பேரரசரின் மீள் வருகை

🕔 July 14, 2015

Mabrook 2121Mahinda - 053கைக்குக் கிடைத்த நல்லாட்சி, வாய்க்குக் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற பதற்றமொன்றுடன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது தேசிய அரசியல் அரங்கு.

ஆட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் ஒப்பனைகளுடன் மீண்டும், தனது கூட்டத்தாரோடு களமிறங்கியிருக்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராகப் பதவி வகிக்கும், ஐ.ம.சு.கூட்டமைப்பிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் விசுவாசிகளுக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கப்பட்டிருப்பதானது, நல்லாட்சி ரசிகர்களின் மனதில் பேரிடியை இறக்கி விட்டிருக்கிறது.

இதனால், ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசியலில் ‘வானத்திலிருந்து இறங்கிய ஒரு மீட்பர்’ போல் பார்க்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஒரு சிலருக்கு துரோகியாகி விடுவார் போல் தெரிகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தோற்றவுடன், அவரின் ஆட்டம் முடிந்தது என்றுதான், அவருக்கு எதிரானவர்கள் அனைவரும் நினைத்திருந்தனர். பின்னர், பொதுத் தேர்தலொன்று நடைபெறுமாயின் மஹிந்த ராஜபக்ஷ, அந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்கிற பேச்சு எழுந்தது. அப்படித்தான் அவர் போட்டியிட்டாலும், ஏதாவது ஊர் – பெயர் தெரியாததொரு கட்சியில்தான் போட்டியிட வேண்டும், ஜனாதிபதி தலைமைப் பதவி வகிக்கும் ஐ.ம.சு.கூட்டமைப்பிலோ அல்லது சுதந்திரக் கட்சியிலோ மஹிந்த தலைகாட்ட முடியாது என்று கூறப்பட்டது. கடைசியில் பார்த்தால், மைத்திரி தலைவராக உள்ள ஐ.ம.சு.கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலேயே மஹிந்தவும் அவரின் ஆட்களும் களமிறங்கியுள்ளனர்.

அப்படியென்றால், இடையில் – என்னதான் நடந்தது?

நடந்தது என்ன?

ஊடகங்களும் ஊர்க் கதைகளுமாக ஆளுக்கொன்றைச் சொல்கின்றன. ஐ.ம.சு.கூட்டமைப்புக்குள்ளும் சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஜனாதிபதி மைத்திரி எதுவும் செய்துகொள்ள முடியாத, கையாலாகாத்தனத்துடன் உள்ளார் என்றும், அந்த நிலையைப் பயன்படுத்தி அவருக்கு அழுத்தம் கொடுத்தே, மஹிந்த தரப்பு, தமக்கான வேட்பாளர் நியமனங்களைப் பெற்றுக்கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.

ஐ.ம.சு.கூட்டமைப்பு என்பது, பல அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இந்தக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் பெரிய கட்சியாகும். அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்தான், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்பது கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் உள்ளது. ஆக, சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரி உள்ளார்.   அந்தவகையில்தான், ஐ.ம.சு.கூட்டமைப்பின் தலைவர் பதவியானது ஜனாதிபதி மைத்திரிக்குக் கிடைத்தது.

