.

இப்போது நிப்றாஸ் காரணம் கேட்டார். ‘வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், நிப்றாஸின் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டாம் எனக் கூறி விட்டார், அதனால்தான் நிப்றாஸினுடைய கட்டுரைகளை நிறுத்தும்படி ஆயிற்று’ என்று ஸ்ரீகஜன் காரணம் கூறியிருந்தார்.

முஸ்லிம்களின் அரசியல் குறித்து எழுதி வந்த நிப்றாஸுக்கு, வீரகேசரி நாளிதழில் இவ்வாறு கதவடைக்கப்பட்டமையினை அடுத்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  முக்கியமான முஸ்லிம் ஊடகவியலாளர்களின் எழுத்துக்களை வீரகேசரி புறக்கணிப்பதாக இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுதப்பட்டது. ஆனாலும், ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை.

ஸ்ரீகஜனின் பொய்

“நிப்றாஸின் கட்டுரைகளை வீரகேசரியில் வெளியிட வேண்டாம்” என்று, அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கூறியதாக, வீரகேசரி நாளிதழின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன் கூறியமை, மிகப்பெரும் பொய்யாகும். அந்தப் பொய்யை காலம் உடனடியாகே அம்பலப்படுத்தியது.

வீரகேசரி நாளிதழில் தனது கட்டுரைகளைப் பிரசுரிப்பதற்கு ஸ்ரீகஜன் மறுத்தமையினை அடுத்து , ஞாயிறு வீரகேசரியின் பிரதம ஆசிரியர் ஆர். பிரபாகனுடன் நிப்றாஸ் பேசினார். ஞாயிறு வீரகேசரியில் ஒவ்வொரு வாரமும் – அரசியல் கட்டுரைகளை எழுதுவதற்கான சந்தர்ப்பத்தினை நிப்றாஸ் கோரினார். ஏற்கனவே, முஸ்லிம் அரசியல் தொடர்பான கட்டுரைகளை ஞாயிறு வீரகேசரியில் ஒவ்வொரு வாரமும் ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் எழுதி வந்த போதும், முஸ்லிம் அரசியல் குறித்து கட்டுரைகளை வாராவாரம் எழுதுவதற்கான சந்தர்ப்பத்தினை நிப்ராஸுக்கும் பிரபாகன் வழங்கினார்.

இந்த இடத்தில்தான் ஸ்ரீகஜனின் பொய் பிடிபடுகிறது.

நிப்றாஸின் கட்டுரைகளை வெளியிடக் கூடாது என்று, வீரகேசரி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கூறியிருந்தால், வீரகேசரி நிறுவனத்திலிருந்து வெளிவரும் எந்தவொரு பத்திரிகையிலும் நிப்றாஸின் கட்டுரைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்காது. வீரகேசரி நாளிதழில் நிப்றாஸின் கட்டுரைகளை வெளியிட வேண்டாமென்று கூறிய அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், வீரகேசரி நாளிதழை விடவும் அதிகமாக விற்பனையாகும் ஞாயிறு வீரகேசரியில் நிப்றாஸின் கட்டுரைகளை வெளியிடுவதற்கு நிச்சயமாக அனுமதித்திருக்க மாட்டார்.

எனவே, நிப்றாஸின் கட்டுரைகளை வீரகேசரி நாளிதழில் நிறுத்துவதற்கு முழுமையான காரணம், அந்தப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன்தான் என்பது அம்பலமானது. முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து நிப்றாஸ் எழுதியமையினை பொறுத்துக் கொள்ள முடியாமையினால்தான், நிப்றாஸின் எழுத்துக்களுக்கு வீரகேசரி நாளிதழில் ஸ்ரீகஜன் வேட்டு வைத்தார்.

குரோதம்

இப்படி, முஸ்லிம் சமூகம் தொடர்பில் குரோதத்துடன் செயற்பட்டு வரும் வீரகேசரி நாளிதழை, தினமும் 40 வீதத்துக்கும் குறையாத முஸ்லிம்கள்  விலைகொடுத்து வாங்கிப் படிக்கின்றார்கள் என்பதுதான் இங்கு கவனிப்புக்குரிய விடயமாகும்.

முஸ்லிம்கள் வீரகேசரியைப் புறக்கணித்தால், அந்தப் பத்திரிகை படுத்து விடும் என்கிற உண்மையை தெரிந்து கொண்டுதான், ஸ்ரீகஜன் இந்த துரோகத்தை முஸ்லிம் சமூகத்துக்கும் அதே சமயம் வீரகேசரி நிறுவனத்துக்கும் செய்து கொண்டிருக்கிறார்.

யார் இந்த ஸ்ரீகஜன்? இவரின் பின்னணி என்ன?  இந்த முஸ்லிம் விரோதப் பேர்வழி, வீரகேசரி நாளிதழின் பிரமத ஆசிரியராக எப்படி ஆனார்? என்பது போன்ற கேள்விகளுக்கான விடைகளுடன் அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

(தொடரும்)

நன்றி: ஜப்னா முஸ்லிம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்