தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில், ஒரு மணி நேரமாவது ஹக்கீம் செலவிட்டிருந்தால், பிரச்சினையை தீர்த்திருக்க முடியும்: றிசாட் கவலை

🕔 August 23, 2017
கர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக 100நாள் நல்லாட்சியில் இருந்த அமைச்சர் ரஊப் ஹக்கீம், 01 மணி நேரத்தையாவது தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்துக்காக செலவிட்டிருந்தால், அதனை இலகுவில் தீர்த்திருக்க முடியும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.

அமைச்சர் தனது  உத்தியோகபூர்வ முகநூல் வழியாக மக்களின் கேள்விகளுக்கு  நேற்று செவ்வாய்கிழமை இரவு பதிலளிக்கும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை தீர்த்துவைக்குமாறு, இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் ஹக்கீமிடம் பள்ளிவாசல் நிர்வாகம்  பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்தது. ஆயினும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், அந்தப் பிரதேசத்துக்கு பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் ரஞ்சித் அலுவிகாரவுடனும் இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளோம். தம்புள்ளை பள்ளிக்கான காணியையும், பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கான காணியையும் ஒதுக்கீடு செய்வது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிக் காணிக்கு 20 பேர்ச் தருவதாக தெரிவிக்கப்பட்ட போதும், பள்ளி நிர்வாகம் அதன் அளவு பிரமாணத்தை அதிகரித்து தரவேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் சாதகமான முடிவு கிடைத்ததும் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 05 லட்சம் ரூபாவும் வழங்குவதற்கு ஏகமனதாக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புனர்வாழ்வு மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளுக்கிணங்க, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அளுத்கம சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரப்பட்ட தொகை அதிகம் எனவும், அவ்வாறு வழங்கினால் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட ஏனையோர்களுக்கும் இவ்வாறான தொகையை வழங்க நேரிடும் எனவும் சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர். எனினும், இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியிலும் விஷேடமாகவும் கருத்திற்கொள்ளவேண்டிய அவசியம் குறித்து பல அமைச்சர்கள் விளக்கினர்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன , மங்கள சமரவீர, ரஊப் ஹக்கீம், கபீர் ஹாசிம், தயாசிறீ ஜயசேகர, அனுரபிரியதர்சன யாப்பா, ஹலீம் ஆகியோருடன் நானும் இணைந்து இந்த பத்திரத்தை ஏகமனதாக அங்கீகரிக்கவேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினோம்.

மிகவிரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க வழி பிறக்கும் எனவும் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்