இன்னொருபுறம் வேறு கதையொன்றும் உள்ளது. சுதந்திரக் கட்சியை ஜனாதிபதி மைத்திரி தலைமையேற்ற பிறகு நடைபெறவுள்ள முதல் தேர்தல் வருகிற பொதுத் தேர்தலாகும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில், தான் தலைமை வகிக்கின்ற கட்சியும், கூட்டணியும் வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான், மைத்திரியின் கட்சித் தலைமைப் பதவியினைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனால்தான், மஹிந்தவும் அவரின் கூட்டாளிகளும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு மைத்திரி ஒத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இதேவேளை, இவை அனைத்துக்கும் மாற்றமான வேறொரு கதையொன்றும் உலவுகிறது. அதாவது, இப்போது எதுவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றனவோ, அவை அனைத்தும் – மைத்திரி மற்றும் அவரின் சகாக்களின் திட்டத்தின் அடிப்படையிலானவையாக இருக்கக் கூடுமென்றும் கூறப்படுகிறது. வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்டு பிரச்சினைகளை ஏற்படுத்திய மஹிந்தவுக்கும் அவரின் குழுவினருக்கும் சந்தர்ப்பத்தினை வழங்குவது. பின்னர், ஐ.ம.சு.கூட்டமைப்பு மற்றும் சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரியின் சகாக்கள், ஐ.தே.க. பக்கம் கழன்று செல்வது.  இதனையடுத்து, ஐ.ம.சு.கூட்டமைப்புக்குள் மஹிந்த மற்றம் அவரின் குழுவினரை தனிமைப்படுத்துவது. பின்னர், ஐ.ம.சு.கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்வரும் தேர்தலில் பெற்றுக் கொள்ளும் நட்டங்கள் அனைத்தினையும் மஹிந்தவின் தலையில் போட்டு, அவரை நாறடிப்பது. இந்தத் திட்டத்தின்படிதான் இப்போது நடக்கும் எல்லாவற்றினையும் மைத்திரி அணி நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் ஓர் அனுமானம் இருக்கிறது.

எல்லாமே திட்டங்கள்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற பிறகு விடுத்த அறிக்கைள் மறக்க முடியாதவை. ஜனாதிபதித் தேர்தலில் தான் தோற்றிருந்தால், தன்னையும் தன் குடும்பத்தையும் மஹிந்த ராஜபக்ஷ மண்ணுக்குள் புதைத்திருப்பார் என்று மைத்திரி தெரிவித்திருந்தார். அந்தளவு தனக்கு கொடுமை செய்கின்ற மனநிலையிலுள்ள ஒருவருக்கு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கின்றார் என்றால், அதற்கு பின்னால் ‘வெற்று’க் காரணங்கள் இருக்க முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?

மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் முக்கிய விசுவாசிகளும் புரிந்ததாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் – மைத்திரி அரசாங்கமானது, போதும் போதும் என்கிற அளவுக்கு போட்டுடைத்து விட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் சண்டியர்களாக இருந்த துமிந்த சில்வா மற்றும் மேர்வின் சில்வா போன்ற அரசியல்வாதிகளுக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை. குறித்த நபர்கள், போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு வேட்புமனு வழங்கவில்லை என்று, மைத்திரி தரப்பு தெரிவித்துள்ளது. அப்படியென்றால் இதற்கு அர்த்தம்தான் என்ன? மஹிந்த ராஜபக்ஷ – அவருடைய ஆட்சியில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் அரசியல்வாதிகளையெல்லாம் பாலூட்டி வளர்த்திருக்கிறார் என்கிற செய்தியை இது சொல்கிறதல்லவா? இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள முடியாதளவு வாக்காளர்கள் இல்லை என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆக, ஐ.ம.சு.கூட்டமைப்பில் மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, கோபித்துக்கு கொண்டு லண்டன் சென்றது. ராஜித்த மற்றும் சம்பிக்க குழுவினர் ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்று, எல்லாமே, ஆம் எல்லாமேதான். மைத்திரி அணியின் மிகத் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளாக இருக்கும் என்கிற நிகழ்தகவுக்கான சாத்தியங்கள் இல்லாமலுமில்லை.

