தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஜலால்தீனுக்கு, சிறந்த ஆய்வாளருக்கான விருது

🕔 October 23, 2017

தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் ‘உபவேந்தர் விருது – 2017 க்கான, சிறந்த ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்ட, தென்கிழக்கு பல்கலைக் கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் இப் பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம்.  ஜலால்தீன், இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி விருதுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களின் பேராசிரியர்கள், கலாநிதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கமைவாக எட்டு விண்ணப்பங்கள் சகல பீடங்களில் இருந்தும் கிடைத்தாகக் தெரிவிக்கப்படுகிறது.

2016 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் தாம் மேற்கொண்ட ஆய்வுகள், வெளியிட்ட நூல்கள், சர்வதேச, உள்நாட்டு சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பற்றிய சகல விபரங்களும் விண்ணப்பதாரிகளால் இப்பரிசுக்காக சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றில் இருந்து பரிசுக்குரியவரை தெரிவு செய்வதற்காக உபவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் கொண்ட குழு நியமிக்கக்பட்டு, அதன் முடிவுக்கமைவாக, சிரேஷ்ட விரிவுரையாளர் ஜலால்தீன் பரிசுக்குரியவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் 1997ம் ஆண்டில் நடத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான ஆய்வுக் கட்டுரைப் போட்டியிலும் இவர் முதலாம் இடத்தையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அறபு, ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 17க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், மலேசியா, பிரித்தானியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உள்நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(படம்: எம்.எஸ்.எம். ஹனீபா)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்