ஒன்றிணைந்து செயற்பட வருமாறு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கு, ஹசனலி அழைப்பு

🕔 August 8, 2017
– இர்பான் முகைதீன் –

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, இருப்பிடங்கள் மற்றும் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், இனி நாம் தனிகட்சிகளாக செயற்பட முடியாது என்று தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்தார்.

தூய முஸ்லிம் காங்கிரசின் பொத்துவில் பிரதேசத்துக்கான மத்திய குழுவைத் தெரிவு செய்வதற்கான நிகழ்வு, பொத்துவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தை ஹசனலி கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“நமதுஅரசியல் பிரதிநிதிகள் எல்லோரும், ஒருமித்த கருத்தை முன்வைத்து செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எனவே, நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் செல்வதற்காகவே இப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் சமூகம் இன்று ஆபத்தின் விளிம்பில் உள்ளது. எமது அரசியல் பிரதிநிதிகள் எல்லோரும் இந்த சமூகத்தின் நலனுக்காக கூட்டாக இயங்க அழைப்பு விடுகிறேன்” என்றார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகர்களில் ஒருவரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி உரையாற்றுகையில்;

மு.காங்கிரஸ் தலைவரின் பல சதிகளையும், துரோகங்களையும் பல தருணங்களில் காண நேரிட்டது. அந்த வேளைகளில் கூட, கட்சிக்கு வெளியில் சென்று இன்னொரு கட்சியுடன் நாங்கள் இணையவில்லை.

ஆனால், பெருந்தலைவர் மர்ஹும் அஸ்ரப் உருவாக்கிய கொள்கையும், கட்சியின் யாப்பும், மு.கா.வின் அடையாளமாக மதிக்கப்படுகின்ற ஹசனலியும், மு.கா. தலைவர் ஹக்கீமால் வெளியில் தூக்கி வீசிப்பட்ட போதுதான், அங்கிருந்து வெளியேறினோம். காரணம், இனி அங்கு இருக்க போவது அஸ்ரபின் கட்சியல்ல என்பதனாலாகும்.

எங்களுக்கும் கட்சிக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இன்றும் கூட இன்னொரு கட்சியுடன் நாங்கள் இணையவில்லை. தலைவர் அஸ்ரப்பின் கொள்கைகளை உயிர்ப்பிப்பதற்காகத்தான் தூய முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி பயணிக்கிறோம்” என்றார்.

இதன்போது, தூய முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழுவுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ஐ. ஆதம்லெப்பை, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ. காதர், ஏ.எம்.ஏ. ஹக்கீம் (அதிபர்), எம்.ஏ. ஜௌபர் (ஆசிரியர்) மற்றும் ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர்.எஸ். பாயிஸ் உள்ளிட்ட பலர் தெரிவு செய்யப்பட்டனர்.

தூய முஸ்லிம் காங்கிரசின் மத்திய குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டவரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான ஏ.எம்.எம். தாஜுதீன் அங்கு பேசுகையில்;

“மு.கா. தலைவராக றஊப் ஹக்கீம் இருக்கும் வரை, இந்த சமூகத்தின் அபிலாஷைகள், உரிமைகள் மற்றும் விடுதலை போன்றவற்றினை வென்றெடுக்க முடியாது. அவர் தனக்கான கண்டி – கலகெதர பெருன்பான்மை மக்கள் திருப்தி அடையாத எதையும் செய்ய மாட்டார். அதனால்தான் இறக்காமம் மாணிக்க மடுவில் வைக்கப்பட்ட சிலையினை அகற்றுவதற்கு ஹக்கீம் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

ஹக்கீம் நினைத்தால் அந்த சிலையை அகற்ற முடியும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்துக் கொண்டு, அவர் அதனைச் செய்ய மாட்டார்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்