வெற்றிக்கான சாத்தியங்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்தவும் அவரின் அணியினரும், ஆட்சியொன்றினை அமைக்கும் பலத்துடன் வெல்லப் போவதில்லை என்பதுதான் பலரின் வாதமாக உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதை மிக இலகுவாக விளக்கிச் சொன்னார். மிகப்பெரும் அரசியல் அதிகாரத்துடனும் பெருமளவு பணம் புகழுடனும் இருந்தபோது, தன்னுடைய ஜனாதிபதித் தேர்தலிலேயே வெற்றிபெற முடியாத மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி அனைத்தையும் இழந்த நிலையில், ஆட்சியினையொன்றும் பிடிக்க முடியாது என்றார். இது தட்டிக்கழிக்க முடியாத வாதமாகும்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் அணியினரும் வெற்றிபெற்று விடக் கூடாது என்பதில், சிறுபான்மை சமூகங்களும் அவற்றினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சிகளும் முனைப்பாக உள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதியும்  நடைபெறப் போகின்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் சார்பற்று இருப்பதற்கான தீர்மானமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் எனவும் அறிய முடிகிறது. அவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்படுமானால், அது,  ஐ.ம.சு.கூட்டமைப்புக்கும் மஹிந்த குழுவினருக்கும் மேலும் பாதகத்தினை ஏற்படுத்தி விடும்.

நியாயப்படி பார்த்தால், ஐ.ம.சு.கூட்டமைப்புக்கும் அதன் வேட்பாளர்களுக்கும் மைத்திரிபால சிறிசேன தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, மறைமுகமாகவேனும் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்யாமல், வருகிற பொதுத் தேர்தலில் அவர் நடுநிலை வகிப்பாரெனில் அதற்கு அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளல் என்பது அவ்வளவு கடினமாதல்ல. இங்கு மைத்திரியின் நடுநிலை என்பது, மஹிந்தவும் அவரின் குழுவினரும் போட்டியிடுகின்ற ஐ.ம.சு.கூட்டமைப்பு மீதான பிடிப்பின்மையினையே வெளிப்படுத்தி நிற்கும்.

மீள் வரவு

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, மஹிந்தவின் மீள்வரவானது, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியலில் பெரும் வெளிச்சத்தினை ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் போன்றோர், ரணிலைத் தேடிச் செல்லும் நிலையினை உருவாக்கியிருப்பது மஹிந்த ராஜபக்ஷவினுடைய மீள் வருகையாகும். இன்னும் சொன்னால், ரணிலின் பெரு வெற்றியினை மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள்வருகை உறுதிப்படுத்தி விட்டது போலவே தோன்றுகிறது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ – பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் சலுகைகள் அனைத்தினையும் இழந்து விடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் அரசாங்க வசிப்பிடம், அரசாங்க வாகனங்கள், அவற்றுக்கான எரிபொருட் செலவுகள், பெரும் படையணியைக் கொண்ட பாதுகாப்பு, முன்னாள் ஜனாதிபதிக்கான செயலகம், அதற்கான பணியாட்கள், மேலும் இதர செலவுகளுக்கான கொடுப்பனவுகள் என்று ஏராளம் உள்ளன. இவை அனைத்தும், முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் சலுகைகளாகும். ஆனால், முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இவற்றையெல்லாம் வழங்க வேண்டுமென சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை.

எனவே, மேற்சொன்ன சலுகைகள் அனைத்தினையும் – மஹிந்த ராஜபக்ஷ இழக்கும் நிலையொன்றினை அவரே உருவாக்கி விட்டுள்ளார். மேலும், எதிர்வரும் நாடாளுமன்றில் மஹிந்த தரப்பினரால் ஆட்சியொன்றினை அமைக்க முடியாது போகும் பட்சத்தில், சாதாரணமானதொரு உறுப்பினராகத்தான் நாடாளுமன்றுக்குள் அவர் சென்று – வர வேண்டியிருக்கும்.

இப்படியெல்லாம் நடந்தால், அது, பார்ப்பதற்கு மிகவும் பரிதாபகரமானதொரு நிலையாகவே அமையும். அதற்கு அவரைத் தவிர வேறு யார் பொறுப்பாக முடியும்?!

அப்போது வேண்டுமானால், ஏன் இதற்குள் இறங்கினோம் என்று, மஹிந்த ராஜபக்ஷ, தனது மீள் வருகை குறித்து கவலைப்படக் கூடும்.

அதுவரையில், இந்த அரசியல் ஆட்டத்தின் சூடு தணியப் போவதில்லை!

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்